Monday, October 31, 2005

மெர்க்குரிப் பூக்கள்-13 : பாலை

பாலைவன தேசம் என்று அடிக்கடி பேசிக்கொள்கிறோமே.. உருப்படியாக பாலைவனத்தை எத்தனை பேர் பாத்திருப்போம் என்றால் கேள்விக்குறிதான். மஸ்கட், துபாய், கத்தார், பஹ்ரைன் என்று நிறைய தேசங்கள். நிறைய பாலைவனங்கள். எனக்குத் தெரிந்து இங்கு வாழும் (ஓரளவு வசதி இருப்பவர்களில்) இந்தியர்களில் 90 சதவீதத்திற்கு மேல் வாரயிறுதிகளில் வீட்டுக்குள்ளும், லுலு, சிடி சென்ட்டர் போன்ற ஷாப்பிங் மால்-களிலும் அடைந்து கொள்பவர்கள். வெளியே வரச் சோம்பல். அதுவும் பாலைவனம் என்றால் காத தூரம் ஓடிவிடுவார்கள். கடற்கரைக்கு அழைத்தாலே 'இருக்கறது ஒரு நாள் லீவு.. நிறைய வேலை இருக்கு' என்று நழுவி விடுவார்கள்.

அது கிடக்கட்டும். மஸ்கட்டில் அருமையான பாலைவனப் பிரதேசம் இருக்கிறது. அருமையான மலைப்பிரதேசங்களும் இருக்கின்றன. பாலைவனத்தைப் பற்றி விவரமாக அடுத்த பதிவில். இப்போதைக்கு ஒரு படம் - முன்னோட்டமாக.


மனிதன் கை (கால்?) வைக்காதவரை இயற்கை உருப்படியாகத்தான் இருக்கும் என்பதற்கு இது இன்னுமொரு உதாரணம்.

மெர்க்குரிப் பூக்கள்-12 : கன்தாப் கடற்கரை

ம்ம்.. இன்னும் நிறைய பார்க்கவேண்டியுள்ளது. அடுத்த இடத்திற்குச் செல்லுமுன் கன்தாபை கடைசியாக ஒருதடவை அருகில் பார்த்துவிட்டுச் செல்லலாம்.

கடலில் ஊடுருவிச் செல்லும் மலைச்சுவரிலுள்ள வளைவு போன்ற அமைப்பைப் பற்றி முன்பு குறிப்பிட்டிருந்தேன். அந்த வளைவை இப்படங்களில் இன்னும் சற்று அருகில் நெருங்கிப் பார்ப்போமா?ரொம்ப இருட்டா இருக்கோ? வளைவுக்குக் கீழே கொஞ்சம் இருட்டாத்தான் இருக்கும். இப்ப வெளில வந்ததும் பாருங்க. சூரியன் எப்படி டார்ச் அடிக்கறாருன்னு. !

மெர்க்குரிப் பூக்கள்-11 : யெட்டி கடற்கரை


முந்தைய பதிவின் தொடர்ச்சி இது. அந்த யெட்டி பாறைக்குன்றின் பக்கவாட்டுப் படம் இது.

சற்றே தட்டையான மூக்குடனும், லேசாகத் திறந்திருக்கும் உதடுகளுடனும், பெரிய தாடையுடனும் கடலைப் பார்த்துச் சிரிக்கும் முகத்தின் பக்கவாட்டுத் தோற்றம் தெரிகிறதா? :)

மெர்க்குரிப் பூக்கள்-10 : யெட்டி கடற்கரை


முந்தைய பதிவின் தொடர்ச்சி இது. யெட்டியில் அலைகளுக்கிடையே நிற்கும் பாறைக்குன்றின் அடிவாரத்தில் பாறைப்படிவுகளை ஆராய்ந்தபோது அங்கே பதிந்து ஒட்டிப்போயிருக்கும் ஆயிரக்கணக்கான சிப்பிகளைப் பார்த்து வியந்து போனேன். கல்லுக்கும் சிப்பிக்கும் வித்தியாசமே தெரியாமல் - பெயர்த்தெடுக்க முடியவில்லை - பாறையோடு ஒட்டி அடைஅடையாய் எத்தனை சிப்பிகள்!.

மெர்க்குரியில் Zoom வசதி கிடையாது. அருகில் சென்று ஆடாமல் அசையாமல் நின்று - எவ்வளவு முயற்சித்தாலும் கைகளின் லேசான நடுக்கத்தைத் தவிர்ப்பது பெரிய சவால் - எடுத்த படம்.

இப்படிவுகளைப் பார்க்கும் போதும், சரேலென்று ஓடி மறையும் பெரிய கடல் நண்டுகளைப் பார்க்கும் போதும் அடி வயிற்றில் ஜிலீரென்ற உணர்வு.

இதே உணர்வு சிறியவனாக இருந்த போது விவசாயக் கிணற்றில் குதித்துக் குளிக்கையில் கிணற்றுச் சுவரின் நீர் வழியும் பொந்துகளிலிருந்து நம்மையே பளீரிடும் கண்களால் பார்க்கும் பாம்புகளைப் பார்க்கும் போதும் எழுந்திருக்கிறது!!

Sunday, October 30, 2005

மெர்க்குரிப் பூக்கள்-9 : யெட்டி கடற்கரை

கன்தாபை ஒட்டியிருக்கும் யெட்டி கடற்கரையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். ரூவியிலிருந்து குறும் (Qurum) செல்லும் வழியில் ஹம்ரியா (Hamriyah) ரவுண்ட்-அபவுட் (Round-about : ரவுண்ட்டானா-வை மஸ்கட்டில் ரவுண்ட்-அபவுட் என்று குறிப்பிடுகிறார்கள். அமெரிக்காவில் ரோட்டரியாம்-Rotary)டில் இடது பக்கமாக ரூவி பஜாருக்குச் செல்லும் சாலையில் நுழைந்து சென்றால் ஒரு கி.மீ. தூரத்தில் வலதுபுறம் பிரியும் சிறிய சாலையைப் பிடிக்கவேண்டும். சந்தடியான அந்தச் சாலையில் அரை கி.மீ. போனதும் எதிரே உயர்ந்திருக்கும் செம்மலை கண்ணுக்குத் தெரியும். ஒரு சிறிய வேகத்தடைக்குப் பின்னர் சாலை ஒரு கொண்டை ஊசி வளைவில் சரேலென்று மேலேறும்.

2000-ஸிஸி திறனுள்ள என் கார் முதல் கியரில் கூட அந்த வளைவில் ஏறச் சிரமப்படும். அந்த வளைவில் துவங்கி மலைத்தொடர்களினூடே கிட்டத்தட்ட 20 கி.மீ. தூரம் பயணித்தால் - இரு புறம் மொட்டை மலைகள்; நடுவே ஒரு பாலைவனச் சோலை; ஏராளமான வளைவுகள் என்று அனைத்தையும் கடந்து - ஆரம்பித்தது போலவே சரேலென்று இறங்கி யெட்டி கிராமத்தை அடையலாம். கிராமத்தை ஊடறுத்துச் செல்லும் சாலையில் தொடர்ந்து சென்றால் மிகப் பெரிய; சுத்தமான; அவ்வளவாக ஆள் நடமாட்டமில்லாத அழகிய யெட்டி கடற்கரை. ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும் மீனவர்களின் படகுகளையும் ஓரிரண்டு கட்டிடங்களையும் சில கார்களையும் கடற்பறவைகளையும் தவிர வேறு எதுவும் இல்லாத அமைதிப் பகுதி.

கன்தாப்பிற்குச் சற்று முயற்சித்தால் சைக்கிளில் கூடச் சென்றுவிடலாம் என்பதால் கூட்டம் எப்போதும் அம்மிக் கொண்டிருக்கும். மேலும் அது 15 நிமிடப் பிரயாணம். ஆனால் யெட்டி போய்ச்சேர குறைந்த பட்சம் அரை மணி நேரம் ஆகும். அதுவும் புல்லரிக்க வைக்கும் வளைவுகள் நிறைந்த பிரயாணம் என்பதால் பேருந்தில் பயணித்தாலே 'வாயில வரும்' ஆசாமிகளுக்கு யெட்டி பிரயாணம் ஒத்து வராது. வண்டி நடுவில் கோளாறாகி நின்றால் உதவி கிடைப்பதற்கும் நீண்ட நேரமாகிவிடும். மேலும் மலைகளினூடான சாலை என்பதால் சீக்கிரம் இருட்டியும் விடும். இந்த இன்னல்களுக்காகவே கூட்டம் வருவதில்லை.

நான் பொதுவாக இந்த மாதிரி இடங்களைத் தேடித்தேடிப் போகும் ஆசாமி. மதுரையில் வசித்த போது கொடைக்கானலுக்குப் போக வேண்டுமென்றாலும் - உலகமே கோடைக்காலத்தில் அங்கு குவிந்திருக்க - நான் மார்கழிக் குளிர் நடுக்கி எடுக்கும் நவம்பர் டிசம்பர் மாத காலகட்டத்தில்தான் செல்வேன். அதுவும் மாப்பிள்ளை விநாயகரில் இரண்டாம் ஆட்டம் பார்த்துவிட்டு, பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு, பின்னிரவு ஒரு மணிக்குக் கிளம்பி, அதிகாலையில் மூஞ்சிக்கல்லை அடைவேன் - என்னுடைய யெஸ்டி வண்டியில்!! நிற்க.

யெட்டி கடற்கரை நீண்ட அகண்ட கடற்கரை. வழக்கம் போல மலையடிவாரத்தில் துவங்கினாலும் மிகப்பரந்த மணல்வெளியுள்ள கடற்கரை. கால்கள் புதையும் மணலில் அரை கி.மீ. தூரம் நடந்து கடலைத் தொடுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். Four Wheel Drive என்று அங்கு அழைக்கப் படும் SUV (Sports Utility Vehicle) என்று இங்கு அழைக்கப் படும் வாகனங்கள் இருந்தால் மணலை அரைத்துச் சென்று கடல் நீரில் சக்கரங்கள் நனைய நிறுத்திக் கொள்ளலாம். என்ன ஒரு வாரத்திற்கு வண்டிக்குள் மீன் வாசனை அடிக்கும்! என்னுடைய சொனாட்டாவை நிறைய சோதிக்காமல் மலையடிவாரத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கிக்கொள்வோம். மணலைப் பார்த்ததும் குதூகலமாக ஓடத்துவங்கும் குழந்தைகள் மூன்றே நிமிடத்தில் ஓய்ந்து போய் "தூக்குப்பா தூக்குப்பா" என்று கெஞ்ச ஆரம்பித்து விடுவார்கள். சில்லென ஊடுருவிச் செல்லும் (காலை, மாலை வேளைகளில் மட்டும்) காற்றை அனுபவித்தபடி கடலை நோக்கி நடந்து செல்வது இனிய அனுபவம். கிட்டத்தட்ட அரை கி.மீ. நடந்ததும் கடலலைகள் கால்களை வந்து தழுவும். அந்த இடத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மலையின் மிச்சங்களாக ஒரு மிகப்பெரிய பாறை இருக்கிறது. கிட்டத்தட்ட 50 அடி உயரமாவது இருக்கும். அந்தப் பாறை - குன்று - இங்கே:

குன்றின் கீழ்ப்புறம் தண்ணீரின் கறை தெரிகிறதா? High Tide காலங்களில் நீர்மட்டம் ஜிவ்வென்று ஐந்தடி கூடி இப்பாறை நீரில் மிதப்பதைப் போன்ற பிரமையைத் தரும். Low Tide காலங்களில் தண்ணீர் பின்வாங்கிச் சென்றுவிடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் எடுத்த படம் என்பதால் கீழே மணல் தெரிகிறது.

இது அலைகளில் நின்று கொண்டு எடுத்த படம். சற்று கவனித்துப் பார்த்தால் பின்னணியின் ஓரத்தில் மலைத் தொடர்கள் லேசாகத் தெரியும். இப்பாறைக்கும் அம்மலைத் தொடர்களுக்குமான இடைவெளியே நடக்கவேண்டிய தூரம்!

Saturday, October 29, 2005

முதல் பனியா...குழந்தைகள் முதல் தடவையாகப் பனிப்பொழிவைப் பார்க்கிறார்கள். அவர்களின் குதூகலத்தில் நானும் பங்கு கொண்டேன்.

காலையிலேயே வெப்ப நிலை 3 டிகிரி செல்ஷியஸாக இருந்தது. மதியம் லேசாகத் தூறிவிட்டு வானம் பஞ்சுத் துகள்களைக் கொட்டத் தொடங்கியது.

பச்சை பசேலென்றிருந்த மொத்த சுற்றுப்புறங்களும் ஒரு மணி நேரத்தில் முதுமையடைந்து நரைத்தது போல வெண்மையாகிவிட்டது. இயற்கை எந்த உருவிலும் அழகுதான்.


மெர்க்குரிப் பூக்கள்-8 : ஸிதாப் கோட்டை


கார்னிஷ்ஷிலிருந்து கல்பு பூங்காவைத் தாண்டியதும் மஸ்கட் நுழைவாசல் நம்மை வரவேற்கும். இது பழைய மஸ்கட் - ஸிதாப் (Sidab) என்று குறிப்பிடுவார்கள். இங்கு நிதியமைச்சகம் உள்பட சில அமைச்சகங்கள் உள்ளன. ஸிதாபில் நுழைந்ததும் இடது புறம் திரும்பினால் கடல் அலைகளைத் தடுத்துக்கொண்டிருக்கும் நீளமான சுவர். அங்கிருந்து பார்த்தால் இந்த அரண்மனை - சுல்தானின் பல்வேறு அரண்மனைகளில் இதுவும் ஒன்று. மிகுந்த பாதுகாப்புக்குட்பட்ட ராணுவம் காவலிருக்கும் பகுதி. ஆனால் மருந்துக்கு ஒரு ராணுவ வீரரைக் கூட கண்ணில் பார்க்க முடியாது. சுதந்திரமாக நடமாடலாம். இடது புறம் அலையடிக்கும் அழகான கடலையும் இந்த அரண்மனைக் கோட்டையையும் தாராளமாகப் படம் எடுக்கலாம். வலதுபக்கம் வரிசையாக இருக்கும் - ராணுவம் காவல் காக்கும் கட்டிடங்கள் பக்கம் காமிரா என்ன - கண்களைத் திருப்பாமலிருப்பது உசிதம். கோட்டையை எடுக்காமல் இவற்றை எடுத்தால் கொ**யை எடுத்து விடுவார்கள். பொதுவாகவே வளைகுடா நாடுகளில் புகைப் படம் எடுப்பது சற்று எச்சரிக்கையுடன் செய்ய வேண்டிய விஷயம்.

Friday, October 28, 2005

மெர்க்குரிப் பூக்கள்-7 : கன்தாப் கடற்கரை

வாடி கபிரிலிருந்து (Al Wadi Al Kabir) மலைகளேறி கன்தாப்பிற்குச் செல்லவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். மலைகள் ஏற்றம் முடிந்ததும் சாலை சரேலென்று இறங்கும். எந்த முயற்சியும் இல்லாமலே வாகனம் 120 கி.மீ. வேகத்தைச் சில வினாடிகளில் எட்டிவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அப்போது வண்டியை உச்ச கியரில் வைத்துக்கொண்டால் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் என்பதால் மூன்றாம் அல்லது இரண்டாம் கியரில் வைத்துக் கொள்வது நலம். இறக்கம் முடிந்ததும் கன்தாபிற்கு வலதுபக்கம் செல்லும் சாலையில் திரும்பவேண்டும். அப்படித் திரும்பாமல் திரும்ப மேலேறும் சாலையில் ஏறி சாலை உச்சியிலிருந்து பார்த்தால் மறுபக்கம் இருக்கும் கன்தாப் கிராமம் தெரியும். கிராமம் என்றால் குடிசைகளெல்லாம் இல்லை. எல்லாம் கெட்டிக் கட்டிடங்கள்தான். ஒழுங்காக நேர்த்தியாக இருக்கும் சாலைகளும் கட்டிடங்களும் உள்ள கிராமம்! அதன் பின்னணியில் இருக்கும் மலைத்தொடர்கள் ஏதோ கைலாய மலையைப் போன்று காட்சியளிக்கும். சூரியனின் வெளிச்சம் அம்மொட்டை மலைத் தொடர்களில் விழுந்து தங்க நிறத்தில் காட்சியளிப்பது மிக அழகு. கன்தாப் கடற்கரைக்குச் செல்லும் முன்பு ஒருமுறை இம்மலைத் தொடர்களைப் பார்த்துவிட்டுச் செல்வது என் வழக்கம்.

இவை பனிமலைகளாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்!

நடுவில் அர்பிதாவைத் தூக்கிக்கொண்டு நிற்பது அண்மையில் மறைந்த என் அன்புச் சகோதரன் ஸ்ரீதரன்.

மெர்க்குரிப் பூக்கள்-6 : கன்தாப் கடற்கரை


இந்தப் படமும் கன்தாப் மலையுச்சியில் வைத்து எடுத்ததுதான். படத்தின் முக்கியத்துவம் கடற்கரை இல்லை. கடலும் வானமும் சலனமின்றிச் சந்திப்பது - ஒரு பறவை கூடப் பறக்கவில்லை - அழகு. அந்தச் சந்திப்புக் கோட்டில் பூமி வளைந்திருப்பது தெரிகிறதா? :)

மெர்க்குரிப் பூக்கள்-5 : கன்தாப் கடற்கரை


கன்தாப் கடற்கரையின் இன்னொரு கோணம். பொக்கு பாறைகளால் ஆன மலை என்று முன்பு குறிப்பிட்டிருந்தேன். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கடல் நீரால் அரிக்கப்பட்டதாலோ என்னவோ, மலைகள் கரைந்து நீர் சூழ்ந்து மிச்சங்கள் மட்டும் தண்ணீர் நடுவில் தொக்கி நிற்கின்றன.

மெர்க்குரிப் பூக்கள்-4 : கன்தாப் கடற்கரை

முந்தைய பதிவில் சொன்னது போல் கன்தாப் கடற்கரையைச் சுற்றி மலைகள். இடதுபுறம் இருந்த மலையுச்சில் ஏறி அங்கிருந்த எடுத்த படம் இது. மொத்த கடற்கரையின் அழகையும் காணலாம். மலைக்கு அந்தப் பக்கம் யெட்டி கடற்கரை.

மெர்க்குரிப் பூக்கள்-3 : கன்தாப் கடற்கரை

கன்தாப் (Qantab) கடற்கரைக்கு செல்லாதவர்கள் மஸ்கட்டில் இருக்க முடியாது. கடற்கரை கொள்ளை அழகு என்றால் மஸ்கட்டிலிருந்து வாடி கபிர் (Al wadi al kabir) வழியாக கன்தாபிற்கு மலைகளூடே செல்லும் அந்தச் சாலை ஒரு அற்புதம்.
பிரதான இடமான ரூவி (Ruwi) யிலிருந்து 20 நிமிடப் பயணத்தில் கன்தாபை அடைந்து விடலாம். மஸ்கட்டைச் சுற்றிலும் மொட்டை மலைத் தொடர்கள். மலையென்றால் பெரும்பாலும் பொக்குப் பாறைகள். கன்தாப் கடற்கரையையொட்டியும் இந்தப் பொக்குப் பாறை மலைகள்தான். கடற்கரையின் வலது புறத்தில் கடலைப் பிளந்து செல்வது போன்று மலை ஊடுருவியிருக்கும்.
இந்தச் சுவர் போன்ற அல்லது பாலம் போன்ற அமைப்புக்கு அந்தப் பக்கம் இருப்பது யெட்டி (Yitti) கடற்கரை. இயற்கையாகவே இந்த அமைப்புக்குக் கீழே அழகான வளைவு இருக்கிறது. இந்த வளைவு வழியாக படகில் யெட்டி கடற்கரைக்குப் போய்விடலாம். சாலை வழியாகச் சென்றால் 45 நிமிடங்களுக்கு மேல் ஆகும்.

மெர்க்குரிப் பூக்கள்-2 : கல்புவிலிருந்து ரியாம்

மஸ்கட்டின் கார்னிஷ் (Corniche) எனப்படும் துறைமுகப் பகுதி மிகவும் அழகான இடம். ஒரு பக்கம் கடல். சீரான கடற்கரைச் சாலை. வலது பக்கம் அழகான புல்வெளிகளையும் ஈச்ச மரங்களையும் பராமரிக்கிறார்கள். கார்னிஷ்ஷில் நுழைந்து சுமாராக இரண்டு கி.மீ. தூரத்தில் சாலையோரமாக ரியாம் (Riam) பூங்கா இருக்கிறது. அப்பூங்காவில் எழுப்பப் பட்டிருக்கும் இந்த கும்பம் போன்ற அமைப்பு மிகவும் பிரபலமானது. இன்னும் ஒரு கி.மீ. தூரம் போனால் கடலையொட்டி கல்பு (Kalbouh) பூங்கா இருக்கிறது. இந்தப் பூங்காவிலிருந்து பார்த்தால் நடுவே கடலும் அதைத் தாண்டிய கடற்கரைச் சாலையும் சாலைக்கு அந்தப் பக்கம் ரியாம் பூங்காவின் அடையாளச் சின்னமான அந்தக் கும்பமும் மிக அழகாகத் தோற்றமளிக்கும்.

சூரிய அஸ்தமனத்திற்குச் சற்று முன்பாக எடுத்த படம் இது.

Wednesday, October 26, 2005

மெர்க்குரிப் பூக்கள்-1 : வானவில்?


மெர்க்குரி என்ற டிஜிட்டல் கேமராவில் எடுத்த படம். 2MP மட்டும் திறன் கொண்டது.

படத்தில் என் இளைய மகள் அர்ப்பிதா. ஸ்ரீரங்கத்து அடுக்குமாடி வீட்டு பால்கனியில். எடுத்தது டிசம்பர் 2004-இல்.

மெர்க்குரி உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து விட்டது. அதில் மலர்ந்த மெர்க்குரிப் பூக்கள் இன்னும் வரும்.