Monday, November 21, 2005

மெர்க்குரிப் பூக்கள்-32 : அமீரகம் - துபாய்

கடும் சட்டதிட்டங்களுக்குட்பட்ட வளைகுடா நாடுகளின் பாலைவனச் சோலையாய் இருப்பது துபாய். எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிற்கும் சவால் விடும் வகையில் உள்கட்டுமானம், தொழில்துறை வளர்ச்சி என்று அனைத்துத் துறைகளிலும் பிரம்மாண்டமாக வளர்ந்து சிங்கப்பூருக்கும் பலவகைகளில் கடும் சவாலைக் கொடுத்துவரும் துபாய் ஓர் ஆச்சரியமான நாடு.

பெரிதாக்கிப் பார்க்க

துபாய் போயிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு மக்தூம் பாலத்தையும் ஷேக் சயீத் சாலையையும் தெரியாது என்று யாராவது சொன்னால் அவர்கள் 'மகாத்மா காந்தி தெரு, துபாய் பஸ் ஸ்டாண்டு, துபாய் குறுக்குச் சந்து, துபாய்' முகவரிப் பார்ட்டிகள் என்று உறுதி செய்து கொள்ளலாம்.

பெரிதாக்கிப் பார்க்க

ஆயிரக்கணக்கான வாகனங்கள் மக்தூம் பாலத்தை தினமும் கடந்து செல்கின்றன. ஷேக் சயீத் சாலை எனப்படும் நெடுஞ்சாலையில் லட்சக் கணக்கில் பயணிக்கிறார்கள். ஒர்ர்ர்ரே ரோடில் போய்க் கொண்டேயிருந்தால் அபுதாபிக்குப் போய் விடலாம்.


பெரிதாக்கிப் பார்க்க

இருபுறமும் வானுயரக் கட்டிடங்கள். இங்கேதான் உலகிலேயே உயரமான கட்டிடத்தை நிர்மாணிக்கப் போகிறார்கள். துபாயில் அடைசல் தாங்க முடியவில்லை என்று துபாய் மரீனாவை நிர்மாணித்து கூட்டத்தைப் பிரித்திருக்கிறார்கள்.

பெரிதாக்கிப் பார்க்க

தகவல்தொழில்நுட்பத் துறையின் மையமாக துபாய் இணைய நகரம் (Dubai Internet City), பக்கத்திலேயே சாத்தான்குளம்.. ஸாரி.. துபாய் ஊடக நகரம் (Dubai Media City) (ஆசிப் அண்ணாச்சி இங்கனதான் வேல பாக்குறாரு) என்று பளிங்காக அமைத்திருக்கிறார்கள்.

சாலைகளில் வாகனங்கள் பூப்போல ரொங்கிக்கொண்டே செல்ல முடிகிறது. எல்லையில்லா விரிவாக்கம் போல நகரை விரித்துப் பரத்திக்கொண்டே போகிறார்கள். எண்ணையை மட்டுமே நம்பியிருந்த பொருளாதாரத்தை மற்ற துறைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியதன் மூலம் வெற்றிகரமாக பரவலாக்கியிருக்கிறார்கள். வேண்டுமெனில் அபுதாபியிலிருந்து குழாய் மூலம் எடுத்துக்கொள்வார்கள். எண்ணையை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்று மற்ற வளைகுடா நாடுகள் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகின்றன. துபாய் அவற்றிற்கு முன்மாதிரி!

பெரிதாக்கிப் பார்க்க

துபாய்க்கு அடுத்தபடியாக சுதந்திரமான வாழ்க்கைக்கு பஹ்ரைனைச் சொல்கிறார்கள். பக்கத்திலிருக்கும் செளதியிலிருந்து வாரயிறுதியில் ஆயிரக்கணக்கான செளதிகள் பஹ்ரைனுக்கு வந்துவிட்டுச் செல்வார்கள் என்று கேள்விப் பட்டேன்.

ஆயிரம் பொற்காசுகளோடு சென்றாலும் ஐந்து நிமிடத்தில் துபாயில் கரைந்துவிடும். ஏராளமான பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்-கள். ஷாப்பிங் செய்துகொண்டே இருக்கும் அழகான மாதுகள்.

துபாய் பன்னாட்டு விமான நிலையத்தை விரிவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் தொகையைவிட பத்து மடங்கு அளவிற்கு பிரயாணிகள் வந்து போகிறார்கள் ஆண்டுதோறும். பிரம்மாண்டமான வணிக வளாகத்தில் பளபள கடைகள் - வரியில்லாத விற்பனை என்பதால் மக்கள் நிறைய பொருள்கள் வாங்கிச் செல்கிறார்கள். மின்னணு சாதனங்களுக்கு துபாய் பிரசித்தம். சந்தைக்கு வரும் நவீனங்கள் எல்லாம் நல்ல விலையில் கிடைக்கும். ஐந்து வருடங்களில் துபாய் விமான நிலையத்தின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்கூடாகக் கண்டு வியந்திருக்கிறேன்.

சாலைகளில் இடையறாது ஓடும் வாகனங்கள். இரவு பதினொரு மணிக்குக் கூட போக்குவரத்து ஜாம் ஜாம் என்று ஆங்காங்கே ஜாமாகிக் கிடக்கும். சும்மாவே வண்டியை ஓட்டிக்கொண்டே இருப்பார்கள் போல. வீட்டு வாடகையும் உச்சத்திற்குப் பறக்க அதற்கு ஈடுகொடுக்கமுடியாமல் ஷார்ஜாவுக்குத் தொடர்ந்து இடப்பெயர்ச்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். இப்போது ஷார்ஜாவிலும் வாடகை உயர்ந்துவிட்டது. துபாய்-ஷார்ஜா சாலையில் போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் பெற்றது. ஷார்ஜாவில் வசித்துக்கொண்டு துபாய்க்கு வந்துபோய் வேலை செய்பவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.

ஷார்ஜாவில் வசித்தால் விட்டுவிடுவோமா என்று துபாய் ஷார்ஜா சாலைகளில் சுங்க வாசல்களை அமைத்து போகும் வரும் வாகனங்களுக்கு நுழைவுத்தீர்வை வசூலிக்கத் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் துபாய்-ஷார்ஜா சாலையில் பறக்கின்றன. இன்னும் இரண்டு மூன்று வழித்தடங்களிலிருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக அவற்றை மூடி வைத்திருக்கிறார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள். ஆக பிரதான சாலை ஒன்றேதான். மக்கள் ஆறுமணிக்கெல்லாம் சோற்று மூட்டையைக் கட்டிக்கொண்டு ஷார்ஜாவிலிருந்து கிளம்பிவிடுகிறார்கள். மற்ற எல்லா இடங்களிலும் மணிக்கு 100 அல்லது 120 கி.மீ. வேகத்தில் பறக்கமுடிகிறபோது வெறும் 27 கி.மீ. தூரத்தைக் கடக்க இங்கே 1-2 மணி நேரமாகிவிடுகிறது.

முன்பு சாலை வழியாக மஸ்கட்டிலிருந்து துபாய் செல்வதற்கு மஸ்கட்டில் ஒரு சாலைப் பயண அனுமதிச் சீட்டு (Road Permit) வாங்கிக்கொண்டால் போதுமானது - $13 செலவில். ஓமானையும் ஐக்கிய அரபு நாடுகளையும் பிரிக்கும் ஹத்தா எல்லையில் (Hattah Border) அனுமதிச்சீட்டையும் கடவுச் சீட்டையும் காண்பித்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹத்தாவைத்தாண்டியதும் இன்னொரு சோதனைச் சாவடியை ஐக்கிய அரபு நாடுகள் சார்பாகத் திறந்து ஓமானிலிருந்து வரும் ஒவ்வொரு பயணிக்கும் நுழைவுச்சீட்டு (Visa) வாங்குவதைக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள் - $26 செலவில்! இதுதான் சாக்கு என்று ஓமான் அரசு எல்லையைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்திற்கும் வரியாக $6 வசூலிக்கத் தொடங்கினார்கள். ஆக, வருமானம் வர வாய்ப்பிருக்கும் எதையும் விட்டு வைக்காமலிருக்கிறார்கள்.

அவர்களுக்கும் வேறு வழியில்லையே.

Thursday, November 17, 2005

மெர்க்குரிப் பூக்கள்-30 : அமீரகம் - அபுதாபி


பெரிதாக்கிப் பார்க்க

தீப்பெட்டிகளை அடுக்கியது போன்று வரிசையாக வானத்தைச் சுரண்டும் (மனசாட்சி: "சே.. skyscrappers-ஐ இப்படியா தமிழாக்கம் செய்வது!") உயரமான கட்டிடங்கள். மொத்தமே நான்கு தெருக்கள் இருக்கும் போலிருக்கிறது - பிரமை. நவீனத்தின் உச்சத்தில் மிளிர்கிறது அபுதாபி (வடிவேலு சொல்வது 'அபிதாபி'). ஐக்கிய அரபு நாடுகளின் தலையகம். கையால் தோண்டினாலேயே எண்ணை வந்துவிடும் போல - அபரிமிதமான எண்ணை வளம். பெரிய பூங்காக்கள், தோட்டங்கள், சாலையோரங்களில் பச்சைப் புல்வெளி, கடல்நீரை மூக்கணாங்கயிறு போட்டுக்கொண்டு வந்து நீல வண்ணத்தில் தேக்கியிருக்கும் கார்னிஷ், அட்டகாசமான சாலைகள், தொலைதொடர்பு மற்றும் இன்னபிற உள்கட்டுமான வசதிகள், பன்னாட்டு நிறுவனங்களின் ஆடம்பர ஹோட்டல்கள், பெரிய ஷாப்பிங் மால்கள் போன்ற நவீனங்களோடு, கலாசாரத் துறையும் சிறப்பாக இயங்கி, சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது.

கார்னிஷ் சாலையில் அபுதாபியிலேயே உயரமான கட்டிடங்கள். ஆரக்கிள் கார்ப்பொரேஷன் தங்க நிறக் கண்ணாடிகளால் வேயப்பட்ட கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்ன.. கைப்பேசி அலைவரிசை கிடைக்காமல் சில சமயத்தில் வேலை செய்யாது. இல்லாவிட்டால் கண்ணாடிச் சுவரோரம் நின்றுகொண்டு ஹலோ ஹலோ என்று கத்த வேண்டும்.

பெரிதாக்கிப் பார்க்க
மஸ்கட், துபாய் போலவே அபுதாபி ஷாப்பிங் திருவிழாவும் வருடாவருடம் விசேஷமாக நடைபெறும். அபுதாபி விமான நிலைய வளாகம் வட்ட வடிவமாகக் கட்டப்பட்டு வருடம் முச்சூடும் ஒரு மில்லியன் திர்ஹாம் குலுக்கலுக்கு லாட்டரிச் சீட்டை விற்றுக்கொண்டு, வாசனை திரவியங்கள், சிகரெட், சுருட்டு, சோம சுரா பானங்களை, மின்னணு சாதனங்கள், நவீன கார் ஒன்று நடுநாயகமாக நிறுத்தப்பட்டு, பளபள கடைகளில் ஏகமாக விற்றுக் கொண்டு திருவிழா போல 24 மணி நேரமும் கூட்டம் அம்மிக்கொண்டு பரபரப்பாக இருக்கிறது.

பார்க்க சிறியது போன்று தோற்றமளித்தாலும் ஏழு எமிரேட்டுகளில் அபுதாபியே பெரியது - அமீரகத்தின் தலைநகரும் கூட!

பஹ்ரைன் போலவே இங்கும் ஒரு காலத்தில் முத்துகுளிக்கும் தொழில் கொடிகட்டிப் பறந்து பின்பு நொடித்துப் போய் பொருளாதாரம் பாதாளத்திற்குச் சரிந்த சமயத்தில் எண்ணையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். எண்ணையை 1962-இலேயே ஏற்றுமதி செய்த முதல் எமிரேட் அபுதாபி. அமீரகத்தில் அதிக மக்கள் தொகையும் இங்குதான்.

மரங்களை அப்படியே நடுவதைப் பற்றி முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தேனல்லவா? இங்கும் மரங்களை நடுகிறார்கள். எவ்வளவு நட்டிருப்பார்கள் என்று சொல்கிறேன் - மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் - 12 கோடிக்கும் மேல்!!!!

2007-இல் திறப்பு விழா (அமைச்சர் யாரும் ரிப்பன் வெட்ட மாட்டார்கள்) காணும் ஷேக் ஸயீத் பின் சுல்தான் அல் நயன் (Sheik Zayed bin Sultan Al Nahyan) மசூதி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. 10000 பேர் ஒரே சமயத்தில் பிரார்த்தனை செய்யமுடியும். இரானிய கார்ப்பெட்டுகள் மிகவும் பிரசித்தம். அபுதாபியின் இந்த மசூதியின் பிரதான தொழுகை அறையை அலங்கரிக்க பிரம்மாண்டமான கார்ப்பெட்டை இரானியன் கார்ப்பெட் நிறுவனம் செய்யப் போகிறது - இயந்திரங்களில்லாது கைகளினால் நெய்யப்படப் போகிறது 5700 சதுர மீட்டர் அளவிலான அந்தக் கார்ப்பெட்!! இதைச் செய்து முடிக்க ஆயிரம் நெசவாளர்களும் இரண்டு வருட காலமும் ஆகும். முடித்ததும் உலகிலேயே கையால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய கார்ப்பெட் என்ற பெருமையும் அதற்குக் கிடைத்துவிடும்.

அமெரிக்காவில்தான் எல்லாம் பெரிதாக இருக்கவேண்டுமா என்ன? :)

என்ன இந்தப் பாழாய்ப் போன வெயில் ஒன்றுதான் ஆளைக் கொல்கிறது. இந்த ஊரில் மட்டும் கொடைக்கானல் போல தட்பவெப்பம் நிலவினால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் யார் போகப் போகிறார்கள்?
***

மெர்க்குரிப் பூக்கள்-31 : ஏழு நட்சத்திர ஹோட்டல்!
பின்னணியில் நிர்மலமான நீலவானத்துடன் கம்பீரமாக நிமிர்ந்து காற்றில் படபடக்கும் ராட்சத பாய்மரத்தைப் போல கடலுக்குள் நிற்கிறது புர்ஜ்-அல்-அராப் (Burj Al Arab) எனப்படும் ஏழு நட்சத்திர ஹோட்டல். 321 மீட்டர் உயரம்! கரையிலிருந்து 280 மீட்டர் கடலுக்குள் தீவு ஒன்றை அமைத்து அதன் மீது எழுப்பியிருக்கிறார்கள். கரையையும் தீவையும் இணைத்து பாலமொன்றும் அமைத்திருக்கிறார்கள். உயரத்தைப் போலவே ஆடம்பரத்தின் உச்சமாகவும் துபாயின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.

மேலே அர்ச்சனைத்தட்டு வடிவில் இருப்பது ஹெலிகாப்டருக்கான இறங்குதளம் (Helipad). மாலை மயங்கியதும் வண்ண ஒளி விளக்குகள் இதன் மீது பிரதிபலிப்பதும் உச்சியில் இடிதாங்கியின் சிவப்புக் கண்சிமிட்டலும் அற்புதமான காட்சி. நகர மையத்தில் அமைதிருந்தால் கூட இந்த அளவு ஈர்க்குமா என்று தெரியவில்லை. கடலுக்குள் அசையாது நிற்கும் பிரும்மாண்ட பாய்மரப் படகைப் போல இது நிற்பது பார்ப்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்துகிறது.

மிகவும் சல்லிசாக ஒரு நாளைக்கு ரூ. 1,75,000 மட்டுமே வாங்குகிறார்கள்! நமக்கெல்லாம் ரெண்டு சாய்ஸ்! கோயிலில் இலவச தரிசனக் க்யூவைப் போன்று தூரத்தில் நின்று தரிசித்துவிட்டு கன்னத்தில் போட்டுக்கொள்ளலாம். இல்லாவிட்டால் கொஞ்சம் கெத்தாக 100 திர்ஹாம் (ரூ.1250) கொடுத்துவிட்டு பாலத்தின் வழியாக ஹோட்டலின் பிரம்மாண்ட வரவேற்பறைக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, நான்கைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பலாம். ஒரு நாளாவது தங்குவதென்றால் நம்மூர் அரசியல்வாதிகளாக இருக்கவேண்டும். அதற்கு அடுத்த ஜென்மத்திலாவது கொடுப்பினை இருக்கிறதா என்று பார்க்கலாம்!

Disclaimer:

தருமியாகிய எனக்கு கூகுள் மண்டபத்தில் சிவபெருமான் பணக்காரப் புலவராக மாறுவேடத்தில் வந்து கொடுத்ததில் இரண்டு படங்களை ஒரு 'இது'க்காக அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன்.

பெரிசாப் பாக்க..

பெரிசாப் பாக்க..

இதற்கும் எனது அப்பாவி மெர்க்குரி கேமராவுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லையென்பதை இச்சபைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, November 16, 2005

மெர்க்குரிப் பூக்கள்-29 : அலெப்போ


பெரிய அளவுப் படம்

'ஹலப்' என்றழைக்கப்படும் அலெப்போவைப் பற்றிய பயணக்கட்டுரையை அகரமுதல-வில் எழுதியிருந்தேன்.

இங்கே ஷெரட்டன் குரூப் ஹோட்டல்களைப் போல சிரியாவில் ச்சப்பா சாம் (Chabba Cham). 5000 ஆண்டுகள் புராதானமான நகரம் அலெப்போ. சில இடங்களைப் பார்க்கும்போது வரலாற்றுக்குள் நுழைந்துவிட்ட பிரமை ஏற்படுகிறது.

திருச்சி மலைக்கோட்டை போன்று நகரின் மையத்தில் சிட்டாடல் கோட்டை (Citadel) பல வரலாற்றுச் சம்பவங்களைத் தாங்கிக்கொண்டு அமைதியாக நிற்கிறது.

நெரிசலான அலெப்போ நகரம் சென்னைப் போக்குவரத்தை நினைவூட்டும். சாலைமுனையில் கண்ட இந்த முதியவர் எனக்குள் எவ்வளவோ சிந்தனைகளை எழுப்பினார் - முடவராக சக்கர நாற்காலியில் இருந்தாலும் முடங்கிக்கிடக்காமல் சிகரெட் விற்பனை செய்துகொண்டு.

பெரிய அளவுப் படம்

***

Tuesday, November 15, 2005

அடேங்கப்பா எவ்ளோ ஒசரம்!

கொடைக்கானல் சென்றால் பேரிஜாம் ஏரிக்குச் செல்லாமல் வருவதில்லை. கொடை ஏரியிலிருந்து 20 கி.மீ. இன்னும் மேலேறிச் செல்லவேண்டும். வனத்துறை அனுமதி தேவை. காலையிலேயே மூஞ்சிக்கல்லில் இருக்கும் அவர்களது அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பம் எழுதிக்கொடுத்தால், அனுமதி கிடைக்கும்.

சற்றே கரடுமுரடான சாலை; அசந்தால் கபால மோட்சம்! இடதுபக்கம் படுபாதாளம். எதிரே வண்டி வந்தால், மிக மிக மெதுவாக மிகுந்த எச்சரிக்கையுடன் ஒதுங்கி வழிவிட வேண்டும்.

முதல் கொண்டையூசி வளைவு திரும்பியதும் ஒரு சவுக்குமரத் தோப்பு இருக்கிறது. பைசா கோபுரம் போன்று சாய்ந்த அடர்த்தியாக வளர்ந்த மரங்கள். வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே புகுந்து ஒரு நடை நடந்துவிட்டுப் பயணத்தைத் தொடர்வது வழக்கம். சில்வண்டுகளின் ரீங்காரமும், பறவைகளின் சத்தத்தையும் தவிர வேறு சத்தமெதுவுமின்றி அமைதியாக இருக்கும் பிரதேசம். போன நவம்பரில் சென்றிருந்தபோது இரண்டு குதிரைகளை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக ஆள்களை அமர்த்தி நடத்திச் சென்று காசு வாங்கிக்கொண்டிருந்தார்கள். கீழே ஏரியைச் சுற்றி குதிரைகள் அதிகமாகி போட்டியும் அதிகமாகிவிட்டது போல!


அதற்கு முந்தைய பயணத்தில் நண்பர்களாகச் சேர்ந்து ஐந்து பைக்குகளில் சென்றிருந்தோம். திரும்ப வருகையில் கடுமையான மழை. ஐந்தில் ஒன்று மட்டும் டிவிஎஸ் சாம்ப் மொப்பெட். முக்கி முனகி நண்பன் அதில் எங்களுடன் சேர்ந்து வந்துகொண்டிருந்தான். அதிக ஈரத்தில் சாம்ப்பின் கேபிள் பிரேக் உராய்வை இழந்து, வண்டி நிற்காமல் படுவேகமாக இறக்கத்தில் செல்ல, முதலில் அவன் ஜாலியாகத்தான் இருந்தான். சவுக்குத் தோப்பை அடைந்ததும் கொண்டையூசி வளைவில் நின்றிருந்த காட்டெருமையைப் பார்த்து நாங்களெல்லாம் வண்டிகளை நிறுத்திவிட்டு மழையில் காத்திருக்க, அவனால் வண்டியை நிறுத்தமுடியாமல் அலறிக்கொண்டே சென்றான். சட்டென்று கைகளையும் கால்களையும் விரித்துக் குதித்து வண்டியை விடுவித்துவிட்டுக் கீழே விழ, வண்டி மட்டும் நேராகச் சென்று வளைவில் சரிந்து விழ காட்டெருமை எங்களை முறைத்தது. அவன் எழுந்து அடித்த்ப் பதறி திரும்ப எங்களிடம் ஓடி வந்து சேர்ந்துகொள்ள கிட்டத்தட்ட ஒருமணி நேரம் எங்களைக் காக்கவைத்துவிட்டுக் காட்டெருமை சாலையைக் கடந்து சென்று மறைந்தது. சரியான திகில் பயணம் அது.

பேரிஜாம் அமைதியான ஏரி. காட்டுத் தீ பற்றிக்கொள்ளும் அபாயம் அதிகம் என்பதால் அங்கு தீப்பெட்டி போன்ற பொருள்கள் தடைசெய்யப் பட்டுள்ளன. இன்னும் ஏறி மலைத்தொடர்களூடே பயணித்தால் 75 கி.மீ. தூரத்தில் மூணாறு வந்துவிடும்.

சவுக்குத் தோப்பில் காலாற நடந்து செல்வது இனிய அனுபவம். காற்றில் கலந்திருக்கும் குளிரும், பல்வேறு செடிகளின் மணமும் மனதை லேசாக்கிவிடும். மஸ்கட்டில் எங்கு உயர்ந்த மரங்களெல்லாம்? இளைய மகள் துர்காவுக்கு இம்மரங்களின் உயரம் பிரமிப்பைத் தர, அண்ணாந்து திகைப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தாள். அப்போது ஹேண்டிகாமிலேயே எடுத்த படம் இது.


ஒரு வேளை ஆகாயத்திலிருந்து உம்மாச்சி வருகிறாரா என்று பார்த்தாளோ என்னவோ?

***

மெர்க்குரிப் பூக்கள்-28: மலர்களே.. மலர்களே..


எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காத விஷயம் மலர்கள். இம்மலர்களைக் கண்களால் முகர்ந்தது சிரியாவின் அலெப்போ நகரத்தில்.
கருத்துப் படம்!


"நம்மகிட்ட இருந்து பொறந்தோம்னு சொல்லிக்கிட்டு இந்த மனுசப் பயலுவ பண்ற அழும்பைத் தாங்க முடியலையே! ஏதோ கற்பாம், கலாசாரமாம், கொம்பாம் - போட்டு அடிச்சுக்கறாய்ங்க. நம்ம பேரு கெட்டுப்போனதுதான் மிச்சம். நீ சூதானமா இருந்துக்க கண்ணு. எதுக்கும் மரத்த விட்டுக் கொஞ்ச நாளைக்கு எங்கயும் எறங்கிப் போயித் திரியாம இரு. அப்றம் யாராச்சும் தொடப்பக் கட்டை, செருப்புன்னு எடுத்துக்கிட்டு வந்து ஒம்மேல பாஞ்சுரப் போறாய்ங்க."


"ஹூம். அடுத்த சென்மத்துலயாவது ஒரு மனுஷியாப் பொறக்கணும்னு நெனச்சேன். வேணவே வேணாம் சாமீ. நா இப்படியே பொறந்துட்டுப் போறேன்"

***
படம் எடுத்தது கொடைக்கானலின் கோக்கர்ஸ் வாக்-கில். ஜேவிஸி ஹேண்டிகாமில் ஸ்டில் படமும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 0.7 MP அளவுக்குத்தான் படத்தின் அடர்வு இருப்பதால் ரொம்பச் சுமாராகத்தான் படம் இருக்கும். சும்மா ஜாலிக்கு இங்கே போட்டேன்.

Monday, November 14, 2005

மெர்க்குரிப் பூக்கள்-27 : நவீன அசோகர்!


"அசோகர் சாலையோரங்களில் மரங்களை நட்டார்" என்று நாம் எல்லாரும் படித்திருப்போம். "பின்ன என்ன சாலை நடுவுலயா நட முடியும்?" என்ற கடி ஜோக்குகளையும் கேட்டிருப்போம்.

மஸ்கட்டின் குறும் (Qurum) கடற்கரைக்கு வாரயிறுதியில் (வெள்ளிக் கிழமை) சென்றிருந்தேன். குறும் கடற்கரை நல்ல நீளமான கூட்டமில்லாத சுத்தமான கடற்கரை (பொதுவாகவே ஓமானில் நான் பார்த்தவரை எல்லாக் கடற்கரைகளும் சுத்தமாகவே இருக்கின்றன).

சட்டென்று விலகிப் பறக்கும் ஒற்றைக் கடற்பறவை தெரிகிறதா?


குழந்தைகள் மணலைக் குவித்து வைத்து விளையாடிக்கொண்டிருக்க, காரிலேயே வைத்து விட்ட தண்ணீர் பாட்டிலை எடுத்துவரத் திரும்பியபோது கண்ட காட்சி இது.

ஈச்ச மரங்களை அப்படியே லாரியில் போட்டுக்கொண்டு வந்து, கிரேன் மூலம் தூக்கி..


குழிக்குள் இப்படி இறக்கி நட்டு வைத்துவிடுகிறார்கள். சாலையோர மரங்கள் தயார்!

ஓமானின் சுல்தான் கபூஸ் பின் ஸாயிதை (His Majesty Sultan Qaboos Bin Said) நவீன அசோகர் என்று சொல்லலாமா? :) மஸ்கட் மட்டுமல்ல. மற்ற வளைகுடா நகரங்களிலும் இந்தக் காட்சியைக் காணலாம்.

இதைப் பார்க்கும்போது, பெங்களூர் எம்.ஜி. ரோடும், டிக்கன்ஸன் ரோடும் சந்திக்கும் இடத்திலிருந்து எம்.ஜி.ரோடு இறுதிவரை இருந்த பிரம்மாண்டமான நான்கைந்து மரங்களை, போக்குவரத்து இடையூறு என்று சொல்லி வெட்டித் தள்ளியது நினைவுக்கு வருகிறது (1998-இல்).

மெர்க்குரிப் பூக்கள்-26 : பேசும் சிற்பங்கள் (தொடர்ச்சி)Beirut downtown எனப்படும் நகர மையம் கடலையொட்டித் தாழ்வாக இருக்கிறது. மற்ற பகுதிகளெல்லாம் மலைகள் சூழ ஆங்காங்கே மரங்களுக்கிடையில் செருகி வைத்திருப்பதைப் போல கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள்.

கார்னிஷைப் பார்த்துவிட்டு, ராயித் தோமா அவனது வீட்டுக்கு என்னைக் கூட்டிச் சென்றான். அவனது வீடு மலைப்பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. மேடேறிச் செல்லும் சாலையில் காட்டுத்தனமான வேகம். ஒன்றா விர்ர்ர்ரென்று ஆக்ஸிலேட்டர் மிதிக்கப்பட்டு இஞ்சின் சத்தம் போடும். இல்லாவிட்டால் பிரேக் மிதிக்கப்பட்டு டயர்கள் தேயும் கீறீச்ச்ச்ச்ச்ச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அப்படியொரு வேகம்.

யாரும் போக்குவரத்து விதிகளை மதிப்பதாகத் தெரியவில்லை. சிவப்பு விளக்கு எரிவதை ராயித் கண்டுகொள்ளாமல் பல இடங்களில் வண்டியை விரட்ட நான் யாரும் குறுக்கே வந்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே இருக்கைப் பட்டியைப் போட்டுக்கொண்டு கண்களை மூடிக்கொண்டேன். "ஏன்யா இப்படி ரேஸ் மாதிரி ஓட்டறீங்க" என்று கேட்டால் "இப்பதான சிவில் வார் முடிஞ்சிருக்கு. எங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட்டு வேணும். அதுக்குள்ள சட்டம் திட்டம்னு ஆரம்பிச்சாங்கன்னா யாரு கேப்பா?" என்றாய் ராயித். எனக்கு இந்த லாஜிக் லேசாகத்தான் புரிந்தது. இது குறித்து அவன் சொன்ன ஜோக் ஒன்று கீழே.

**

இதுவே லெபனானுக்கு என் முதல் பயணம். விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்து நான் டாக்சியில் ஏறியதும் டாக்ஸி ட்ரைவர் படுவேகமாக ஓட்டிக்கொண்டு போனான். சிவப்பு விளக்கு விழுந்தும் மதிக்காமல் அவன் தாண்டிக்கொண்டு செல்ல நான் அலறினேன். அவனிடம் ஏன் இப்படி ஓட்டுகிறாய் என்று கேட்டதற்கு அவன்..

"ஏன்னு கேக்கறியா? ஏன்னா நான் பைத்தியம். அதான்"

அடுத்த சிக்னலிலும் சிவப்பு விளக்கு. டாக்ஸி நிற்காமல் பறக்க நான் 'அய்யோ' என்று அலறினேன். நல்ல வேளை யாரும் பச்சை விளக்கு விழுந்த சாலையிலிருந்து எங்களுக்குக் குறுக்காகக் கடந்து செல்லவில்லை. "ஏனப்பா சிவப்பு விளக்கு உனக்குத் தெரியவில்லையா? ஏன் இப்படி விதிகளை மீறுகிறாய்?" என்று கத்தினேன். அதற்கு அவன்

"ஏன்னு கேக்கறியா? ஏன்னா நான் பைத்தியம். அதான்" என்று திரும்பாமல் சொன்னான்.

மூன்றாம் சிக்னல் தூரத்தில் தெரிகிறது. நாங்கள் செல்லும் சாலையை விட அந்தச் சந்திப்பில் குறுக்கே போகும் சாலை பிரதான சாலை. நிறைய வாகனப் போக்குவரத்து இருக்கும். நான் பார்த்த போது எங்களுக்குப் பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஆனால் எங்கள் வண்டி நெருங்குவதற்குள் சிவப்பு விழுந்துவிட்டது. இதிலாவது டிரைவர் நிறுத்துவான் என்று பார்த்தால் இப்போதுதான் ஆக்ஸிலேட்டரை இன்னும் மிதித்து வேகமாக அந்தச் சந்திப்பைக் கடந்தான். எனக்கு அதிர்ச்சியிலும், பதற்றத்திலும் மயக்கமே வரும் போல இருந்தது.

"டேய் பாவி. நீ செத்தா செத்துக்கோ. என்னைச் சாவடிக்காதே. போலிஸ் பிடிச்சா ஒன்னோட என்னையும் சேத்து உள்ளே தள்ளுவாங்க. ஏண்டா இப்படி ரெட் சிக்னல்ல நிக்காம ஓட்டறே" என்று அவன் தலைமுடியைப் பிடித்து உலுக்க அவன் அலட்டிக் கொள்ளாமல்

"ஏன்னு கேக்கறியா? ஏன்னா நான் பைத்தியம். அதான்" என்றான்.

நான் இவன் வண்டியில் ஏறியதற்கு என்னையே சபித்துக்கொண்டு எங்காவது நடுவில் நிறுத்திக்கொண்டு இறங்கிவிடலாமா என்று யோசித்தேன். இவன் நிறுத்துவானா என்று தெரியவில்லை. அதோ நான்காவது சிக்னல் தெரிகிறது. பச்சை விளக்கு. நாங்கள் நெருங்குவதற்குள் சிவப்பு விழும் என்று எதிர்பார்த்தேன். பச்சை விளக்கு இன்னும் எரிந்துகொண்டிருக்க, எங்கள் கார் வேகம் குறைந்து சரியாக பச்சை சிக்னலில் நின்றது. ட்ரைவர் கியரை ந்யூட்ரலில் போட்டுவிட்டு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துவிட்டு பின்னால் திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகைக்க நான் 'அப்பனே. பச்சை விளக்குதான் எரிகிறது? ஏன் நிறுத்தினாய்? போகவேண்டியதுதானே?' என்று கேட்டேன்.

அவன் "அங்க பார். என்ன மாதிரி ஒரு பைத்தியம்" என்று கைகாட்டிய இடத்தில், குறுக்குச் சாலையில் படுவேகமாக - சிவப்புச் சிக்னலில் - ஒரு டாக்ஸி கடந்து சென்றது.

***

ராயித் வீட்டுக்குப் போகும் வழியில் ஓர் இடத்தில் நிறுத்த ஒரு சிறிய இடத்தில் இருந்தன இந்தச் சிலைகள். அரவமில்லாத இடத்தில் பேசாமல் நிற்கும் இந்தச் சிலைகளும் அந்த இடத்தின் அமைதியும், மலைக் குளிரும், தூரத்தில் கீழே தெரியும் பெய்ரூட் நகரமும் அந்திப் பொழுதும் ஒரு வித மயக்கத்தைக் கொடுத்தன என்றால் மிகையாகாது. முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இன்னும் சில சிலைகள்...

மெர்க்குரிப் பூக்கள்-25 : பேசும் சிற்பங்கள் (வசனம் தேவை!!!)

"வசனம் தேவையில்லை" கட்டுடைத்தலைவி, கட்டுடைத் தலைவன் என்று பரபரப்பாக படம் காட்டும் பதிவுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. பதிவுகள் குறித்து எனக்குக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் இப்பதிவுகளின் பின்னூட்டங்களில் சிலர் 'படம் காட்டுவது தான் இப்போது பேஷன்' என்று சொல்லி வைக்கிறார்கள்.

நான் இந்தப் பதிவையே படம்காட்டத்தான் ஆரம்பித்தேன். என் விழியில் நுழைந்து மனதில் தங்கிய காட்சிப் பதிவுகளை வலையிலும் பதித்து வைக்கும் நோக்கில். இதில் என்ன தவறு என்ன பேஷன் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. பின்னூட்டங்களைக் குறிவைத்து 'அவளோட ராவுகள்' என்பது போன்ற தலைப்புகளை நான் பதிவுகளுக்கு வைக்கவில்லை!

வலைப்பதிவுகள் என்னைப் பொருத்தவரை என் மனப் பதிவுகளாகவே பார்க்கிறேன். எழுத்தில் உச்சத்தை எட்டும் எண்ணம் எனக்கில்லை. நான் அறிந்த மொழியை வைத்து எனது சிந்தனைகளைப் பதித்து வைக்கவே - ஒரு நினைவூட்டலாகவே எனது பதிவுகளைப் பாதிக்கிறேன். என் எண்ண அலைகளின் நேர் கோட்டில் சில நண்பர்களும் இருக்கிறார்கள் என்று வந்து பார்த்த்ப் படித்துப் பின்னூட்டமிடுபவர்களிடமிருந்து அறிந்து கொள்கிறேன். இதற்கு மேல் - இலக்கிய மொழியில் சொல்வதானால் - என்னுடைய எழுத்தை 'தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் சாதனம்' என்றெல்லாம் வார்த்தை ஜாலங்கள் காட்ட எனக்குத் தெரியாது. சரியோ தவறோ உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, எனது படம் காட்டும் பதிவுகளை - குறைந்த பட்சம் எனக்காகவாவது - நான் தொடரத்தான் போகிறேன்.

சரி இப்பதிவுக்கு வருகிறேன்.

சிற்பம், சிலை என்றாலே நம்மூரில் லட்சக்கணக்கில் நிறைந்திருக்கும் கோயில் சிற்பங்களும் சிலைகளும் நினைவுக்கு வரும். மிகுந்த அழகுணர்ச்சியுடன் வடிவமைக்கப்பட்டவை அவை. ஒவ்வொரு சிற்பமும் சிலையும் நுணுக்கமாக அபார கலைத்திறனுடன் இக்கால நவீனங்களுக்குச் சவால் விடும் வகையில் செதுக்கியிருப்பார்கள். வடிவத்தில் நளினமாக அழகாக அமைக்கப்பட்ட இச்சிற்பங்களின் முகங்கள் தெய்வீகக் களையுடன் அழகாக இருக்கும். சிலைகளைப் பொருத்தவரை கற்சிலைக்ளும் உலோகச் சிலைகளும் நம்மூரில் உண்டு. வேறு பொருளை வைத்துச் சிலை செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

வட இந்திய முறைப்படி அமைக்கப்பட்ட கோயில்களின் சிற்பங்கள் பளீரென்ற வெண்மையுடன் ஓவியங்கள் போன்றே வண்ணமயமாக அழகாக இருக்கும். அங்கு கற்சிலைகள் கிடையாதோ? இல்லை. தென்னகம் போல எப்போதும் ஏதாவது திரவத்தை ஊற்றி அபிஷேக ஆராதனைகள் செய்யும் வழிபாட்டு முறைகளை வடக்கே பாவிப்பதில்லையோ?. நான் பார்த்தவரை சிறு எண்ணை தீபங்கள், மலர்கள் வைத்து வழிபடுவதோடு சரி. எண்ணை, பால், நெய், என்று விதவிதமாகக் கடவுளைக் குளிப்பாட்டுவதில்லை போல. இதற்கு ஏதாவது பின்னணி இருக்கும்.

இக்காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றியும், பெண் சுதந்திரம் குறித்தும் நிறைய எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். கவிஞர்கள் கவிதை இயற்றுகிறார்கள். ஊர்வலம் போகிறார்கள். கோஷம் போகிறார்கள். அக்காலத்தில் 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். ஒரு புறம் "மாதா பிதா குரு தெய்வம்" என்று தாயைக் கடவுளாகச் சித்தரித்து, பல பெண் தெய்வங்களைக் கும்பிட்டுக் கொண்டு, மறுபுறம் அடுப்படியில் அவர்களை அடைத்து, அடித்து நொறுக்கிக்கொண்டிருக்கும் குழப்ப சமூகத்தில் பெண்களுக்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லை.

இப்போது நவீனங்கள் பெருகி, எரிகிற கொள்ளியில் எண்ணை போல, விஞ்ஞான ரீதியாக வக்கிரங்களும் பெருகிவிட்டன. கோவணம் கட்டியவர்களிலிருந்து கோட் சூட் போடும் கோமகன்கள் வரை சந்துகளில் ஒன்றுக்கிருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பிளாட்பார மஞ்சள் பத்திரிகைகளிலிருந்து நவீனத்தின் அடையாளமான இணையம் வரை வக்கிரங்கள் பெருத்துப் பெருகி உச்சகட்டத்தை அடைந்து விட்டன. நாகரீகம் பல மடங்கு வளர்ந்திருக்கிறது என்று நம்பும் நவீனர்களாகிய நாம் "காட்டுமிராண்டிகள்" என்பதைக் கெட்ட வார்த்தையாக்கி விட்டோம். கேவலங்களும், வக்கிரங்களும், அநியாயங்களும், பொய்மைகளும், ஏமாற்றுதல்களும், அழிவுகளும் நிறைந்த இக்காலத்தில் சிக்கி உழன்றுக்கொண்டிருப்பதை நினைக்கும் போது, 'நான் ஒரு காட்டுமிராண்டியாகப் பிறந்திருக்கக் கூடாதா?' என்று சில சமயங்களில் தோன்றுகிறது.

எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்றுவிட்டேன்.

பெண்களுக்கான கொடுமைகள் பற்றிப் பக்கம் பக்கமாக கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று படித்து ஏற்பட்ட தாக்கத்தைவிடப் பன்மடங்கு தாக்கத்தை சில விநாடிகளே எடுத்துக்கொண்ட ஒரு காட்சி ஏற்படுத்தியது. எந்த வித விளக்கமும் தேவைப்படாத முகத்திலறையும் தாக்கத்தை இச்சிற்பம் ஏற்படுத்தியது. பார்த்த கணத்தில் மனம் அதீத வேகத்தில் காலச் சுழலில் சிக்கி எங்கெங்கோ சென்றது. அப்போது நான் உணர்ந்ததை எழுத்தில் வடிக்க மொழி போதாது என்றுதான் தோன்றியது. விளக்க முனைந்து உணர்வை நீர்த்துப் போகச் செய்வதை விட, உங்கள் உணர்வுகளுக்கே விட்டுவிடலாம் என்று நினைத்து இதோடு நிறுத்திக்கொள்கிறேன். இனி உங்கள் விழிகளும் மனமும் தொடர்ந்து வாசிக்கட்டும்!

Friday, November 11, 2005

மெர்க்குரிப் பூக்கள்-24 : இதுவும் Breath-taking காட்சிகள்.. ஆனால்..

பெய்ரூட் கார்னிஷ்ஷின் மெய்மறக்கச் செய்யும் காட்சிகளைச் சென்ற பதிவில் பார்த்தோம். இந்தப் பதிவு எதிர்மறையானது.

வன்முறை, கொலை, கொள்ளை, துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு என்று அனுதினமும் செய்திகளை ஊடகங்களின் வாயிலாகக் கேட்டும், பார்த்தும், படித்தும் வருகிறோம். நம்மில் எத்தனை பேர் ஒரு நிஜத் துப்பாக்கியைக் கையில் எடுத்துப் பார்த்திருப்போம்? (என்சிசி பயிற்சியின் ரைபிள்களெல்லாம் இதில் சேர்த்தியில்லை). எத்தனை பேர் துப்பாக்கிச் சூட்டைப் பார்த்திருப்போம்?

லெபனானின் நடந்த நீண்ட கால உள்நாட்டுப்போர் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்கக் கூடும். 1975-இல் தொடங்கித் தீவிரமாக நடந்த உள்நாட்டுப் போரை கட்டுப்படுத்தி நிறுத்துவதற்காக சிரியா தனது ராணுவத்தை 1976-இல் அனுப்பியது. போர் முற்றிலுமாக நின்றது எப்போது தெரியுமா? 1990-இல். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததும் சிரிய ராணுவத்தினர் திரும்பிவிடவில்லை. அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் சிரியா லெபனானை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சிரியா கிட்டத்தட்ட 40,000 வீரர்களை அங்கேயே நிலைநிறுத்தியிருந்தது.

ஈராக் ஆக்கிரமிப்புப் போரில் பெரியண்ணனுக்குப் பெருந்தலைவலியாக இருப்பது சிரியா, லெபனான் மூலமாக ஈராக்கில் ஊடுருவும் போராளிகள்தான். பாலஸ்தீனத்திற்கும் தொடர்ச்சியாகக் கொடுத்துவரும் ஆதரவினால் சிரியா மீது பெரியண்ணனுக்கு ஒரு கண் இருந்துகொண்டே இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஐ.நா. மூலமாகத் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தும், சிரியாவுக்கு எதிர்ப்பு நிலை எடுத்திருக்கும் லெபனானிகளை வேண்டப்பட்டத் தலைவர்களைக் கொண்டு தூண்டிவிட்டு எதிர்ப்புப் பேரணிகள் நடத்தியும் வந்த பெரியண்ணனுக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் லெபனானின் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரி (Rafik Hariri) பெய்ரூட்டில் படுகொலை செய்யப்பட்டது சரியான வாய்ப்பாக அமைந்துவிட்டது. சிரிய எதிர்ப்பு அணியினர் போராட்டங்களைத் தீவிரப் படுத்த, ஐ.நா. நெருக்கடியை மேலும் அதிகரிக்க வேறு வழியில்லாமல் தனது படையினர் முழுவதையும் சிரியா இந்த ஆண்டு மத்தியில் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டது. அவர்கள் லெபனானில் இருந்தது 29 வருடங்கள்!

லெபனான் 1926 வரை சிரியாவின் அங்கமாக இருந்தது தெரியுமோ?

கிட்டத்தட்ட 60% முஸ்லீம்களும் 40% கிறிஸ்துவர்களும் வாழும் நாடு லெபனான். உள்நாட்டுப்போரில் இரண்டு மதத்தவர்களுக்கும் கடுமையான மோதல்கள் ஆங்காங்கே. முந்தைய பதிவில் குறிப்பிட்ட நண்பன் ராயித் தோமா அப்போது 12 வயதுச் சிறுவன். அவன் கிறிஸ்துவ மதம். "இயந்திரத் துப்பாக்கிகளின் குண்டு மழையில் வளர்ந்தேன்" என்றான்.

"எதிர் குடியிருப்பிலிருந்து அவர்கள் சுட, நான் என் தந்தையின் பின்னே ஒளிந்திருப்பேன். எங்களவர்கள் இங்கிருந்து தொடர்ந்து சுடுவார்கள். யார் கை ஓங்கும் என்று கணிக்கவே முடியாது. அவ்வப்போது 'ஏசுவே' என்றும் 'அல்லா' என்றும் அலறல்களைத் தொடர்ந்து தொப் தொப்பென்று மனிதர்கள் கீழே விழும் சத்தம் கேட்கும். சடசடவென்று துப்பாக்கிகள் குண்டு மழை பொழியும். முதலில் பயமாக இருந்தாலும் சில நாள்களில் பழகிவிட்டது. ஆனாலும் அந்தச் சடசட சத்தம் கேட்கும்போதும், வெகு அருகில் சுவர்கள் துளைக்கப்பட்டுச் சிதறும்போதும், கொட்டும் ரத்தத்தையும் சடலங்களையும் பார்க்கும்போதும் இதயத்தை யாரோ பிடுங்குவது போலிருக்கும்" என்று நிலைகுத்திய கண்களோடு அவன் சொன்ன போது - அவனைப் போல ஆயிரக்கணக்கான குழந்தைகளும் சிறுவர்களும் மனரீதியாக அடைந்திருக்கும் பாதிப்பை ஓரளவு உணரமுடிந்தது.


மசூதிகள் நிறைந்த முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியும், தேவாலயங்கள் நிறைந்த கிறிஸ்துவ பகுதியும் பெய்ரூட்டில் பயணிக்கையில் மாறி மாறி வருகின்றன. காற்றிலேயே ஒருவித இறுக்கம் கலந்திருப்பது போன்ற பிரமை.

"போர் முடிந்துவிட்டாலும் பகை நீறு பூத்த நெருப்புதான்" என்றான் ராயித்.

உள்நாட்டுப் போரின் மிச்சங்களைப் பார்த்த போது திகிலாக இருந்தது.

கோலம்போட வைத்த புள்ளிகள் வைத்தாற்போல, சுவர்களில் இயந்திரத் துப்பாக்கிகள் சல்லடையாகத் துளைத்துப் போட்ட குண்டுத் துளைகளை வருடியபோது என் கைகள் நடுங்கின. இதயம் கனத்தது.
இன்னும் வரும்...

Thursday, November 10, 2005

மெர்க்குரிப் பூக்கள்-23 : Breath-taking Beirut!

"Breath-taking views" என்று படித்திருக்கிறேன். அது எப்படி இருக்கும் என்பதை பெய்ரூட் கார்னிஷ்க்குச் சென்ற போது உணர்ந்து கொண்டேன். கடலையொட்டிய விமானதளத்திலிருந்து இறங்கியதும் கார்னிஷ் பகுதிக்குச் சென்றோம். என்னுடன் ராயித் தோமா என்ற சக-அலுவலன் - லெபனான் தேசத்தவன் - வந்திருந்தான்.

ராயித் என்றால் "ஓய்வின்மை" என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்குப் பரபரப்பானவன். "ஓய்வின்மை" என்ற தன்மையோடும், aggressive-ஆகவும் சில நபர்கள் இருப்பதற்கு அவர்கள் வளர்ந்த பின்புலம் முக்கிய காரணம். ராயித்துக்கும் - அவனைப் போன்ற ஆயிரக்கணக்கான லெபனானிகளுக்கும் முக்கிய காரணம் லெபனானில் நீண்டகாலமாக நடைபெற்ற உள்நாட்டுப் போர் - அச்சூழ்நிலையில் உயிரைக் காத்துக்கொள்ளும் சவாலுடன் நீண்ட காலம் வாழ்ந்த குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், வளர்ந்தபின்பு அவர்களது செயல்பாடுகளில் அந்த அனுபவம் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கும். ராயித்திடம் நான் இதைக் கண்டிருக்கிறேன். சட்டென்று உணர்ச்சிவசப்படும் மனோபாவமும் உண்டு இவர்களிடம்.

பெய்ரூட்டின் பரபரப்பான கார்னிஷ்ஷில் நின்றுகொண்டு கடலில் துண்டாடப்பட்டு நின்று கொண்டிருந்த இம்மலைகளைப் பார்க்கும்போது நெஞ்சடைத்தது. "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" என்று தோன்றியது.மஸ்கட்டில் இதே போன்று மலைத்துண்டுகள் கடலில் இருந்தாலும், பெய்ரூட்டில் உள்ளதைப் போல பிரம்மாண்டமானவை அல்ல. கார்னிஷ்ஷின் இந்த இடம் மிக உயரமான மலைப் பகுதி. எதிரே தோன்றும் இம்மலைகளின் உச்சியும், நான் நின்றிருந்த தரைப்பகுதியும் ஒரே மட்டம். கீழே பாதாளத்தில் கடல்!

கடற்கரை நீளமாக இருந்தாலும் இந்த இடம் மட்டும் உள்ளே வளைந்திருக்கிறது. அப்படியே வலதுபுறம் திரும்பி எடுத்த படம் இது.இடதுபுறக் காட்சி.

ஓரத்தில் எறும்பு அளவிற்கு மனிதர்கள் நிற்பது தெரிகிறதா?


கீழே எட்டிப்பார்த்து எடுத்த படம். ஏதோ காலடியில் கடல் அலைகள் வந்து முட்டுவது போலத் தோன்றினாலும் எதிரே உள்ள மலையின் உயரத்தின் அளவு என் கால்களின் கீழே ஆழத்தில் கடலலைகள்!


கொடைக்கானலில் "தற்கொலை முனை" என்று இருப்பது போல இதுவும் தற்கொலை முனையாம். இங்கேயிருந்து நிறைய பேர் குதித்துச் செத்திருக்கிறார்களாம். அலைகள் மலைகளில் மோதும் சத்தம் ஹாவென்று நிரந்தரமாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

நெடுக தடுப்புக்கம்பிகளால் வேலி போட்டு வைத்திருக்கிறார்கள். பின் என்ன மதில் சுவரா கட்ட முடியும்? (படத்திலிருப்பது நண்பன் ராயித் தோமா)


ஓரமாக நடந்துசென்று இயற்கையழகை ரசிக்க நல்ல நடைபாதையைக் கட்டி வைத்திருக்கிறார்கள். நடைபாதை சரேலென்று கீழே இறங்கி, ஒரு கி.மீ. தூரத்தில் கடல் மட்டத்திற்கு வந்துவிடுகிறது.

சிற்றுண்டி விடுதிகளும், பார்களும் நிறைய உள்ளன. இங்கே லாஸ்வேகாஸ் இரவு உலகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெய்ரூட்டிலும் இரவு உலகம் இயங்குகிறது. நூற்றுக்கணக்கான கேளிக்கை விடுதிகள். இரவில் கடற்கரையே ஒளி விளக்குகளால் ஜொலிக்கிறது. கடலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு விடுதியொன்றை எடுத்த படம்!

நிலம் வீடுகளின் விலை மிக மிக அதிகம் என்று சொன்னான் ராயித். புகழ் பெற்ற அரபுப் பாடகிகளும் பாடகர்களும் லெபனானிலிருந்து அதிக அளவில் வந்திருக்கிறார்களாம். அரபு பாப் இசையும் கொடிகட்டிப் பறக்கிறது. 24 மணி நேரமும் தொலைக்காட்சியில் MTV போல விளக்குகளின் ஒளி மழையில் அழகான நங்கைகள் பாடிக்கொண்டேயிருக்கிறார்கள். யுவன்களும் யுவதிகளும் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். துள்ளல் இசை!

அடுத்த பதிவில் இன்னும் சில Breath-taking படங்களுடன் வருகிறேன்.Wednesday, November 09, 2005

மெர்க்குரிப் பூக்கள் - 22: வெள்ளிப்பனி மலையின் மீதுலவுவோம்!


மேகங்களை அருகில் தரிசித்தாகிவிட்டது. மலைகளை விமானத்திலிருந்து பார்ப்பதும் புதிதில்லைதான். இந்த இடத்தில் ஒன்று குறிப்பிட வேண்டும்.

வளைகுடா நாடுகளுக்கு முதன்முதலில் சென்று இறங்கிய அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அனைத்திலும் பொதுப்படையான அம்சம் ஒன்று இருக்கிறது. துபாயோ, அபுதாபியோ, பஹ்ரைனோ, கத்தாரோ எதுவாக இருந்தாலும் விமானம் இறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அந்த நகரங்களின் பளபளப்பு உயர்ந்த கட்டிடங்களிலும் சீரான சாலைகளிலும் தெரிய வந்துவிடும். இதில் மஸ்கட் சற்று வித்தியாசமானது.

சுற்றிலும் மரம் செடிகொடிகள் எதுவும் முளைக்காத மலைத்தொடர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? கடற்கரையை ஒட்டி இருந்தாலும் கரையைக் கடந்ததும் உடனடியாக மலைத்தொடர்கள் பெரும்பாலான இடங்களில் ஆரம்பித்துவிடும். விமானத்திலிருந்து பார்க்கும்போது வலது பக்கம் எல்லையில்லாதது போலத் தோன்றும் அரபிக்கடல். இடதுபக்கம் பார்த்தால் கொசகொசவென்று பழுப்பு நிறத்தில் மேடும் பள்ளமுமாய்க் காட்சியளிக்கும் மலைகள். அம்மலைகளைப் பார்க்கையில் ஏதோ செவ்வாய் கிரகத்தில் இறங்கப் போகிறோம் என்று தோன்றும். விமானத்தை நிறுத்தியதும் வாசலுக்கு அருகில் ஒட்டகத்தை நிறுத்தி முதுகில் இறங்கச் சொல்வார்கள் என்று எனக்குக் கற்பனை ஓடியது!

நிற்க.

லெபனானின் பெய்ரூட்டிற்குச் சென்றபோது - காணும் திசையெங்கிலும் மலைத் தொடர்கள். ஓமான் போன்றில்லாது இங்கு மரங்களையும் காண முடிந்தது. த்ரிபோலி (Tripoli) யைத் தாண்டும்போது பார்த்தால் அதுவரை பசுமையாக இருந்த மலைஇப்படி லேசாக நரைக்கத் துவங்கி ,

இன்னும் நரைத்து,

கடைசியில் முழு நரையாகிவிட்டது.

ஆமாம் பனி பொழிந்திருக்கும் மலைத்தொடர்கள்.

பெய்ரூட்டிலும் கடற்கரையை ஒட்டிய விமான நிலையம். மஸ்கட்டிலாவது விமான நிலையத்திற்கும் கடலுக்கும் இடையே தாராளமான இடைவெளி உண்டு. பெய்ரூட்டில் சக்கரங்களை விரித்துத் தாழ்வாகப் பறக்கும்போதே கடலில் இறக்கப் போகிறார்கள் என்று கிலியைக் கொடுக்குமளவிற்கு ஓடுதளம் கடலைக் கிட்டத்தட்டத் தொடுமளவிற்கு இருக்கிறது. இப்போது வெள்ளிப் பனி மலைகள்! மற்றவை அடுத்த பதிவில்!