Thursday, November 17, 2005

மெர்க்குரிப் பூக்கள்-30 : அமீரகம் - அபுதாபி


பெரிதாக்கிப் பார்க்க

தீப்பெட்டிகளை அடுக்கியது போன்று வரிசையாக வானத்தைச் சுரண்டும் (மனசாட்சி: "சே.. skyscrappers-ஐ இப்படியா தமிழாக்கம் செய்வது!") உயரமான கட்டிடங்கள். மொத்தமே நான்கு தெருக்கள் இருக்கும் போலிருக்கிறது - பிரமை. நவீனத்தின் உச்சத்தில் மிளிர்கிறது அபுதாபி (வடிவேலு சொல்வது 'அபிதாபி'). ஐக்கிய அரபு நாடுகளின் தலையகம். கையால் தோண்டினாலேயே எண்ணை வந்துவிடும் போல - அபரிமிதமான எண்ணை வளம். பெரிய பூங்காக்கள், தோட்டங்கள், சாலையோரங்களில் பச்சைப் புல்வெளி, கடல்நீரை மூக்கணாங்கயிறு போட்டுக்கொண்டு வந்து நீல வண்ணத்தில் தேக்கியிருக்கும் கார்னிஷ், அட்டகாசமான சாலைகள், தொலைதொடர்பு மற்றும் இன்னபிற உள்கட்டுமான வசதிகள், பன்னாட்டு நிறுவனங்களின் ஆடம்பர ஹோட்டல்கள், பெரிய ஷாப்பிங் மால்கள் போன்ற நவீனங்களோடு, கலாசாரத் துறையும் சிறப்பாக இயங்கி, சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது.

கார்னிஷ் சாலையில் அபுதாபியிலேயே உயரமான கட்டிடங்கள். ஆரக்கிள் கார்ப்பொரேஷன் தங்க நிறக் கண்ணாடிகளால் வேயப்பட்ட கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்ன.. கைப்பேசி அலைவரிசை கிடைக்காமல் சில சமயத்தில் வேலை செய்யாது. இல்லாவிட்டால் கண்ணாடிச் சுவரோரம் நின்றுகொண்டு ஹலோ ஹலோ என்று கத்த வேண்டும்.

பெரிதாக்கிப் பார்க்க
மஸ்கட், துபாய் போலவே அபுதாபி ஷாப்பிங் திருவிழாவும் வருடாவருடம் விசேஷமாக நடைபெறும். அபுதாபி விமான நிலைய வளாகம் வட்ட வடிவமாகக் கட்டப்பட்டு வருடம் முச்சூடும் ஒரு மில்லியன் திர்ஹாம் குலுக்கலுக்கு லாட்டரிச் சீட்டை விற்றுக்கொண்டு, வாசனை திரவியங்கள், சிகரெட், சுருட்டு, சோம சுரா பானங்களை, மின்னணு சாதனங்கள், நவீன கார் ஒன்று நடுநாயகமாக நிறுத்தப்பட்டு, பளபள கடைகளில் ஏகமாக விற்றுக் கொண்டு திருவிழா போல 24 மணி நேரமும் கூட்டம் அம்மிக்கொண்டு பரபரப்பாக இருக்கிறது.

பார்க்க சிறியது போன்று தோற்றமளித்தாலும் ஏழு எமிரேட்டுகளில் அபுதாபியே பெரியது - அமீரகத்தின் தலைநகரும் கூட!

பஹ்ரைன் போலவே இங்கும் ஒரு காலத்தில் முத்துகுளிக்கும் தொழில் கொடிகட்டிப் பறந்து பின்பு நொடித்துப் போய் பொருளாதாரம் பாதாளத்திற்குச் சரிந்த சமயத்தில் எண்ணையைக் கண்டுபிடித்துவிட்டார்கள். எண்ணையை 1962-இலேயே ஏற்றுமதி செய்த முதல் எமிரேட் அபுதாபி. அமீரகத்தில் அதிக மக்கள் தொகையும் இங்குதான்.

மரங்களை அப்படியே நடுவதைப் பற்றி முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தேனல்லவா? இங்கும் மரங்களை நடுகிறார்கள். எவ்வளவு நட்டிருப்பார்கள் என்று சொல்கிறேன் - மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் - 12 கோடிக்கும் மேல்!!!!

2007-இல் திறப்பு விழா (அமைச்சர் யாரும் ரிப்பன் வெட்ட மாட்டார்கள்) காணும் ஷேக் ஸயீத் பின் சுல்தான் அல் நயன் (Sheik Zayed bin Sultan Al Nahyan) மசூதி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. 10000 பேர் ஒரே சமயத்தில் பிரார்த்தனை செய்யமுடியும். இரானிய கார்ப்பெட்டுகள் மிகவும் பிரசித்தம். அபுதாபியின் இந்த மசூதியின் பிரதான தொழுகை அறையை அலங்கரிக்க பிரம்மாண்டமான கார்ப்பெட்டை இரானியன் கார்ப்பெட் நிறுவனம் செய்யப் போகிறது - இயந்திரங்களில்லாது கைகளினால் நெய்யப்படப் போகிறது 5700 சதுர மீட்டர் அளவிலான அந்தக் கார்ப்பெட்!! இதைச் செய்து முடிக்க ஆயிரம் நெசவாளர்களும் இரண்டு வருட காலமும் ஆகும். முடித்ததும் உலகிலேயே கையால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய கார்ப்பெட் என்ற பெருமையும் அதற்குக் கிடைத்துவிடும்.

அமெரிக்காவில்தான் எல்லாம் பெரிதாக இருக்கவேண்டுமா என்ன? :)

என்ன இந்தப் பாழாய்ப் போன வெயில் ஒன்றுதான் ஆளைக் கொல்கிறது. இந்த ஊரில் மட்டும் கொடைக்கானல் போல தட்பவெப்பம் நிலவினால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் யார் போகப் போகிறார்கள்?
***

6 comments:

supersubra said...

skyscrapper - வானளாவிய அல்லது விண்முட்டும் அல்லது வானம் வருடும் என்று சொல்லலாமே

Anonymous said...

Sundar,

Do you work for oracle?

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//Do you work for oracle? //

No.I'm not. But I used to visit them very often for various meetings in Dubai and Abudhabi.

I work for a Private Company looking after the Oracle Practice.

Thanks.

tbr.joseph said...

உங்களுடைய Photosம் வர்ணனைகளும் பிரமாதம் சுந்தர்.

வாழ்த்துக்கள்.

உங்களுடைய Photoபதிவுகள் தொடரட்டும்.

அப்டிப்போடு... said...

//இந்த ஊரில் மட்டும் கொடைக்கானல் போல தட்பவெப்பம் நிலவினால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் யார் போகப் போகிறார்கள்?//

நல்ல ஆசை உங்களுக்கு., காத்து கொஞ்சம் நல்லா வீசனும்னு ஆசையிருந்தா சரிங்கலாம்... கொடைக்கானல் மாதிரி....ம்...வழக்கம் போல படமும்., பதிவும் நல்லா இருக்கு.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே.

//காத்து கொஞ்சம் நல்லா வீசனும்னு //

அது சரி. கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் நம்மூர்லயே 'கொஞ்சம்மழை பேஞ்சா தேவலை'ன்னுகூட ஆசைப் பட்டோம். இப்போ அடிச்சு ஊத்துதே. அதே மாரி கொஞ்சம் சூடு கொறஞ்சு கொடைக்கானல் மாதிரி ஆவட்டும்னு ஆசப் படறோம். யாராச்சும் ததாஸ்துன்னு சொல்ல மாட்டாங்களான்னு நப்பாசதான்! :)