Friday, December 30, 2005

நியூயார்க் # 1 (Thanksgiving Day)


சென்ற Thanksgiving Day விடுமுறையில் நியூயார்க்குக்குப் போகலாம் என்று முடிவெடுத்து பிரயாண ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தேன். "அம்புட்டுப் பயலுவளும் அங்கிட்டுத்தான் போவாய்ங்க. பயங்கர ட்ராபிக் ஜாம் இருக்கும். பாத்துப் போ" என்ற நண்பரின் எச்சரிக்கையை மனதில் கொண்டு, வியாழனன்று அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்துகொண்டு உறங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை அப்படியே பின்னிருக்கைகளில் உட்காரவைத்துவிட்டு பொட்டிபடுக்கைகளை எடுத்துக்கொண்டு கிளம்பும்போதே அட்சதை போன்று பனிப்பொழிவு ஆரம்பித்திருந்தது. Mass Pike இல் 70 மைல் வேகத்தில் வண்டியை விரட்டினால் ஒரு பயலையும் காணோம். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில வண்டிகள் அவ்வளவே.

ஆனால் கனெக்ட்டிக்கெட் மாநிலத்தில் நுழைந்ததும்தான் பிரச்சினை. மழை அடித்து நொறுக்க, கடும் பனிப்பொழிவு. சாலையின் இருபுறமும் ஒன்றும் தெரியவில்லை. சாலையின் மூன்று வழித்தடங்களில் நடுத்தடத்தில் முன்னே சென்றுகொண்டிருந்த லாரியின் சிவப்பு விளக்குகளை அடையாளம் வைத்துக்கொண்டு ஊர்ந்துதான் செல்ல வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 45 நிமிடம் அப்படியே சென்றுவிட்டு, நியூயார்க் எல்லைக்குள் நுழைந்தது மழை பனி ஒன்றுமில்லாமல் சுத்தமாக இருந்த சாலையில் வண்டியை மறுபடியும் விரட்டி Queens பகுதியில் இருக்கும் நண்பரது வீட்டுக்குச் சென்று சேர்ந்த போது மணி ஏழே முக்கால்தான் ஆகியிருந்தது!!! இதற்குத்தான் அவ்வளவு பயமுறுத்தினார்களா என்று இருந்தது. நடுவில் எங்கும் ஒரு நிமிடம்கூட நிறுத்தவில்லை.

ஒன்பது மணிக்கு Thanksgiving Procession எனப்படும் பிரபலமான ஊர்வலம் ஆரம்பித்து நகர்வலம் வருவார்கள் என்று சொல்லியிருந்தனர். அவசர அவசரமாகக் கிளம்பி ஜமைக்கா 179-இல் வண்டியை நிறுத்திவிட்டு சாலையின் ஓரத்தில் சரேலென்று இறங்கிய படிக்கட்டுகளுக்குள் போனால் Subway என்றழைக்கப்படும் தனியுலகம். பாதாள ரயில்களைப் பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. அடியில் இவ்வளவு பெரிய ரயில்களின் இயக்கங்களின் அறிகுறி எதுவும் மேலே இல்லாமல் சாலையோரத்தில் பத்துக்குப் பத்து அளவில் படிக்கட்டுகள் மட்டும் தெரிகின்றன. நம்மூரில் பிரம்மாண்ட நிலப்பரப்பில் அமைந்திருக்கும் ரயில் நிலையங்களைப் பார்த்துப் பழகிவிட்டு, நியூயார்க்கின் Subway-யைப் பார்த்தால் உண்மையாகவே ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்து 47-ஆம் தெரு (எல்லா நிறுத்தளின் பெயர்களும் கிட்டத்தட்ட ஏதாவது ஒரு தெரு எண்ணிலோ பெயரிலோ இருக்கிறது)வுக்குச் சென்று பார்த்தால் ஊர்வலம் தாண்டிப் போய்விட்டது என்று சொன்னார்கள்.
பின்பு பாதாள ரயிலைப் பிடித்து மறுபடியும் 42-ஆம் தெருவுக்குச் சென்று அம்மிக்கொண்டிருந்த கூட்டத்தில் புகுந்து கடந்து சென்றுகொண்டிருந்த ஊர்வலத்தைப் பார்த்தோம்.வானத்தில் ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. குளிர்காற்று முகத்தை விறைக்கச் செய்தது.
பெரிய பெரிய பொம்மை பலூன்களோடு ஆட்டமும் பாட்டுமாகக் கடந்துசென்ற ஊர்வலத்தைக் குழந்தைகள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தார்கள்.திரும்பி நான்கைந்து கட்டிடங்கள் கடந்து நடந்தால் Empire State Building என்றழைக்கப்படும் அந்தப் புகழ்பெற்ற பளபள கட்டிடம். கழுத்துவலிக்க அண்ணாந்து பார்த்தால் ஊசியாக முடிந்தது.


உள்ளே செல்ல நின்றிருந்த பெரிய வரிசையில் இணைந்து பெரிய முஸ்தீபுகளுடன் சீட்டு வாங்கிக்கொண்டு அந்த லிப்டில் நுழைந்தோம். 86-ஆம் மாடிக்குக் கொண்டுபோய் விடுகிறார்கள் - அதிவேகத்தில். அங்கிருந்து அடுத்த 6 மாடிகளுக்கு இன்னொரு லிப்டைப் பிடித்துச் செல்ல பார்வையாளர் மாடத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.


Saturday, December 17, 2005

* மெர்க்குரிப் பூக்கள்-35 : சிரியா # 2 (Final) *


* மெர்க்குரிப் பூக்கள்-35 : சிரியா # 2 (Final) *

ஹாம்ஸ்ஸின் சிற்றுண்டி விடுதியில் உணவு எதுவும் கிடைக்காதது ஏமாற்றம். அவசரத்திற்கு தேனீர் பருகிவிட்டு மறுபடியும் வண்டியை விரட்டியதில் 'ஹமா' (Hama) என்று இன்னொரு நகரத்தையடைந்தோம். வண்டியை நிறுத்தி இறங்கியதும் லேசான கிர்ரென்ற சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், பொருட்காட்சித் திடல்களில் பார்க்கும் Giant Wheel போன்ற ராட்சத மரச்சக்கரம் ஒன்று மெதுவாய்ச் சுற்றிக்கொண்டிருக்க, அது ஒரு தடாகம். எங்கிருந்தோ வந்த நீர் தடாகத்தில் கலக்க, மரச்சக்கரம் மெதுவாய் நீரை இறைத்து ஒரு சிறிய கால்வாயில் செலுத்திக்கொண்டிருந்தது. தடாகத்தின் கரையில் அமைந்திருந்த உணவகத்தில் நுழைந்து, கூட வந்தவர்கள் மாமிசத்தைப் போட்டுத் தாக்க, சைவபட்சிணியாகிய நான் இலை, தழை என்று கிடைத்த காய்கறித் துண்டுகளையும் அருமையான உப்புச் சுவை கூடிய அரபி அரிசிச் சோற்றையும் கால்சராயைத் தளர்த்திவிட்டு, நிமிர்ந்து அமர்ந்துகொண்டு கழுத்துவரைச் சாப்பிட்டேன்.


அரைமணி நேர ஓய்விற்குப் பின் மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்து மேகங்களில்லா நீல வானையும், இருபுறமும் பரந்திருந்த பச்சை வயல்வெளிகளையும் ரசித்துக்கொண்டே அலெப்போ (Aleppo) நகரை அடைந்து 'சாப்பா சாம்' (Chabba Cham) என்ற விடுதியில் அறை எடுத்துக்கொண்டு படுக்கையில் விழுந்ததும் உடனே உறங்கிப்போனேன். டமாஸ்கஸ்ஸிலிருந்து அலெப்போ நகரை சாதாரணமாக மூன்றரை மணி நேரத்தில் சாலைவழிப் பயணத்தில் அடைந்துவிடலாம். எங்களுக்குப் பனிப்பொழிவினாலும், தொடர் மழையாலும், எட்டு மணி நேரம் ஆகியிருந்தது.அலெப்போ ஒரு சுவாரஸ்யமான நகர். சிரியாவின் நில அமைப்பே மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த ஒன்று. மலைகள் என்றால் வானுயர்ந்த மலைகள் இல்லை. மேடுகளும் பள்ளங்களுமான பிரதேசம் என்றும் சொல்லலாம். நான் பார்த்தவரை சமவெளிகளே தென்படவில்லை. பலவித முக அமைப்புகளுடன் மிகச்சிவந்த தோலுடைய மக்கள். ஃபிரெஞ்சுக்காரர்களின் தாக்கம் மிகமிக அதிகம். வயதானவர்கள் அரபியோடு ஃபிரெஞ்சும் பேசிட, இளைஞர்கள் இப்போதுள்ள நியதிப்படி ஆங்கிலம் கற்று, பேச விழைகிறார்கள். இருந்தாலும் ஆங்கிலம் பேசும் நபர்களைச் சந்திப்பது அரிது! ஐந்து வருடங்களாக மஸ்கட்டிலிருந்தும் அரபி கற்றுக்கொள்ளாத சோகத்தை அடிக்கடி உணரவேண்டியிருந்தது சிரியாவில். சாப்பா சாம்-மிலிருந்த குட்டித் திரையரங்கில் Just Married என்ற அலைபாயுதே படம். ஃப்ரெஞ்சு மொழியில் சப்-டைட்டில்களுடன், ரசிக்கமுடிகிற ஜாலியான படம் அது! (சப்-டைட்டிலுக்குத் தமிழில் என்னவென்று நண்பர் கேட்டதற்கு நான் 'கிராமத்துத் திரையரங்குகளில் படம் துவங்கும் நேரத்தில் தாமதமாக அவசர அவசரமாக வரும் நபர்கள் இருட்டில் இருக்கையைத் தேடியமர்ந்ததும் அருகிலமர்ந்திருக்கும் நபரிடம் 'படம் போட்டு ரொம்ப நேரமாயிடுச்சுங்களா?' என வினவ அவர் திரையிலிருந்து பார்வையை விலக்காது 'இல்லைங்க. இப்பத்தான் 'எழுத்து' போட்டு முடிச்சாய்ங்க' என்பார்- 'எழுத்து' என்றே வைத்துக் கொள்ளலாம்!' என்று எழுதிய ஞாபகம். தலைப்பு- டைட்டில், துணைத் தலைப்பு- சப்-டைட்டில்! இதற்கு 'எழுத்து'-ஏ தேவலாம்போல. :))இரவில் கையுறைகளையும் தடிமனான ஜெர்க்கினையும் அணிந்துகொண்டு மூக்கு நுனி வலிக்க, புகை சுவாசம் விட்டுக்கொண்டு ஒரு நடை நடந்ததில் முட்டிக்கு முட்டி குளிர் வலித்தது. கடையில் எதையாவது வாங்கலாம் என்று ஒரு பலசரக்குக் கடையில் நுழைந்து பலவித அபிநயங்கள் செய்து முயன்றதில் படுதோல்வி. கடைக்காரர் பரிதாபப் பட்டு, 'உள்ளே வந்து பார்த்து வாங்கிக்கோ' என்று அனுமதித்து அருள் பாலித்தார்.

மஸ்கட்டில் எங்குபார்த்தாலும் இந்தியர்கள். இந்தியக் கடைகள். இந்தியச் சிப்பந்திகள். இந்தியப் பொருள்கள். ஒரு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே வராத அளவு இந்தியத் தாக்கம் இருக்கும் ஊர். அவ்வப்போது ஒழுங்கான சாலைகளும், சுத்தமும் மட்டுமே இது வெளிநாடு என்று நினைவுபடுத்தும். ஒரு வெளிநாட்டினன் என்ற உணர்வே இங்கு ஏற்பட்டதில்லை. அதற்கு இரண்டாவது காரணம், நம்மூரில் இப்போது ஆகிவிட்டதைப் போல, இங்கும் வருடம் முழுதும் நிலவும் வறண்ட வானிலையும் கூட என்று நினைக்கிறேன். ஆனால் அலெப்போவின் குளிர் ஊட்டி, கொடைக்கானலையெல்லாம் மிஞ்சி பூஜ்யத்திற்குக் கீழே இருந்ததால் சகலமும் விறைத்துப்போய், பற்கள் தந்தியடிக்கப் பேசி, மூக்கில் நீர் வழிந்து, மொழி புரியாது முட்டி மோதியதில், ஒவ்வொரு வினாடியும் நான் ஒரு வெளிநாட்டில் இருக்கிறேன் என்ற உணர்வைத் தந்துகொண்டே இருந்தது. போதாக்குறைக்கு ரோஜா முகங்களுடன் சிரியர்கள்! அவ்வப்போது தேவையில்லாமல் இதயத்தைத் திருடாதே படம் நினைவிலாடி ஷூக்களின் லேஸ் ஓட்டைகளின் வழியாக நீர் பீய்ச்சியடிக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன்.

நெரிசலான நகரமையத்திற்கு (City Center) ஒரு டாக்ஸியில் சென்று இறங்கிக்கொண்டு மறுபடியும் ஒரு நடை. மதுரை டவுன்ஹால் ரோட்டிற்கு ஈடாக அடைசலாகக் கடைகளும் கார்களும் பாதசாரிகளும். நடுவே சில திரையரங்குகளில் நம்மூர் ஷாருக்கான் அரபி எழுத்துகளில் போஸ்டர்களில் சிரித்துக்கொண்டிருக்க இன்னும் சில ஹிந்திப் படங்களும் ஓடிக்கொண்டிருந்தன. என் முகத்தைப் பார்த்ததும் 'ஓ...ஹிந்த்?? கம் கம்' என்று அழைத்துப் பார்த்தனர். எனக்கும் ஹிந்தியும் அரபி அளவே தெரியும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நான் சந்தித்த பெரும்பாலான சிரியர்கள் முதலில் கேட்ட கேள்வி 'நீங்கள் பாக்கிஸ்தானிலிருந்து வருகிறீர்களா?' என்பதுதான். நானும் சலிக்காமல் 'இல்லை. இந்தியா.. ஹிந்த்' என்று சொல்ல, அவர்களும் விடாப்பிடியாக 'எல்லாம் ஒன்றுதானே' என்றார்கள். ஆமாம் எல்லாம் ஒன்றுதானே!

அலெப்போவைப் பற்றிப் பலவிதமான கதைகளை, கூட பணிபுரியும் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். லெபனான் தேசத்துப் பெண்கள்தான் உலகிலேயே பேரழகிகள் என்று படித்திருக்கிறேன். எனக்கு என்னவோ பெய்ரூட் பெண்களைவிட அலெப்போ நகரத்துப் பெண்கள் மிகவும் அழகாகத் தெரிந்தனர். 'அலெப்போவை ஃபிரெஞ்சுக்காரர்கள் படையெடுத்துக் கைப்பற்றி, ஆண்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, பெண்களனைவரையும் புணர்ந்துவிட்டுச் சென்றனர். இதுவே அவர்களது அழகின் ரகசியம்' என்று ராயித் தோமா ஒரு முறை சொல்லியிருக்கிறான். ராயித் தோமா ஜோர்டான் பாஸ்போர்ட் வைத்திருக்கும் லெபனான் நாட்டவன். ஆனால் அலெப்போ நகர வரலாறைப் படித்தபோது தெரிந்துகொண்ட விஷயங்கள் மனதைக் கனக்கவே செய்தன.அக்காலங்களில் அண்டைய நாடு மீது படையெடுத்துச் செல்லும் மன்னர்கள் எத்தகைய அழிவுகளை விளைவித்தனர் என்று பொன்னியின் செல்வனில் படித்திருக்கிறேன். மண்ணாசை பிடித்தலைந்து, பேரரசுகள் உருவாக்கப் போர்களில் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட மாவீரர்கள் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் அவர்களது வெற்றிக்கு அவர்கள் எவ்வளவு அழிக்கவேண்டியிருந்தது என்று எங்காவது விவரமாகப் படித்தோமா என்று கேட்டால் என்னைப் பொறுத்தவரை.. சட்.... பொருத்தவரை, 'இல்லை' என்றுதான் சொல்வேன். கங்கை கொண்டான் என்றும் கடாரம் கொண்டான் என்றும் பெருமையுடன் படிக்கிறோமேயொழிய அப்படிக் 'கொண்டதின்' அழிவுகள் எத்தனை துயரகரமானவை என்று எந்தப் பாடப்புத்தகத்திலும் சொல்லப்படவில்லை- அல்லது படித்த நினைவில்லை. ஏனென்றால் அது 'நமது வெற்றி'யாயிற்றே. தோற்ற எதிரி பட்ட துன்பத்தைப் பற்றி வென்றவனுக்கு என்ன கவலை? இவ்வளவு ஏன்? இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் பாடப்புத்தகத்தில், அதனால் விளைந்த கலவரங்களைப் பற்றியும், எண்ணற்ற உயிர்துறப்புகள் பற்றியும் எந்த அளவிற்கு விவரமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது? 'அரசன் அந்த நாட்டின் மீது படையெடுத்து நகரைச் சூறையாடி வெற்றி கொண்டான்' என்று சாதாரணமாகத்தான் பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சூறையாடலின் கொடூரம் எப்படியிருந்திருக்கும் என்று சூறையாடப்பட்ட இடத்தில் நின்று நினைத்துப் பார்க்கையில் ஓரளவு உணரமுடிகிறது.

இங்கு அனுதினமும் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் அரைப் பக்கத்திற்கு சிதைந்த உடல்களுடன் அரைக்கண்களுடன் கிடக்கும் பாலஸ்தீனியப் பச்சைக் குழந்தைகளின் படங்களைப் பார்க்கும்போதும் உணரமுடிகிறது. சிவப்புவண்ணப் படங்கள்.

இக்கரையிலிருந்து அக்கரையில் தெரியும் பசுமையைப் பற்றிச் சொன்ன பாடங்கள் அப்பசுமையின் வேர்களில் இரத்தம் தோய்ந்திருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. வேர்கள் போன்று அவ்விரத்தமும் மண்ணின் அடியில் மறைந்திருப்பதனாலோ என்னவோ?

***

Friday, December 16, 2005

* மெர்க்குரிப் பூக்கள்-34 : சிரியா # 1 *

சென்ற வருடம் பிப்ரவரியில் மறுபடி சிரியா போக வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்ததும், முந்தைய பயணத்தில் பார்க்காது விட்டவற்றை ('சைட்' அடித்தல் என்று நீங்களாகக் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பல்ல) இம்முறையாவது பார்க்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு கிளம்பினேன்- அதே அலுவலக நண்பர் நரேந்தருடன்!

போனமுறை பெட்டியைக் கோட்டை விட்டதை ஞாபகப்படுத்திக் கொண்டு இம்முறை லக்கேஜாக எதையும் போடாமல் ஒரு சிறு ட்ராலிப் பெட்டியில் அமுக்கி அமுக்கி அடைத்துக் கையிலேயே கொண்டுசென்று விட்டோம். 'ரொம்ப குளிர்றது. த்ரீ ட்டியர் ஆர்க்கிடெக்சர்-ல வந்துருங்கோ' என்று வாடிக்கையாளர் அலுவலகத்திலிருந்த ஒரே இந்தியர் எச்சரிக்கை செய்யவே ஆளுக்கொரு ஜெர்க்கினை வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

இம்முறையும் துபாய்க்குப் போய் அங்கிருந்து டமாஸ்கஸ் வழியாக அலெப்போ (Aleppo) செல்லவேண்டியிருந்தது. துபாயிலும், மற்ற எமிரேடுகளிலும் ஒரு வாரமாக காலை வேளைகளில் அளவுக்கதிகமான மஞ்சு படர்ந்து புகை மூட்டமாகக் கண்ணே தெரியவில்லை. இருந்தாலும் வழக்கமான வேகத்தில் பறந்து சென்று நிறைய இடங்களில் கூட்டங் கூட்டமாக வாகனங்கள் முட்டிக் கொண்டு விபத்துகளில் பலர் உயிர் துறந்து போனார்கள்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து இறங்க முடியாமலும், துபாயிலிருந்து கிளம்ப முடியாமலும் தவித்து ஆயிரக்கணக்கான பயணிகள் விமானநிலையத்தில் மாட்டிக்கொள்ள, நகரத்திலிருந்த அனைத்து விடுதிகளும் நிரம்பிவழிந்து, நிறைய அசெளகரியங்கள்.

மஸ்கட்டிலிருந்து காலையில் கிளம்பி துபாயை பதினொரு மணி போல் அடைந்தோம். இறங்குவதற்கு முன்பு, மேலிருந்து பார்க்கையில், நகரமெங்கும் புகைமூட்டமாக, மேகத்தின் மீது அமைக்கப்பட்ட நகரம் போல் காட்சியளித்தது துபாய். புகழ்பெற்ற எமிரேட்ஸ் டவர்ஸ் மேற்பாதி மட்டும் புகையிலிருந்து நீட்டிக் கொண்டு காட்சியளிக்க, அது ஒரு ரம்யமான காட்சி-ஆகாயத்திலிருந்து. எங்கள் விமானம் இறங்குவதில் சிரமமேதுமில்லை. ஆனால் நாற்பது நிமிடங்கள் கழித்து டமாஸ்கஸ்ஸிற்குக் கிளம்ப வேண்டிய விமானம், மற்ற தாமதக் குளறுபடிகளால், இரண்டு மணி நேரம் கழித்தே புறப்பட்டது. எங்களையும் இறங்க விடாததால் பங்கரைகளாகத் தலையைச் சொரிந்துகொண்டு விமானத்திலேயே அமர்ந்திருந்தோம்.

டமாஸ்கஸ்ஸிலிருந்து அலெப்போவிற்கு விமானம் கிடைக்காததால் சாலை வழிப் பயணம் செய்ய முடிவெடுத்து டமாஸ்கஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வினாடியில் முகமும் கைவிரல்களும் கிட்டத்தட்ட உறைந்து போய்விட, அறைந்தது குளிர். பஞ்சாலை இருக்குமிடங்களில் காற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பஞ்சுத் துகள்கள் விரவியிருப்பது போல, விமான நிலையத்தின் வெளியே தூசு போல விழ ஓட்டுனர் 'பனி பெய்யுது' என்றார். இதான் பனியா என்று எனக்குச் 'சே' என்று இருந்தது. வாழ்க்கையில் இதுவரை பனிப்பொழிவைப் பார்த்ததில்லை என்று முன்பு குறிப்பிட்டதை நினைவூட்டிக் கொள்ளவும்.

நான் ஏதோ பனிப்பொழிவென்றால் ரோஜா படத்தில் வருவதைப் போல 'புது வெள்ளை மழை' என்று பாடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த மட்டில் குளிரவாவது செய்கிறதே என்று சமாதானமாகிக் கொண்டு காரில் ஏறிக் கொள்ள நகரத்தைக் கடந்து பிரதான நெடுஞ்சாலையில் பயணிக்கத் துவங்கினோம். சூரியன் பிரகாசமாக வெம்மையின்றி ஒளிர்ந்தான். கட்டிடங்கள் கரைந்து வெட்ட வெளியில் வண்டி ஓடத் துவங்கியதும் தொலைவில் மலைத் தொடர்களைப் பார்த்தேன். நரைமயிர் போன்று அவற்றின் தலையில் வெளிர் சாம்பலாகப் படிந்திருக்க, அது பனி என்று உறைக்கச் சற்று ஆர்வம் கிளம்பியது. இப்போது சூரிய ஒளி குறைந்து பஞ்சுத் துகள்களில் அடர்த்தி அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. லேசாக சன்னல் கண்ணாடியை இறக்கிப் பார்க்க காற்றின் வேகமும் அதிகரித்து வருவதை உணர்ந்தோம்.

டமாஸ்கஸ்ஸிலிருந்து அலெப்போவிற்குச் சாலைவழிப் பயணம் மூன்றரை மணி நேரம் பிடிக்கும். நாங்கள் ஒரு பதினைந்து கிலோமீட்டர்கள் கடந்திருப்போம். சாம்பல் தொப்பிகள் போட்டிருந்த மலைத் தொடர்களில் சாம்பல் மறைந்து வெண்மை கூடிக்கொண்டே வந்து, தொப்பி முழு ஆடையாக மாறி, சேலையாக எங்கும் நீண்டு திடீரென்று பார்த்தால் நாங்கள் சென்று கொண்டிருந்த சாலையைத் தவிர எங்கும் பளீர் வெண்மை! மேலிருந்து கீழாக விழுந்து கொண்டிருந்த பனி, இடமிருந்து வலமாக விழ, பார்த்தால் பனிப் புயல். நூறு கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்று கொண்டிருந்த கார் சட்டென்று வேகம் குறைந்து இருபதில் தவழத் துவங்க, முன்னே வாகனங்களின் ஊர்வலம். எதிர்புறத்தில் டமாஸ்கஸ்ஸூக்குச் செல்லும் சாலையிலும் வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருக்க, காற்றின் வேகம் இன்னும் கூட, சன்னல் கண்ணாடிகளில் சொத் சொத்தென்று பனி அடர்த்தியாக அறைய, ஓட்டுனர், முன்புற கண்ணாடியைத் துடைக்கும் துடைப்பான்களை இயக்கிவிட்டார். முகப்பு விளக்குகளையும் பிரகாசமாக எரியவிட அவை சோகையாக வெளிச்சத்தை உமிழ்ந்தன.அந்த அளவு பனியை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியத்திலும் அதிசயத்தில் வாயடைத்துப் போய் அமைதியாக 'விஷ்க் விஷ்க்' என்று கண்ணாடியில் படர்ந்த வெண்பனியைத் துடைத்தெறிந்த துடைப்பான்களின் இயக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். சாலையோரத்திலிருந்த ஆலிவ் மரங்களிலும் மற்ற சில மரங்களிலும் பனி அடர்ந்து படிந்திருக்க, பாரம் தாங்காமல் அவை ஒருபுறமாகச் சாய்ந்து விழுவதுபோல் நின்று கொண்டிருக்க, தரையே தென்படவில்லை. கண்ணாடியை இறக்கிப் பனியைக் கையில் பிடிக்கும் உத்தேசத்துடன் நீட்டி உள்ளிழுத்துப் பார்ப்பதற்குள் அவை தண்ணீராகிவிட ஏமாற்றமாக இருந்தது. 'கொஞ்சம் வண்டியை நிறுத்துறீங்களா?' என்று கேட்டதற்கு 'நிறுத்தினால் இஞ்சின் அணைந்துவிடும்; பின்பு கிளப்ப முடியாது' என்று ஓட்டுனர் மறுத்துவிட்டார். மேலும் ஒற்றையடிப் பாதையைப் போல் முன்னே சென்று கொண்டிருந்த வாகனங்களில் சக்கர அடையாளத்தை வைத்துத்தான் சாலையைக் கண்டுபிடிக்க முடிந்தது. ஓரமாக நிறுத்துகிறேன் பேர்வழி என்று பள்ளம் தெரியாமல் விட்டால் பனியில் சமாதியாகி விடுவோம் என்று பயமாக இருக்க நிறுத்தாமல் ஊர்தலைத் தொடர்ந்தோம்.

அதற்குள் எதிர்புறச் சாலையில் ஆங்காங்கே சில வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று விட்டதையும், அதன் ஓட்டுனர்கள் வெளியிலிறங்கி கண்களை இடுக்கிக்கொண்டு, கைகளால் முகத்தைக் காக்க முயன்று கொண்டு செய்வதறியாது திகைப்பதையும் கவனித்தேன். எதிர்புறமாகச் செல்லும் வாகன ஊர்வலம் நின்றே போய்விட்டது. எங்கள் வரிசை மிகவும் மெதுவாக முன்னேறிக்கொண்டும் அவ்வப்போது நின்று நின்றும் சென்று கொண்டிருந்தது. எப்போது எங்கள் வண்டியும் நிற்கப்போகிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் பயமெதுவும் எழவில்லை.ஐஸ்க்ரீம் கண்ட குழந்தையின் மனநிலையிலேயே இருந்தேன். பெரிய சாலைபோடும் இயந்திர வாகனம் தேள்கொடுக்கு போன்ற உலோக வாயைக் கொண்டு எதிர்புறச் சாலையில் பனியைச் சுரண்டி எடுத்து எறிந்துகொண்டு மெதுவாய்ச் செல்ல, பின்னே சில பாதுகாப்புப் படைவீரர்கள் மங்கலாக நடைபயின்றனர். வலதுபுறத்தில் ஆங்காங்கே தென்பட்ட ஒரு சில கட்டிடங்களும் பனி படர்ந்து சிறு குன்றுகளைப் போன்று காட்சியளித்தன. வாகனப் பழுது பார்க்கும் நிலையங்களின் முன்பு அடுக்கி வைக்கப்பட்ட டயர்கள் வெண்பனி படர்ந்து கருப்பு வெள்ளையில் வித்தியாச அழகுடன் காட்சியளித்தன.அவ்வளவு கொடும் பனிப் பொழிவிலும் சாலையோரங்களில் நனைந்த குருவிகள் தாவித் தாவி அமர்ந்து இடம் மாறிக்கொண்டிருந்தன. எனக்கு டீ குடிக்க வேண்டுமென்று தோன்றி நேரம் ஆக ஆக, டீத் தாகம் விஸ்வரூபம் எடுத்து ஓட்டுனரைக் கெஞ்சினேன்.டமாஸ்கஸ்ஸிலிருந்து கிளம்பி ஏறத்தாழ நான்கு மணிநேரம் ஆகிவிட்டது. 'பாதி தூரந்தான் வந்துருக்கோம்' என்றார் ஓட்டுனர். சிரியா மஸ்கட் நேரத்தைவிட ஒரு மணி நேரம் பின் தங்கியுள்ள நாடு. காரில் பளிச்சிட்ட டிஜிட்டல் கடிகாரம் வேறு ஏதோ ஒரு நேரத்தைக் காட்ட அப்போது மணி என்னவென்று குழப்பமாக இருந்தது.பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. திடீரென்று பனியின் நடுவே முழுதும் கருப்பு உடையணிந்த ஒரு பெண்மணி சிறிதே தெரிந்த முகத்தைக் கைகளால் மறைத்துக்கொண்டும் கைகளில் சில பைகளை வைத்துக் கொண்டும் சாலையோரமாகத் தென்பட, அவர் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்று உணர்ந்தேன். அவருக்குப் பின் ஒரு வளைவில் அரபியில் ஏதோ எழுதியிருக்க எங்கும் வெண்பனி. அது ஒரு குறுஞ்சாலை போலும். அவரைக் கடந்துச் சில நிமிடங்கள் வரை, வண்டி கிடைத்திருக்குமா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
எப்போது உறங்கினேன் என்று தெரியாமலேயே உறங்கிவிட்டேன் போலும். பயணத்தின் போது உறங்கும் பழக்கமில்லை-எந்நேரமானாலும். ஆனால் தொடர்ச்சியான நித்திரையில்லா இரவுகள்; அழுத்தும் அலுவல் பணிகளினாலும் உடல் அசந்துவிட்டது போல. சட்டென்று திடுக்கிட்டு விழித்தால் சுற்றியிருந்த வெண்ணுலகம் மறைந்து கட்டிடங்களும், வாகனங்களும், மனிதர்களும் பளிச்சென்று தென்பட, மழை அடித்துக் கொட்டிக் கொண்டிருந்தது. அது 'ஹாம்ஸ்' (Homs) என்று இன்னொரு நகரம்.

சற்று நேரத்திலேயே மழையும் குறைந்து நின்று விட ஒருவழியாக ஒரு சிற்றுண்டி விடுதியின் முன்பு ஓட்டுனர் வண்டியை நிறுத்திட, 'அப்பாடா' என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். காரிலிருந்து வெளியே இறங்கியதும் குளிரில் கைகள் விறைத்துவிட்டன. கேட்டால் பூஜ்யத்துக்குக் கீழே மூன்று டிகிரி தட்பவெப்பம் என்றார்கள்.

(தொடரும்...)

* மெர்க்குரிப் பூக்கள்-33 : வஹிபா பாலைவனம் - மஸ்கட் *


* மெர்க்குரிப் பூக்கள்-33 : வஹிபா பாலைவனம் - மஸ்கட் *

சுத்தமான பாலைவன மணல் நிஜமாகவே தங்கத்தூள் போன்று - சற்றே பழுப்பேறி- அவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் மென்மையும் நறுநறுவென்று கால்கள் இறங்குவதும் அனுபவித்தால் மட்டுமே தெரியும்.

மஸ்கட்டிலிருந்து ஸூர் (Sur) செல்லும் சாலையில் சுமார் 150 கி.மீ. பயணித்தால் பாலைவனத்தின் ஆரம்பப் பகுதியிலிருக்கும் அல் வாஸில் (Al wasil) என்ற கிராமத்தை அடைந்து விடலாம். பெரிதாகக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நெடுஞ்சாலையிலேயே மணல் இறைந்துகிடப்பதை வைத்து இடத்தைக் கண்டுகொள்ளலாம்.


சாதாரண கார்கள் இந்த இடத்திற்கு மேல் போக முடியாது. மணலில் சக்கரங்கள் மாட்டிக் கொள்ளும். பாலைவனத்தில் ஓட்டுவதற்கு 4 Wheel Drive (4WD) என்றழைக்கப்படும் Sport Utility Vehicle (SUV) வகையைச் சேர்ந்த வாகனங்கள் மட்டுமே பயணம் செய்ய உகந்தது. இந்த வண்டி வைத்திருப்பவர்கள் - வசதி படைத்தவர்கள் - பெரும்பாலும் பாலைவனத்தில் தங்கத் தேவையான - கூடாரம் உள்ளிட்ட- அனைத்து உபகரணங்களோடும் தயாராக வந்துவிடுவார்கள். என்னைப் போன்றவர்கள் அங்கு தங்குமிடங்கள் அமைத்து நடத்திக் கொண்டிருப்பவர்களிடம் முன்பே பேசி பதிவு செய்துகொண்டால், நம் காரை சாலையோரத்தில் இருக்கும் நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டுக் காத்திருக்க வேண்டும். அவர்களது 4WD வண்டியை எடுத்துக்கொண்டு பாலைவனத்துள்ளிருந்து சாலைக்கு வந்து நம்மை அழைத்துச் செல்வார்கள்.

சாலையென்று எதுவும் தனியாகக் கிடையாததால் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான முறை வண்டிகள் சென்றுவந்த பாதையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ஓட்டிக்கொண்டு அவர்கள் செல்வதிலிருந்து அதிகரிக்கும் இதயத் துடிப்பு திரும்ப வந்ததும்தான் சகஜமாகிறது. வண்டிக்குப் பின்னால் கும்மிருட்டு போல அடர்த்தியான புழுதி - மணல் புழுதி. Toyota சாதாரணமாகவே முதலிடத்தில் இருக்கும் நிறுவனம். அவர்களது Land Cruiser என்ற அற்புதமான 4WD வாகனம் மிகவும் பிரபலம். பாலைவனம், ஓடை, மலை என்று எல்லாவிடங்களிலும் ஏதோ வழுவழு தார்ச் சாலையில் செல்வது போன்று சுலபமாகச் செல்லக்கூடிய வாகனம் அது.

வஹிபா பாலைவனத்திற்கு எப்போதுவேண்டுமானாலும் போகமுடியாது. அக்டோபரிலிருந்து அதிகப் பட்சம் மார்ச் வரை மட்டுமே போக முடியும். மற்ற நாட்களில் தகிக்கும் சூரியனில் வறுபட்டுவிடுவோம் என்பதால் கூடாரங்களைக் காலிசெய்துவிட்டுத் ஊருக்குத் திரும்பிவிடுவார்கள். வெயில் நாட்களில் பகல் நேரப் பாலைவன வெப்பம் 58 டிகிரி செல்ஷியஸ்க்குப் போகும்!!. ஏறத்தாழ 180 கி.மீ. நீளமும் 60 கி.மீ.க்குப் பரந்தும் இருக்கும் பாலைவனம் அது.

அதிகமாகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களில் வஹிபா பாலைவனமும் ஒன்று. Golden Desert of Oman என்றும் புகழப்படுகிறது. Desert camp என்றழைக்கப்படும் பாலைவனத்தின் நடுவே சில தங்கும் விடுதிகளில் (மண்ணால் கட்டப்பட்ட சிறு குடிசை வீடுகள் அல்லது பெரிய கூடாரங்கள் - அவ்வளவே) ஓரிரு நாட்கள் தங்கி விட்டுத் திரும்பக் கூடிய இந்தப் பயணம் மிகவும் பிரபலமானது.

குடிநீர் மின்சாரம் என்று எந்தவித வசதிகளும் அங்கே ஏற்படுத்த முடியாது. ஆதலால் ஜெனரேட்டரை வைத்து தங்குமிடங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்கிறார்கள் (வெகுசில தங்குமிடங்களில் மட்டும்). லாரிகள் மூலம் தண்ணீரைக் கொண்டு வந்து பெரிய தொட்டிகளில் ஊற்றி வைத்துக்கொள்கிறார்கள். ரேஷன் முறையிலேயே தண்ணீரையும் மின்சாரத்தையும் செலவழிக்க வேண்டும். இரவில் ஏழு மணியளவில் ஜெனரேட்டர் நிறுத்தப்படும்.

மதியம் மூன்று மணியளவிலோ அல்லது அதிகாலையிலோ மஸ்கட்டிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும். நம்மைக் கொண்டுபோய் குடிசை வீடுகளில் சேர்ப்பித்துவிடுவார்கள். வெளியில் நின்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல் மணல் மணல்தான். ஆங்காங்கே நடைபோடும் ஒட்டகங்கள். முள்செடி போன்றதொரு செடி ஆங்காங்கே இருக்கின்றது. அவ்வளவுதான்.

வெறும் பாறைகள், அடர்த்தியான மரங்கள், பனிபொழிந்த என்று பலவிதத்தில் மலைகளைப் பார்த்திருப்போம். வெறும் மணல் மலைகளைப் பார்த்திருக்கிறீர்களா? வஹிபாவில் தகதகக்கும் மணல் குவிந்திருக்கும் மலைகள் உண்டு.
நாங்கள் இருந்த தங்குமிடத்திற்கு வெளியிலேயே பிரம்மாண்ட மலை இருந்தது. அங்கு இருந்த பணியாளர் மலையின் மீதேறினால் அந்தப்பக்கம் அதிகாலையில் சூரிய உதயம் மிகவும் ரம்யமாக இருக்கும் என்றார். மறுநாள் ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து நானும் நண்பர்களும் குடும்பத்தினரும் (குழந்தைகளும் எழுந்துவிட்டார்கள்) வெளியே வந்து மணலில் ஏறத்துவங்கியதும்தான் அது எவ்வளவு கடினமான விஷயம் என்று புரிந்தது. பார்ப்பதற்குச் சற்றே பெரிய மேடு போலக் காட்சியளித்தது அம்மலை.

பெரிதாக்கிப் பார்க்க

கால் வைத்தால் கிட்டத்தட்ட முழங்கால் வரை புதைந்துகொள்ள அடி எடுத்து வைத்து ஏறுவது மிகவும் கடினமான செயலாக இருந்தது. கால்வாசி கூட ஏறியிராத போது அய்யோ என்று அமர்ந்துவிட்டோம். ஆனால் குழந்தைகள் குதூகலத்துடன் எங்களை முந்திக் கொண்டு ஏறி எங்களைக் கைதட்டி கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

பெரிதாக்கிப் பார்க்க

அதிகாலைக் குளிரில் வியர்த்து ஊற்றியது. லேசாக வெளிச்சமும் பரவத் துவங்கியதும், சூரிய உதயத்தை விட்டுவிடக் கூடாது என்று உறுதியுடன், உத்வேகத்துடன் ஒரே மூச்சில் ஏறி நிற்கவும் சூரியன் உதிக்க ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்திருக்கும் மணற்பரப்பின் பின்னாலிருந்து நெருப்புக் கோளம் போன்று சூரியன் எழுவதை வர்ணிக்க வார்த்தைகள் போதாது.

பெரிதாக்கிப் பார்க்க


பெரிதாக்கிப் பார்க்க

Dune bashing எனப்படும் சாகசப் பயணம் சுவாரஸ்யமானது. Land Cruiser-இல் எங்களை ஏற்றிக்கொண்டு அந்த ஓமானி ஓட்டுனர் பாலைவனத்தில் படுவேகமாக பாதையே இல்லாத இடத்தில், மணலைக் கிழித்துக்கொண்டு ஓட்டிக்கொண்டு போய் எங்கெங்கோ போய்விட்டுப் பார்த்தால் கடைசியில் காலையில் நாங்கள் ஏறிய மலையுச்சியில் கொண்டுவந்து நிறுத்தினார். அங்கிருந்து நாங்கள் தங்கிய இடம் எதோ சிறு பெட்டி போல பாதாளத்தில் காட்சியளித்தது. மெதுவாக வண்டியை நகர்த்தி இறங்கி அதிவேகத்தில் வண்டியைச் செலுத்தினார் பாருங்கள். எந்த ரோலர் கோஸ்டரிலும் இப்படியொரு அனுபவம் கிடைக்காது. பெண்களும் குழந்தைகளும் நாங்களும் ஆச்சரியம், மகிழ்ச்சி, பயம் கலந்து அலறினோம்.

இப்படி ஓட்டுவதற்கு நிறையப் பயிற்சியும் அனுபவமும் வேண்டும். எல்லாரும் சட்டென்று பாலைவனத்தில் - Land Cruiser-ஆக இருந்தாலும் ஓட்டிவிடமுடியாது. அதற்கு ஒரு லாகவம் வேண்டும்.


மாலை இந்தப்பக்கம் சூரியன் விழுந்து மறைந்ததும் அற்புதமாக இருந்தது.

இரவு Camp Fire எழுப்பி அங்கிருக்கும் ஓமானிகள் அவரளது இசைக்கருவிகளை இசைத்து நாட்டுப்புற அரபுப் பாடல்களை அருமையாகப் பாடினார்கள். துள்ள வைக்கும் இசை அரபு இசை. பாடியதோடு ஆடவும் செய்தார்கள். நண்பர்களில் சிலரும், குழந்தைகளும் குஷியாக அவர்களுடன் சேர்ந்து ஆடினார்கள். இரவு பனிரெண்டு மணிவரை ஆட்டமும் பாட்டும் நீண்டது. கொறிக்க பேரீச்சம்பழங்கள் ஏராளம் வைத்திருந்தார்கள். கடுங்குளிருக்கு தீயின் வெப்பம் இதமாக இருந்தது.
துபாய் பகுதிப் பாலைவனங்களில் தொப்புள் நடனங்கள் உண்டு என்று கேள்விப் பட்டேன். இங்கே கிடையாது.

மறுநாள் ஒட்டக சவாரி போனோம். மேலே அமர்ந்ததும்தான் அது எவ்வளவு உயரம் என்று கிலியாக இருந்தது.

இரண்டு நாள் கழித்து மீண்டும் எங்களைச் சாலையில் கொண்டுபோய் விட்டார்கள். புழுதியில் மறந்திருந்த காரை தூசுதட்டிக் கிளப்பி மஸ்கட் வந்து சேர்ந்தோம்.

நாள் நேரம் எதுவும் தெரியாது - தொலை தொடர்புகளில்லாது, தொலைக்காட்சி, இணையம் போன்ற எந்த நவீன வாழ்வின் அம்சங்களும் இல்லாது கிட்டத்தட்ட கற்கால மனிதனைப் போல ஓரிரு நாள்கள் பாலைவனத்தில் வாழ்ந்துவிட்டு வருவது ஒரு அற்புத அனுபவம்.

***

Wednesday, December 14, 2005

* ஸீரோ டிகிரி *


போன தடவை இங்கயும் வந்தாச்சு வந்தாஆஆச்சுன்னு பனிப்பொழிவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதற்குப் பெயர் Wet Snowவாம். மழையுடன் சேர்ந்து பொழியும் பனி. அதெல்லாம் இங்கே கணக்கிலேயே சேர்த்தியில்லையாம். ந்யூ இங்க்லாண்ட் பகுதியைப் பொருத்தவரை இது மாதிரி Wet Showers பிள்ளையார் சுழி போடக்கூடக் காணாது என்றார்கள். அதன் அர்த்தம் பத்து நாட்களுக்கு முன்பு விழுந்த பனியைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.

வியாழன் நள்ளிரவு வரை குளிராகத்தான் இருந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை யாரோ தொடர்ந்து மூச்சா போவது போல கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தால் சத்தமேயில்லாமல் பஞ்சு பஞ்சாக அடைமழை போல அடைபனி பெய்து கொண்டிருந்தது. அலுவலகம் புறப்படுவதற்குள் தொலைக்காட்சியில் பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை என்று செய்தி சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் என் மகள் படிக்கும் நேட்டிக் ப்ரெளன் ஸ்கூல் இயங்கியதென்பதால் அவளைப் பள்ளிப் பேருந்தில் ஏற்றி அனுப்பியாகிவிட்டது. நான் அலுவலகம் கிளம்பும்போதே வாசலில் இரண்டு இஞ்ச் அளவிற்கு பனி சேர்ந்திருக்க த்ரீ டியர் ஆர்க்கிடெக்சரில் உடையணிந்துகொண்டு சென்றும் குளிர் நடுக்கி எடுத்தது.

பெரிதாக்க

வளைகுடாவில் வேலைசெய்யும் போது கோடையின் உச்ச காலத்தில் அலுவலகத்திலிருந்து மதியம் சாப்பிடுவதற்காக வண்டியை எடுத்து குளிரூட்டியை உச்சத்தில் இயக்கினாலும் வீடு வந்து சேரும் இருபது நிமிடப் பிரயாணம் முழுக்க வெப்பக் காற்றுதான் வரும். அவ்வளவு சூடு. ஜன்னலையும் திறந்து வைக்க முடியாது. வெளியிலிருந்து வரும் அனல் காற்றில் பழுத்து விடுவோம். இங்கே தலைகீழ் பிரச்சினை. வீட்டிலிருந்து அலுவலகம் வந்து சேர ஐந்து நிமிடங்கள்தான் ஆகும். வெப்பமூட்டியை இயக்கி அது லேசாக வெப்பக்காற்றை வீசுவதற்குள் அலுவலகம் வந்துவிடும். வண்டியை நடுங்கிக்கொண்டே ஓட்ட வேண்டியிருக்கிறது.

பெரிதாக்க

மதியம் மழை பெய்யும் என்று Weather Channel-இல் ஜோதிடம் சொன்னார்கள். முற்பகலில் பனிப் பொழிவு உக்கிரமாக இருக்க சாலை கட்டிடங்கள் எதுவும் தெரியவில்லை. மேலேயிருந்து பாற்கடலே உடைந்துவிட்டதோ என்று நினைக்கும்படி பொழிந்து தள்ளியது.

பெரிதாக்க

மதியம் மூன்று மணிக்குப் பள்ளிப் பேருந்து வந்துவிடும். வழக்கமாக மனைவி வீட்டிலிருந்து நடை தூரத்திலிருக்கும் நிறுத்தத்திற்கு வந்து மகளைக் கூட்டிச் செல்வார். ஆனால் பனிப் பொழிவு அதிகமாக இருந்ததால் அவரை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினால் சாலையே தெரியவில்லை. வாகனங்கள் ஊர்ந்து செல்லவேண்டியிருந்தது. பள்ளியில் கேட்டபோது நேரத்திற்கு வண்டி கிளம்பியதாகவும், ஆனால் வரும் நேரத்தைச் சொல்வது கஷ்டம் - பனிப்பொழிவினால் தாமதமாகும் என்றும் சொன்னார்கள்.

பெரிதாக்க

நான் போய் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் காத்திருந்தபின் கிட்டத்தட்ட என் முழங்கால் வரை பனி சேர்ந்தபின் வண்டி வந்தது. மகளை அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் வந்து வேலையில் மூழ்கியாயிற்று. மாலை ஐந்து மணியளவில் பனிப்பொழிவு நின்றது. மொத்தம் பத்து இஞ்ச் அளவிற்குப் பொழிந்து ஓய்ந்திருந்தது. காலையில் வண்டியை நிறுத்துமிடத்தில் நிறுத்தியவர்களெல்லாம் மாலையில் வெளியில் எடுக்க முடியவில்லை. எல்லா வண்டிகளையும் பனி மூடி ராட்சத முட்டைகள் வரிசையாக இருப்பது போலக் காட்சியளித்தன.

பெரிதாக்க

இரவே துப்புரவு வண்டிகள் களத்தில் இறங்கிச் சாலைகளையும் நடைபாதைகளையும் சுத்தம் செய்து பனியைச் சுரண்டி எடுத்து ஓரமாய் மலைபோல் குவித்துவிட்டனர். மறுநாள் பளீரென்று அடித்த வெயில் பனியில் பட்டு எதிரொளித்துக் கண்களைக் கூசச் செய்தது.

பெரிதாக்க

அப்போது குவித்தது இன்னும் இருக்கிறது. இந்த வாரம் முழுக்க வெப்ப நிலை பூஜ்யத்திற்குக் கீழே. இன்னும் நான்கு மாதங்களாவது இந்நிலைதானாமே? 'எப்படியும் அடுத்த கோடைக்காலத்தில்தான் இந்தப் பனியெல்லாம் உருகும்' என்கிறார் சக அலுவலர். பனிகூடப் பிரச்சினையில்லை. அது பனிக்கட்டியாகிவிடுவதுதான் இன்னும் அபாயமாம். கவனமாக நடக்கவில்லையென்றால் வழுக்கி விழுந்து இடுப்பை உடைத்துக் கொள்ள நேரிடும்.!

பெரிதாக்க

குளிர் நொக்கியெடுக்கிறது. நடமாடும் துணிக்கடை போல இவ்வளவு ஆடைகள் அணிந்து நடமாடுவதற்குப் பதிலாக பேசாமல் வளைகுடாவிலேயே இருந்திருக்கலாம் போல. தமிழ்நாடு எவ்வளவோ மேல். வாழ்க்கை அவ்வளவு ஒன்றும் எளிதல்ல இங்கே.!

பெரிதாக்க

***

Thursday, December 01, 2005

மரத் துறவி

விதையில் துவங்கி, முளைத்துச் சின்னஞ்சிறு செடியாகத் துளிர்த்து, வளர்ந்து மரமாகி, கிளைகளும் இலைகளுமாகச் செழித்து, பூப்பூத்துக் காய்த்துக் கனிந்து, மறுபடியும் விதைகளை ஈன்று என்று வாழ்க்கைச் சுழற்சியை மரங்கள் பலமுறை நெடுங்காலத்திற்கு அனுபவிக்கின்றன. நம்மூரில் பருவ மாறுதல்களை அவ்வளவாக உணர முடியாததற்குக் காரணம் தொடர்ந்து நிலவிய மழைபொய்த்த வானம் பார்த்த வருடங்களும்.

இங்கு இலையுதிர் காலம் என்பதை மரங்கள் எல்லாமிழந்து நிற்கும் துறவி போல அப்பட்டமாகக் காட்டுகின்றன. நான்கு மாதங்களுக்கு முன்பு வந்தபோது பச்சைபசேலென்று எங்கு பார்த்தாலும் பசுமையாக முதலில் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நிறங்கள் மாறத்துவங்கி வர்ணஜாலங்கள் காட்டின மரங்கள். குளிர்காலம் துவங்கிய நிலையில் இப்போது துறவு நிலைக்கு வந்து சோகமேயுருவாக, வெறும் கூடாகக் காட்சியளிக்கின்றன. மோன நிலையில் காலத்தை உறைய வைத்தது போல் அசையாது நிற்கின்றன மரங்கள்.

விவேக் ஸ்டைலில் சொல்லவேண்டுமானால் மரம் இப்படிச் சொல்லும்....

எப்படி இருந்த நான்..........

இப்படி ஆயிட்டேன்...............


Framingham என்ற இடத்திலுள்ள ப்ளைமெளத் தேவாலயத்தின் (Plymouth Church) முன்பிருக்கும் மரத்தின் இரு பருவ நிலைகளே மேலே நீங்கள் பார்ப்பது.

மனிதனுக்கு எல்லாமிழந்த துறவு நிலை - இலையுதிர் காலம் - ஒரு முறைதான் வருகிறது - மூப்பு என்ற வடிவத்தில்.

மூப்படைந்த மனிதனும் இந்த மரத்துறவி போலத்தான் இருக்கிறான் - ஆனால் மறுபடியும் துளிர்த்தெழ வாய்ப்பில்லாமல்.

***