Tuesday, January 24, 2006

9/11 & Ground Zero

9/11 இன்னமும் நன்றாக நினைவிருக்கிறது.அன்று துபாய்க்கு அலுவல் வேலையாகச் செல்ல வேண்டியிருந்தபடியால், மதியம் காரை எடுத்துக்கொண்டு நானும் எனது சக அலுவலக நண்பன் ராமும் மஸ்கட்டிலிருந்து கிளம்பி நிறுத்தாமல் பயணம் செய்து, இரவு தங்குமிடத்திற்குச் சென்று தொலைக்காட்சியைப் போட்டால் சிஎன்என்-னில் "AMERICA UNDER ATTACK!" என்று கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தி ஓட, உலக வர்த்தக மைய கட்டிடத்தில் ஒன்று கழுத்துப் பகுதியில் எரிந்துகொண்டிருந்தது.


சற்று நேரத்திலேயே இரண்டாவது கோபுரத்தின் மீது இன்னொரு விமானம் மோதித் துளைத்ததையும் பார்த்து கல்லாய்ச் சமைந்து போனது நினைவுக்கு வருகிறது. அடுத்து பென்டகன் மீது விழுந்த விமானத்தையும் காட்ட அதிர்ச்சியலைகள் அடுக்கடுக்காய் மொத்த உலகத்தையும் தாக்கத் துவங்கின. ஜன்னல் வழியே கைக்குட்டையை அசைத்து உதவி கோரிய அந்த முகங்கள்! வெளியே குதித்து விழுந்தவர்கள்!


நாங்கள் சந்திப்பதற்காகச் சென்றிருந்த நிறுவனத்தின் மேலாளர், அவரது பையன் முதல் கோபுரத்தில் ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தானாம். அவரால் கண்ணீர் வடிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை. தொலை தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டிருக்க அவரால் மகனைத் தொடர்பு கொள்ள முடியாமல்; என்ன நடந்ததென்று தெரியாமல் தவித்துப்போனார்.மறுநாள் மாலையில் அவன் எங்கிருந்தோ அழுதுகொண்டே தொலைபேசியதும்தான் இவருக்குப் போன உயிர் திரும்ப வந்தது. வர்த்தக மையத்திற்கு அருகிலிருந்த விடுதியில் தங்கியிருந்தவன் சற்று தாமதமாகக் கிளம்பி, மையத்தில் நுழையும் சமயத்தில் விமானம் இடித்ததும் களேபரத்தில் திரும்ப விடுதியறைக்கு ஓட, அங்கிருந்த அனைவரையும் காலிசெய்யச் சொல்லி எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ச்சியாக வர, அனைத்து உடைமைகளையும் அப்படியே போட்டுவிட்டுக் நீண்ட தூரம் ஓடிச்சென்று நின்று பார்த்ததும்தான் சூழ்நிலையின் பயங்கரம் புரிந்திருக்கிறது அவனுக்கு. அவன் தங்கியிருந்த விடுதிக் கட்டிடமும் இடிந்து போயிருக்கிறது.நினைக்க நினைக்க அதிர்ச்சி எந்த அளவு ஏற்பட்டதோ அந்த அளவு இச்சதிச் செயலின் பிரம்மாண்டத்தை நினைத்து மலைப்பும் ஏற்படாமல் இருக்கவில்லை. எவ்வளவு பெரிய நாசகாரத் திட்டம்! எந்த அளவிற்கு நுணுக்கமாக, துல்லியமாகத் திட்டமிட்டிருப்பார்கள்! யாருமே கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத பயங்கரத் திட்டம்!


விமானத்தில் பயணம் செய்கையில், இந்த விமானம் ஏதோ ஒரு கட்டிடத்தில் அசுரவேகத்தில் சென்று மோதப் போகிறது என்று பயணிகளுக்குத் தெரிந்தால் எப்படி இருக்கும்? மனதில் என்ன தோன்றும்? இனி நடக்கவே கூடாது என்று தோன்றும் பயங்கரம்!


எதுவுமே பாதுகாப்பில்லை என்று மறுபடி மறுபடி உணர்த்தும் பயங்கரம்!


தரைமட்டமாகிப் - ஏன் பள்ளமாகிப்- போன கட்டிடங்கள் இருந்த இடம் Ground Zero என்று அழைக்கப் பட, இன்னும் நூற்றுக்கணக்கில் வந்து பார்த்துச் செல்கிறார்கள்.


நியூயார்க்கில் மற்ற இடங்களைச் சென்று பார்ப்பதற்கும், Ground Zero வைப் பார்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் ஒன்றிருக்கிறது. அது Ground Zero வைப் பார்ப்பவர்கள் முகத்தில் காணப்படும் இறுக்கம்; ஒருவித சோகம்; காணாமல் போன புன்னகை.

அழிவுச் சின்னமாக நிற்கும் மிச்சங்களைப் பார்க்கையில் மனம் வருந்துகிறது.

அண்ணாந்து ஆகாயத்தைப் பார்க்கையில், இதை மறைத்துக்கொண்டு வானளாவிய கட்டிடங்கள் இரண்டு நின்றுகொண்டிருந்தன; ஆயிரக்கணக்கில் மனிதர்கள் உள்ளே இருந்தார்கள்; எல்லா நாட்களையும் போன்று பரபரப்பான அலுவல் நாள் ஒன்றில் கூண்டோடு மரித்துப் போனார்கள் என்று நினைக்கையில் துக்கமாக இருக்கிறது. எத்தனை எத்தனை உயிர்கள்! அவர்களின் கனவுகள்; உறவுகள் - எல்லாம் மண்ணோடு மண்ணாகிப் போனது!ஒரு வேளை ஆவியாய் அலைந்துகொண்டிருப்பார்களோ என்று கற்பனை ஓடியது.

தடுப்புக் கம்பிவேலியில் சாய்ந்து தரையில் அமர்ந்து கொண்டு வெண்தாடியுடன் அந்த நபர் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார். புல்லாங்குழலின் தனியிசை அந்த இறுக்கமான சூழ்நிலைக்குப் பொருந்தி கேட்பவரின் மன இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியது. பார்வையாளர்கள் குறைவாகப் பேசி, நிறைய காட்சிகளை உள்வாங்கிக்கொண்டிருந்தார்கள்.என்னையறியாமலேயே பெருமூச்சு எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை.

உலக வரலாற்றில் நீண்ட காலம் அழியாமல் இருக்கும் கரும்புள்ளியாக Ground Zero இருக்கும்!***

Friday, January 20, 2006

நியூயார்க் # 5 : அஸ்தமனம்

* நியூயார்க் # 5 (இறுதி) : அஸ்தமனம் *குளிர்காற்று துளைத்தெடுக்க இதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாது என்றுணர்ந்து மீண்டும் படகுத்துறைக்கு விரைந்தோம். கிளம்புமுன் ஒரு தடவை சுதந்திரதேவி சிலையைத் திரும்பிப் பார்த்துக்கொண்டேன். தீபம் ஒளிரத் துவங்கியிருந்தது.நாள் முழுதும் உழைத்துக் களைத்து ஓய்வெடுப்பதற்காக விடுவிடுவென்று இறங்கி மறைந்த சூரியனுக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டுக் கிளம்பினோம்.துறையில் இடதுபுறம் நின்றிருந்த, கிளம்பத் தயாராக இருந்த Ferry-இல் ஓடிப்போய் ஏறவிருந்த கடைசி வினாடியில் "நியூ ஜெர்ஸி" என்ற பலகையைப் பார்த்துச் சட்டெனப் பின்வாங்கினோம். அது நியூயார்க்கின் பேட்டரி பார்க்குக்குப் போகவில்லை. நியூஜெர்ஸிக்கான படகாம் அது. நல்ல வேளை என்று எட்டி நடைபோட்டு துறையின் விளிம்பில் சேர்ந்திருந்த கூட்டத்தில் இணைந்து கொண்டோம்.கடைசிச் சவாரியில் திரும்ப வந்து கரையில் இறங்கியதும் அயர்வாக இருந்தது.

பாதாள ரயிலைப் பிடித்து நண்பரது வீட்டுக்குத் திரும்பவந்து ஓய்வெடுத்துவிட்டு, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பதினொரு மணியளவில் கிளம்பி, விடுமுறை முடிந்து திரும்பிக் கொண்டிருந்த வாகன வரிசையில் இணைந்து ஆறுமணி நேரம் பயணித்து நேட்டிக்கு வந்து சேர்ந்து படுக்கையில் விழுந்ததும், திங்கள் கிழமை செய்யவேண்டிய அலுவல்களை நினைத்தபடியே தூங்கிப் போனேன்.


சற்று அவசரகதியில் முடிந்த பயணம் போலத் தோன்றிற்று.


***

Wednesday, January 18, 2006

நியூயார்க் # 4 - சுதந்திரதேவி சிலை


* நியூயார்க் # 4 - சுதந்திரதேவி சிலை *

சோகையான பச்சை நிறத்தில் அந்தச் சிலை பெரிதாக எந்த ஆச்சரியத்தையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிஜம். நம்மூரில் பிரம்மாண்டமான கோபுரங்களையும், சிற்பங்களையும் பார்த்துப் பழகி, இதில் எந்த பிரமிப்பும் வரவில்லைதான். இதற்கா இவ்வளவு செய்து, ஏகப்பட்ட முஸ்தீபுகளோடு வந்தோம் என்று தோன்றியது.இங்கு புராதானச் சின்னங்களைப் பராமரித்து பளிங்கு மாதிரி வைத்துக்கொண்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து காசு பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் காசு. இவற்றைப் பார்க்கவேண்டும் என்று நினைக்கக்கூட காசு கொடுக்கவேண்டும் போல! சிலையைப் பற்றிய சில குறிப்புகள்:


 • பிரான்ஸ் தேசம் அமெரிக்காவுக்கு பரிசு கொடுக்கவேண்டும் என்ற ஐடியா உருவானது 1865-இல் நடந்த ஒரு இரவு உணவு விருந்தில்
 • சிலை செய்யும் பணி 1875-இல் துவங்கியது. பெயர் "Liberty enlightening the World". 1884-இல் முடிக்கப்பட்டது.
 • ஜூலை 4, 1884 அதிகாரப் பூர்வமாக பிரான்ஸ் அமெரிக்காவுக்கு அளித்தது
 • சிலையின் பாகங்களை (350 பாகங்கள்) ஏற்றிக்கொண்டு 1885 துவக்கத்தில் கப்பலொன்று அமெரிக்காவுக்குக் கிளம்பியது
 • ஜூலை 4, 1889-இல் பிரான்ஸில் வாழும் அமெரிக்கச் சமூகம் பிரெஞ்சு மக்களுக்குப் பரிசாக வெண்கலத்தில் செய்த சுதந்திரதேவி சிலையை (நாலில் ஒரு பாக அளவு) அளித்தது. இச்சிலை 35 அடி உயரமுடையது. இது இன்னும் Ile des Cygnes என்ற தீவில் நிற்கிறது (ஈபில் கோபுரத்திற்குத் தெற்காக 1.5 கி.மீ. தூரத்தில்)
 • 19-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய காங்க்ரீட் கட்டுமானம் இச்சிலை. 1886-இல் பாகங்களைச் சேர்த்து சிலை முடிக்கப்பட்டது.
 • அக்டோபர் 28, 1886-இல் அப்போதைய ஜனாதிபதி குரோவர் க்ளீட்லேண்ட்-ஆல் அதிகாரப் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
 • தேசியச் சின்னமாக அக்டோபர் 15, 1924 இல் அங்கீகரிக்கப் பட்டது.
 • 50 மைல் வேகத்தில் காற்று வீசினால் சிலை மூன்று இஞ்ச் அளவும் ஏந்தியிருக்கிற தீபம் 5 இஞ்ச் அளவும் ஆடுகின்றன!
 • கிரீடத்தில் 25 ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. முள் போன்று நீட்டிக்கொண்டிருப்பவை ஏழு. ஏழு கடல்களையோ ஏழு கண்டங்களையோ குறிக்கிறது.
 • பீடத்திலிருந்து தீபம் வரையான உயரம் 152 அடி. பீடத்தையும் சேர்த்தால் 306 அடி உயரம். பாதத்திலிருந்து தலைமுடிய உயரம் 111 அடி. வலது கையின் நீளம் 42 அடி.
 • கிரானைட் பீடம் 89 அடி உயரமும், அஸ்திவாரம் 65 அடி.


அங்கிருக்கும் சிற்றுண்டி விடுதியில் பயங்கரக் கூட்டம். குளிர் வேறு வாட்டியெடுத்ததால் மொத்தமாக உள்ளே போய் அடைந்துகொள்ள உள்ளேயே நுழையமுடியவில்லை. வெளியில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் கடற்பறவைகள் ஏகத்துக்கும் களேபரப்படுத்திக் கொண்டிருந்தன.
மதுரை அழகர் கோயிலில் பையைத் தூக்கிக்கொண்டு நடந்தால் ஏதாவது குரங்கு வந்து பிடுங்கும். மக்கள் கையில் ஒரு குச்சியுடன் அலைவார்கள். இங்கே இப்பறவைகள் சற்றும் பயமில்லாமல் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களின் தட்டுகளிலிருந்து உணவைக் கொத்திப் பறந்தன. பெண்கள் லேசாக அலறினார்கள். குழந்தைகளுக்கு வழக்கம்போலக் குதூகலம்தான்.

Empire State Building-லிருந்து அதிகப்பட்ச ஜூமை உபயோகித்து நடுங்கிக்கொண்டே சுதந்திரதேவி சிலையை எடுத்தேன் என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது சுதந்திரதேவி சிலை இருக்கும் தீவிலிருந்து Empire State Building-ஐ அதிகச் சிரமமில்லாமல் எடுத்தேன்.இந்தப் பக்கம் உயிருள்ள பறவையும் அந்தப் பக்கம் உலோகப் பறவையும்!Monday, January 16, 2006

நியூயார்க் # 3 (சுதந்திர தேவி சிலை)

மறுநாள் ஜமைக்கா 179 லிருந்து இரண்டி வண்டிகள் மாறி பேட்டரி பார்க் நிலையத்தை அடைந்து வெளியில் வந்ததும் நடைபாதையிலேயே படகு சவாரிக்கு டிக்கெட் விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்டுகொள்ளாமல் சற்று தூரம் நடந்து டிக்கெட் கொடுக்குமிடத்தை அடைந்து வரிசையில் சேர்ந்துகொண்டோம்.


நம்மூரில் காந்தி, எம்ஜியார் போன்று உடல் முழுதும் பெயிண்ட் அடித்துக்கொண்டு வருவார்களே. இங்கு சுதந்திரதேவி சிலை போன்று உடல் முழுதும் இளம் பச்சை வர்ணத்தை அடித்துக்கொண்டு, தலையில் கிரீடத்துடன் கையில் தீபத்துடன் சிலை போன்று மூன்று நான்குபேர் நின்றுகொண்டிருக்க, சுற்றுலாப் பயணிகள் அவர்களருகில் நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டு டப்பாவில் காசைப் போட்டுவிட்டுச் சென்றுகொண்டிருந்தனர். பளீரென்று அடித்த சூரிய வெளிச்சத்துக்காகவோ என்னவோ, சுதந்திரதேவி சிலைகள் கருப்புக் கண்ணாடி அணிந்துகொண்டிருந்தன!டிக்கெட் வரிசையில் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் நிற்க வேண்டியிருந்தது. வாங்கிக்கொண்டு வெளியில் வந்து Ferry-இல் ஏறிவிடலாம் என்று பார்த்தால் அங்கிருந்து கிட்டத்தட்ட நாங்கள் வந்திறங்கிய ரயில் நிலையம் வரை அனகோண்டா வரிசை. விதியே என்று போய் வாலில் இணைந்துகொள்ள மெதுமெதுவாகவே வரிசை நகர்ந்தது. குளிர்காற்று சுழற்றிச்சுழற்றி அடிக்க குழந்தைகள் சிரமப்படுவது போலத் தோன்றியது.ஒரு வழியாக படகுத்துறையின் முகப்பை அடைந்து உள்ளே நுழைந்தால் மும்பை விமான நிலையம் போல கூட்டம் அம்மிக்கொண்டிருக்க பரபரப்பாக இருந்தது. ஜட்டி பனியனைத் தவிர கிட்டத்தட்ட எல்லாவற்றையும் கழற்றச் சொல்லி பாதுகாப்புச் சோதனைகள் செய்தார்கள். அதுவும் முடிந்து படகேறும் இடத்திற்கு வந்து நிற்க, தடதடத்துக்கொண்டே வந்தது - கப்பல் என்று சொல்லலாம் போல - அந்தப் பெரிய இரண்டடுக்குப் படகு!தரையடுக்கில் சுற்றிக் கண்ணாடிச் சுவர் இருக்க, படியேறி மொட்டைமாடிக்குச் சென்று வரிசையாக இருந்த பெஞ்சுகளொன்றில் அமர்ந்துகொண்டோம் - அது பெரிய தவறு என்று ஐந்து நிமிடங்களிலேயே உணர்ந்துகொண்டோம். நிற்கையிலேயே குளிர் நொறுக்கியெடுக்க, படகு நகரத்துவங்கி வேகம் பிடித்ததும் தாங்கமுடியாத குளிர் நரம்புகளைச் சில்லிட்டுப் போகச் செய்தது. நான் எருமை மாதிரி நின்றுகொண்டு படங்களை எடுத்துக்கொண்டிருக்க, குழந்தைகள் - நிறைய குளிர்தாங்கும் ஆடைகளை அணிந்திருந்தும் - கால்கள் வலிக்கின்றன, முகம் மரத்துவிட்டது என்று விசும்பத் தொடங்கிவிட்டனர்.ஒரு வழியாக - அதுவரை திரைப்படங்களில் மட்டும் பார்த்திருக்கும் - சுதந்திரதேவி சிலை இருக்கும் தீவை அடைந்தோம். அதுதான் அன்றைய தினத்தின் கடைசிச் சவாரியாம். மணி மூன்றரை ஆகியிருந்தது. ஏதோ பாதுகாப்புப் பிரச்சினைகளை முன்னிட்டு சிலைக்கு உள்ளே செல்ல முடியாது என்று அறிவித்தனர் - எல்லாருக்கும் ஏமாற்றம்.


Tuesday, January 10, 2006

நியூயார்க் # 2 (இசை ரம்பமும் எட்டாம் உலகமும்)

உச்சியில் காற்று அடித்து தூள் கிளப்பியது. காதுமடல்கள் வலிக்கத் துவங்கின. நல்ல வேளையாக மேகமூட்டம் எதுவுமில்லாது சூரியன் தாராளமாய் பிரகாசித்துக்கொண்டிருக்க, நான்கு திசைகளிலும் நியூயார்க் என்ற அந்த காங்க்ரீட் காட்டை - கோடுகளாக, கட்டங்களாக, சதுரங்களாக, செவ்வகங்களாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.


நான்கு திசைகளிலும் இருக்கும் முக்கிய கட்டிடங்களைப் பற்றியும், இடங்களைப் பற்றியும் வரைபடங்களைப் பதித்திருக்கிறார்கள் என்பதால் பார்க்க வேண்டிய இடங்களைக் கண்டுபிடிப்பதில் சிரமமில்லாது இருந்தது.

தொழில்நுட்ப உதவியுடன் கம்பியில்லா கேட்கும் கருவியையும் வாடகைக்கு வாங்கி மாட்டிக்கொண்டு உலவினால், நாம் இருக்கும் திசைக்கேற்ப குரல் நம்மிடம் அத்திசையில் இருக்கும் இடங்களைப் பற்றி விவரித்துக்கொண்டே இருக்கிறது. கிழக்கிலிருந்து வடக்குக்குத் திரும்பினால் குரலும் வடக்குப் பக்கத்தைப் பற்றிச் சொல்லத் துவங்குகிறது. ஒரு Virtual Tour Guide கூடவே வரும் உணர்வைத் தந்தது.

பெப்ஸி நிறுவனத்தைப் பார்க்கும்போது மனதில் பழைய நினைவுகள் அலைமோதின! எட்டுவருடங்கள் அந்நிறுவனத்தில் - முதல் வேலை - பணிபுரிந்த காலங்களை நினைத்துப் பார்த்துக்கொண்டேன்.கட்டிடத்தின் உச்சியில் குவிந்து ஊசியாக முடியும் அமைப்பை அண்ணாந்து பார்த்தேன். மேகங்கள் வேகமாக நகர்ந்து செல்ல - பக்கத்து ரயில் நகரும்போது அது செல்கிறதா அல்லது நமது ரயில் செல்கிறதா என்று சில வினாடிகளுக்கு ஒரு குழப்பம் வருமே அது போல - நகருவது மேகங்களா அல்லது கட்டிடமா என்று பார்வைக் குழப்பம் நேரிட்டது!


நம்மூரில் இத்தொழில்நுட்பத்தைப் புகுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது - குறிப்பாக மீனாட்சியம்மன் கோயில் போன்ற பிரம்மாண்ட தலங்களில் இவ்வசதி செய்யப்பட்டால் வெளிநாட்டுப் பயணிகளுக்குப் பேருதவியாக இருக்கும். அரைகுறை கைடுகள் எதையாவது உளறிக்கொட்டி நம்நாட்டின் மீது தவறான பிம்பத்தை உருவாக்காமல் தடுக்கவும் உதவும். போன விடுமுறைக்குச் சென்றிருந்தபோது - "கைடு வேணுமா ஸார்!" என்று ஒருவர் அணுகிக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது. "அண்ணே நான் உள்ளூர்தாண்ணே!" என்று வாயைத் திறந்ததும்தான் சிரித்துவிட்டு விலகினார். "டே. மொதல்ல அந்தக் குறுந்தாடிய எடுக்கிறியா?" என்றான் கூட வந்திருந்த நண்பன். "இது என்னடா அநியாயமா இருக்கு? ஊர்ல யாரும் குறுந்தாடியே வச்சிக்கலையா?" என்று விசனப்பட்டேன். நிற்க. தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு நம்மூரில் செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அறநிலையத் துறையும், சுற்றுலாத் துறையும் கைகோர்த்துக்கொண்டு முழுவீச்சில் இதைச் செய்தால் சுற்றுலா மிகவும் மேம்படும்!

கிரிக்கெட் ஸ்டம்பின் உயரத்திற்கு தூரத்தில் தீவு நடுவில் தெரிந்தது சுதந்திர தேவி சிலை என்றார்கள்.

அங்கு வைத்திருந்த டெலஸ்கோப்பின் மூலம் பார்ப்பதற்குக் குழந்தைகள் க்யூ நின்றிருந்ததால் எனது கோடக்கின் 10x ஜூமைப் பயன்படுத்தியதில் - நரம்புத் தளர்ச்சி வந்தது போல -காட்சி நடுங்கியது. கைப்பிடிச்சுவரில் கேமராவை வைத்துப் பார்த்ததில் ஓரளவு தெரிந்தது. கொஞ்சம் புகையாக இருந்தாலும் அப்படியே கிளிக்கினேன். மறுநாள் சுதந்திர தேவி சிலையைப் பார்க்கவேண்டும் என்று உத்தேசித்துக்கொண்டோம்.


நல்ல அசதியுடன் திரும்பக் கீழே மின்னல்வேகத்தில் வந்து பாதாள ரயிலைப் பிடிக்கப் போகையில் இசைச் சத்தம். ரயில் நிலையத்தில் ஒரு பெண்மணி பெரிய ரம்பம் ஒன்றைக் கால்களுக்கிடையில் இடுக்கிக்கொண்டு வயலின் வாசிக்கும் Bow வைப் பிடித்துக்கொண்டு ராவு ராவு என்று - எதையும் அறுக்கவில்லை - இசை எழுப்பிக்கொண்டிருந்தார்!! கிட்டத்தட்ட வயலின் போல - என்ன கொஞ்சம் அதிக ஒலியுடன் - இசை பிரவாகமாக வந்துகொண்டிருந்தது.

எனக்கு நம்மூர் கொட்டாங்கச்சி வயலின் நினைவுக்கு வந்தது.

அதோடு பள்ளியில் படிக்கும்போது கலந்துகொண்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பாடிய வரிகளும் உடனடியாக நினைவுக்கு வந்தது.

"ஆரம்பம் என்று நாங்கள் சொல்லுகின்ற வேளையிலே ஆ ரம்பம் என்று சிலர் எண்ணுகிறார். இதன் அருமைதனைத் தெரியாமல் எண்ணுகிறார்" என்று "மணப்பாறை மாடு கட்டி" பாடல் மெட்டில் பாடியிருக்கிறோம். இந்த ரம்ப இசையைக் கேட்டதும் அந்த வில்லுப்பாட்டு சட்டென்று நினைவுக்கு வந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தோன்றியதாம் இது. பின்பு இரண்டாம் உலகப்போர் வாக்கில் தேய்ந்து மறைந்துபோனதாம் - காரணம் - ஆயுதங்கள் செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட்ட இரும்பு, எக்கு உலோகங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டதால் ரம்பம் செய்வதையே நிறுத்தி வைத்திருந்தார்களாம். இரண்டாவது இதை வாசிக்க இடது கை பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டுமென்பதால் ஆண்கள் மட்டும் வாசித்துவந்தார்களாம். அவர்களும் உலகப்போரில் பங்குபெறுவதற்காகச் சென்றுவிட்டதால் கற்றுக்கொள்ள ஆளில்லாமல் அழியும் நிலைக்கு வந்துவிட்டதாம் இந்தக் இசை. இப்போது நடாலியா பரூஸ் (Natalia Paruz) என்ற பெண்மணி இவ்விசைக்கு உயிர்கொடுக்க முழுமுயற்சி செய்துவருகின்றாராம்.

இதுமாதிரி தெருக்களில் ஆங்காங்கே இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டும் மெலிதாகப் பாடிக்கொண்டும் நாகரீகமாக "காணிக்கை" பெற்றுக்கொள்கின்றனர். நம்மூரில் ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் இசைத்துக்கொண்டு வரும் பார்வையிழந்த பிச்சைக்காரர்களைப் பார்த்திருக்கிறோம். இங்கு இவர்களைப் பார்த்தால் - இவர்களது நடையுடை பாவனைகளைப் பார்த்தால் - பிச்சைக்காரர் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது. முதலில் இவர்களைப் பிச்சைக்காரர்கள் என்று சொல்வதே சரியா என்று தெரியவில்லை. ஆனால் பாஸ்டனின் சில சந்திப்புகளில் கறுப்பர்கள் கழுத்தில் Homeless - Please help அட்டையுடன் ஆங்காங்கே பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறேன். பிச்சையெடுப்பதிலும் விழுந்து பிடுங்காத நாகரீகம்! ஜெயமோகன் பார்த்தால் "எட்டாம் உலகம்" என்று - சற்று மாறுதலாக ஏழாம் உலக நரக வேதனைகளின்றி - இவர்களைப் பற்றி ஒரு நாவல் எழுதக் கூடும்!