Wednesday, January 18, 2006

நியூயார்க் # 4 - சுதந்திரதேவி சிலை


* நியூயார்க் # 4 - சுதந்திரதேவி சிலை *

சோகையான பச்சை நிறத்தில் அந்தச் சிலை பெரிதாக எந்த ஆச்சரியத்தையும் எனக்குள் ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிஜம். நம்மூரில் பிரம்மாண்டமான கோபுரங்களையும், சிற்பங்களையும் பார்த்துப் பழகி, இதில் எந்த பிரமிப்பும் வரவில்லைதான். இதற்கா இவ்வளவு செய்து, ஏகப்பட்ட முஸ்தீபுகளோடு வந்தோம் என்று தோன்றியது.இங்கு புராதானச் சின்னங்களைப் பராமரித்து பளிங்கு மாதிரி வைத்துக்கொண்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து காசு பார்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் காசு. இவற்றைப் பார்க்கவேண்டும் என்று நினைக்கக்கூட காசு கொடுக்கவேண்டும் போல! சிலையைப் பற்றிய சில குறிப்புகள்:


 • பிரான்ஸ் தேசம் அமெரிக்காவுக்கு பரிசு கொடுக்கவேண்டும் என்ற ஐடியா உருவானது 1865-இல் நடந்த ஒரு இரவு உணவு விருந்தில்
 • சிலை செய்யும் பணி 1875-இல் துவங்கியது. பெயர் "Liberty enlightening the World". 1884-இல் முடிக்கப்பட்டது.
 • ஜூலை 4, 1884 அதிகாரப் பூர்வமாக பிரான்ஸ் அமெரிக்காவுக்கு அளித்தது
 • சிலையின் பாகங்களை (350 பாகங்கள்) ஏற்றிக்கொண்டு 1885 துவக்கத்தில் கப்பலொன்று அமெரிக்காவுக்குக் கிளம்பியது
 • ஜூலை 4, 1889-இல் பிரான்ஸில் வாழும் அமெரிக்கச் சமூகம் பிரெஞ்சு மக்களுக்குப் பரிசாக வெண்கலத்தில் செய்த சுதந்திரதேவி சிலையை (நாலில் ஒரு பாக அளவு) அளித்தது. இச்சிலை 35 அடி உயரமுடையது. இது இன்னும் Ile des Cygnes என்ற தீவில் நிற்கிறது (ஈபில் கோபுரத்திற்குத் தெற்காக 1.5 கி.மீ. தூரத்தில்)
 • 19-ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய காங்க்ரீட் கட்டுமானம் இச்சிலை. 1886-இல் பாகங்களைச் சேர்த்து சிலை முடிக்கப்பட்டது.
 • அக்டோபர் 28, 1886-இல் அப்போதைய ஜனாதிபதி குரோவர் க்ளீட்லேண்ட்-ஆல் அதிகாரப் பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது
 • தேசியச் சின்னமாக அக்டோபர் 15, 1924 இல் அங்கீகரிக்கப் பட்டது.
 • 50 மைல் வேகத்தில் காற்று வீசினால் சிலை மூன்று இஞ்ச் அளவும் ஏந்தியிருக்கிற தீபம் 5 இஞ்ச் அளவும் ஆடுகின்றன!
 • கிரீடத்தில் 25 ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. முள் போன்று நீட்டிக்கொண்டிருப்பவை ஏழு. ஏழு கடல்களையோ ஏழு கண்டங்களையோ குறிக்கிறது.
 • பீடத்திலிருந்து தீபம் வரையான உயரம் 152 அடி. பீடத்தையும் சேர்த்தால் 306 அடி உயரம். பாதத்திலிருந்து தலைமுடிய உயரம் 111 அடி. வலது கையின் நீளம் 42 அடி.
 • கிரானைட் பீடம் 89 அடி உயரமும், அஸ்திவாரம் 65 அடி.


அங்கிருக்கும் சிற்றுண்டி விடுதியில் பயங்கரக் கூட்டம். குளிர் வேறு வாட்டியெடுத்ததால் மொத்தமாக உள்ளே போய் அடைந்துகொள்ள உள்ளேயே நுழையமுடியவில்லை. வெளியில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் கடற்பறவைகள் ஏகத்துக்கும் களேபரப்படுத்திக் கொண்டிருந்தன.
மதுரை அழகர் கோயிலில் பையைத் தூக்கிக்கொண்டு நடந்தால் ஏதாவது குரங்கு வந்து பிடுங்கும். மக்கள் கையில் ஒரு குச்சியுடன் அலைவார்கள். இங்கே இப்பறவைகள் சற்றும் பயமில்லாமல் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களின் தட்டுகளிலிருந்து உணவைக் கொத்திப் பறந்தன. பெண்கள் லேசாக அலறினார்கள். குழந்தைகளுக்கு வழக்கம்போலக் குதூகலம்தான்.

Empire State Building-லிருந்து அதிகப்பட்ச ஜூமை உபயோகித்து நடுங்கிக்கொண்டே சுதந்திரதேவி சிலையை எடுத்தேன் என்று குறிப்பிட்டிருந்தேன். இப்போது சுதந்திரதேவி சிலை இருக்கும் தீவிலிருந்து Empire State Building-ஐ அதிகச் சிரமமில்லாமல் எடுத்தேன்.இந்தப் பக்கம் உயிருள்ள பறவையும் அந்தப் பக்கம் உலோகப் பறவையும்!No comments: