Thursday, February 16, 2006

பாஸ்டனில் பனிப் பொழிவு


பாஸ்டன் காரர்களெல்லாம் என்னத்த கன்னையா மாதிரி "என்னத்த குளிர்காலம்... என்னத்த பனி..." என்று சலித்துக்கொண்ட அசமஞ்சமான குளிர்காலம் இந்த தடவை. திடீர் திடீர் என்று வெயில் அடித்துக்கொண்டேயிருக்க டிசம்பரில் ஒரு நாள் 11 இஞ்ச் அடித்ததோடு சரி. அதைத் தவிர அட்சதை தூவியது போன்று அவ்வப்போது பொழிந்த பனியைத் தவிர வேறு ஒன்றையும் காணோம். இதற்கா இவ்வளவு அலட்டிக்கொண்டாய் என்று சக அலுவலக நண்பனிடம் கேட்கத் தோன்றியது. சி.என்.என்.னில் கூட "Where is winter?" என்று அலுத்துக்கொண்டார்கள்.


சனிக்கிழமையும் சூரியன் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்க Weather Channal-இல் பனிப்புயலைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ஞாயிற்றுக் கிழமை தரையைத் தொடும் என்று ஜோசியம் சொன்னபோதும் அவ்வளவாக நம்பவில்லை. இங்கும் ஜோஸியங்கள் அவ்வப்போது பொய்த்திருக்கின்றன.


ஆனால் சனியன்று நள்ளிரவு ஆரம்பித்தது - சற்றே வேகமான காற்றுடன் மொத்தமாகச் சேர்த்துவைத்து ஞாயிற்றுக்கிழமை முழுவதும் கொட்டித் தீர்த்தது பனி.

காற்றும் அடித்துக்கொண்டேயிருந்ததால் போக்குவரத்து படு மந்தம். 17" கொட்டியிருக்கிறது. அங்கிட்டு நியூயார்க்கிலும் Mildest winter in the history என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களின் வாயை அடைத்து 26" வரை பொழிந்து தள்ள மக்கள் முடங்குவதற்கு பதில் உற்சாகத்துடன் பனிப்பலகையையும் சறுக்குப் பட்டையையும் மாட்டிக்கொண்டு தெருவில் இறங்கி வழுக்கிக்கொண்டு செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

காற்றுக்கு பயந்து மாலை வரை பொறுத்திருந்த குழந்தைகள் இருட்டத் தொடங்கியபோது பொறுமையிழந்து வெளியே போய் பனியில் உருண்டு புரண்டுவிட்டு வந்தார்கள். மறுபடியும் திங்களிலிருந்து தட்பவெப்பம் 40 டிகிரி செல்ஷியஸ்க்கு மேலே ஓடிக்கொண்டு பளீரென்று வெயிலடிக்க, சேர்ந்த பனி உருகத் தொடங்கிவிட்டது.

இயற்கை நன்றாகவே கண்ணாமூச்சியாடுகிறது.

***

Wednesday, February 15, 2006

நிலா காயுது

இன்று காலை ஆறரை மணிக்கு இந்தப் பக்கம் உதயம் ஆரம்பித்திருக்க, மேற்கே நிலா போக மனதில்லாமல் காத்திருந்த காட்சி.

Flash உபயோகித்து எடுத்தால் இருட்டாக இருந்தது. இயற்கை வெளிச்சத்தில் எடுக்க ஒரு Setting இருக்கிறது. அதைப் பயன்படுத்தியும் எடுத்துப் பார்த்தேன். இரண்டு வகைப் படங்களும் இங்கே உங்கள் பார்வைக்கு.

***

Thursday, February 09, 2006

நானூ...நானூ...


குழந்தைகளுக்கு ஆர்வம் எங்கிருந்துதான் இவ்வளவு கொப்பளித்து வருகிறதோ என்று ஆச்சரியமாக இருக்கும். பரபரவென்று 24 மணிநேரமும் இருப்பார்கள். பொம்மைகளெல்லாம் போரடித்துவிட்டால் அவ்வளவுதான். பக்கத்தில் வந்து நின்றுகொண்டு நாம் செய்வதை 'நான் செய்யறேன்' என்று அடம்பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். 'நானு.... நானு...நானு' என்று அருகில் வந்து நின்றுகொண்டு துள்ளிக்குதிக்க ஆரம்பித்தார்களென்றால் நம்மால் நிலையாய் இருக்கமுடியாது. அவர்களது பரபரப்பு நம்மையும் தொற்றிக்கொண்டு விடும். "தள்ளிப்போ" என்று எகிறுவதெல்லாம் விரயம். பேசாமல் செய்துகொண்டிருக்கும் வேலையை அப்படியே நிறுத்தி அவர்களிடம் ஒப்படைத்துவிடுவது உத்தமம்.

அப்படிச் செய்த உத்தமமான காரியம் கீழே. துர்காவின் கைகளால் அரைபட்டுக் கொண்டிருப்பது பாக்கு அல்ல - மிளகு!