Friday, December 30, 2005

நியூயார்க் # 1 (Thanksgiving Day)


சென்ற Thanksgiving Day விடுமுறையில் நியூயார்க்குக்குப் போகலாம் என்று முடிவெடுத்து பிரயாண ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தேன். "அம்புட்டுப் பயலுவளும் அங்கிட்டுத்தான் போவாய்ங்க. பயங்கர ட்ராபிக் ஜாம் இருக்கும். பாத்துப் போ" என்ற நண்பரின் எச்சரிக்கையை மனதில் கொண்டு, வியாழனன்று அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் எழுந்துகொண்டு உறங்கிக்கொண்டிருந்த குழந்தைகளை அப்படியே பின்னிருக்கைகளில் உட்காரவைத்துவிட்டு பொட்டிபடுக்கைகளை எடுத்துக்கொண்டு கிளம்பும்போதே அட்சதை போன்று பனிப்பொழிவு ஆரம்பித்திருந்தது. Mass Pike இல் 70 மைல் வேகத்தில் வண்டியை விரட்டினால் ஒரு பயலையும் காணோம். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில வண்டிகள் அவ்வளவே.

ஆனால் கனெக்ட்டிக்கெட் மாநிலத்தில் நுழைந்ததும்தான் பிரச்சினை. மழை அடித்து நொறுக்க, கடும் பனிப்பொழிவு. சாலையின் இருபுறமும் ஒன்றும் தெரியவில்லை. சாலையின் மூன்று வழித்தடங்களில் நடுத்தடத்தில் முன்னே சென்றுகொண்டிருந்த லாரியின் சிவப்பு விளக்குகளை அடையாளம் வைத்துக்கொண்டு ஊர்ந்துதான் செல்ல வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 45 நிமிடம் அப்படியே சென்றுவிட்டு, நியூயார்க் எல்லைக்குள் நுழைந்தது மழை பனி ஒன்றுமில்லாமல் சுத்தமாக இருந்த சாலையில் வண்டியை மறுபடியும் விரட்டி Queens பகுதியில் இருக்கும் நண்பரது வீட்டுக்குச் சென்று சேர்ந்த போது மணி ஏழே முக்கால்தான் ஆகியிருந்தது!!! இதற்குத்தான் அவ்வளவு பயமுறுத்தினார்களா என்று இருந்தது. நடுவில் எங்கும் ஒரு நிமிடம்கூட நிறுத்தவில்லை.

ஒன்பது மணிக்கு Thanksgiving Procession எனப்படும் பிரபலமான ஊர்வலம் ஆரம்பித்து நகர்வலம் வருவார்கள் என்று சொல்லியிருந்தனர். அவசர அவசரமாகக் கிளம்பி ஜமைக்கா 179-இல் வண்டியை நிறுத்திவிட்டு சாலையின் ஓரத்தில் சரேலென்று இறங்கிய படிக்கட்டுகளுக்குள் போனால் Subway என்றழைக்கப்படும் தனியுலகம். பாதாள ரயில்களைப் பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை. அடியில் இவ்வளவு பெரிய ரயில்களின் இயக்கங்களின் அறிகுறி எதுவும் மேலே இல்லாமல் சாலையோரத்தில் பத்துக்குப் பத்து அளவில் படிக்கட்டுகள் மட்டும் தெரிகின்றன. நம்மூரில் பிரம்மாண்ட நிலப்பரப்பில் அமைந்திருக்கும் ரயில் நிலையங்களைப் பார்த்துப் பழகிவிட்டு, நியூயார்க்கின் Subway-யைப் பார்த்தால் உண்மையாகவே ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்து 47-ஆம் தெரு (எல்லா நிறுத்தளின் பெயர்களும் கிட்டத்தட்ட ஏதாவது ஒரு தெரு எண்ணிலோ பெயரிலோ இருக்கிறது)வுக்குச் சென்று பார்த்தால் ஊர்வலம் தாண்டிப் போய்விட்டது என்று சொன்னார்கள்.




பின்பு பாதாள ரயிலைப் பிடித்து மறுபடியும் 42-ஆம் தெருவுக்குச் சென்று அம்மிக்கொண்டிருந்த கூட்டத்தில் புகுந்து கடந்து சென்றுகொண்டிருந்த ஊர்வலத்தைப் பார்த்தோம்.



வானத்தில் ஹெலிகாப்டர்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. குளிர்காற்று முகத்தை விறைக்கச் செய்தது.




பெரிய பெரிய பொம்மை பலூன்களோடு ஆட்டமும் பாட்டுமாகக் கடந்துசென்ற ஊர்வலத்தைக் குழந்தைகள் ஆர்வத்தோடு பார்த்து ரசித்தார்கள்.



திரும்பி நான்கைந்து கட்டிடங்கள் கடந்து நடந்தால் Empire State Building என்றழைக்கப்படும் அந்தப் புகழ்பெற்ற பளபள கட்டிடம். கழுத்துவலிக்க அண்ணாந்து பார்த்தால் ஊசியாக முடிந்தது.


உள்ளே செல்ல நின்றிருந்த பெரிய வரிசையில் இணைந்து பெரிய முஸ்தீபுகளுடன் சீட்டு வாங்கிக்கொண்டு அந்த லிப்டில் நுழைந்தோம். 86-ஆம் மாடிக்குக் கொண்டுபோய் விடுகிறார்கள் - அதிவேகத்தில். அங்கிருந்து அடுத்த 6 மாடிகளுக்கு இன்னொரு லிப்டைப் பிடித்துச் செல்ல பார்வையாளர் மாடத்திற்குப் போய்ச் சேர்ந்தோம்.


No comments:

Add to Technorati Favorites