பெய்ரூட்டின் பரபரப்பான கார்னிஷ்ஷில் நின்றுகொண்டு கடலில் துண்டாடப்பட்டு நின்று கொண்டிருந்த இம்மலைகளைப் பார்க்கும்போது நெஞ்சடைத்தது. "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா" என்று தோன்றியது.

மஸ்கட்டில் இதே போன்று மலைத்துண்டுகள் கடலில் இருந்தாலும், பெய்ரூட்டில் உள்ளதைப் போல பிரம்மாண்டமானவை அல்ல. கார்னிஷ்ஷின் இந்த இடம் மிக உயரமான மலைப் பகுதி. எதிரே தோன்றும் இம்மலைகளின் உச்சியும், நான் நின்றிருந்த தரைப்பகுதியும் ஒரே மட்டம். கீழே பாதாளத்தில் கடல்!
கடற்கரை நீளமாக இருந்தாலும் இந்த இடம் மட்டும் உள்ளே வளைந்திருக்கிறது. அப்படியே வலதுபுறம் திரும்பி எடுத்த படம் இது.

இடதுபுறக் காட்சி.

ஓரத்தில் எறும்பு அளவிற்கு மனிதர்கள் நிற்பது தெரிகிறதா?

கீழே எட்டிப்பார்த்து எடுத்த படம். ஏதோ காலடியில் கடல் அலைகள் வந்து முட்டுவது போலத் தோன்றினாலும் எதிரே உள்ள மலையின் உயரத்தின் அளவு என் கால்களின் கீழே ஆழத்தில் கடலலைகள்!
கொடைக்கானலில் "தற்கொலை முனை" என்று இருப்பது போல இதுவும் தற்கொலை முனையாம். இங்கேயிருந்து நிறைய பேர் குதித்துச் செத்திருக்கிறார்களாம். அலைகள் மலைகளில் மோதும் சத்தம் ஹாவென்று நிரந்தரமாக ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
நெடுக தடுப்புக்கம்பிகளால் வேலி போட்டு வைத்திருக்கிறார்கள். பின் என்ன மதில் சுவரா கட்ட முடியும்? (படத்திலிருப்பது நண்பன் ராயித் தோமா)

ஓரமாக நடந்துசென்று இயற்கையழகை ரசிக்க நல்ல நடைபாதையைக் கட்டி வைத்திருக்கிறார்கள். நடைபாதை சரேலென்று கீழே இறங்கி, ஒரு கி.மீ. தூரத்தில் கடல் மட்டத்திற்கு வந்துவிடுகிறது.

சிற்றுண்டி விடுதிகளும், பார்களும் நிறைய உள்ளன. இங்கே லாஸ்வேகாஸ் இரவு உலகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். பெய்ரூட்டிலும் இரவு உலகம் இயங்குகிறது. நூற்றுக்கணக்கான கேளிக்கை விடுதிகள். இரவில் கடற்கரையே ஒளி விளக்குகளால் ஜொலிக்கிறது. கடலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு விடுதியொன்றை எடுத்த படம்!

நிலம் வீடுகளின் விலை மிக மிக அதிகம் என்று சொன்னான் ராயித். புகழ் பெற்ற அரபுப் பாடகிகளும் பாடகர்களும் லெபனானிலிருந்து அதிக அளவில் வந்திருக்கிறார்களாம். அரபு பாப் இசையும் கொடிகட்டிப் பறக்கிறது. 24 மணி நேரமும் தொலைக்காட்சியில் MTV போல விளக்குகளின் ஒளி மழையில் அழகான நங்கைகள் பாடிக்கொண்டேயிருக்கிறார்கள். யுவன்களும் யுவதிகளும் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். துள்ளல் இசை!
அடுத்த பதிவில் இன்னும் சில Breath-taking படங்களுடன் வருகிறேன்.
No comments:
Post a Comment