Thursday, July 13, 2006

கோவிலில் சந்தித்த குயில்

மாஸசூசெட்ஸ்ஸின் ஆஷ்லாண்டில் (Ashland) இருக்கும் லஷ்மி கோவில் பிரபலமானது. நாங்கள் இருப்பது ஆஷ்லாண்டிலிருந்து நான்கு மைல்கள் கிழக்கே இருக்கும் நேட்டிக் என்ற சிறுநகரத்தில். வழக்கமாக சனி அல்லது ஞாயிறன்று குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்வது வழக்கம். பெரிய கல்யாண மண்டப அளவிலிருக்கும் கோவிலின் உள் நுழைந்ததும் இடதுபுறம் சிறிய சன்னிதானத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். எதிரே இடதோரமாக விநாயகர். நடுவே பார்வதியும் வலதோரமாக திருப்பதி வெங்கடாஜலபதி அபாரமான அலங்காரத்துடன் நின்றிருப்பார். அவருக்குப் பக்கத்தில் வலது புறமாக நடராஜர். ஐயப்பனுக்கு எதிரே முருகன். நமக்கு வலதோரத்தில் நவக்ரஹங்களும் மூலையில் ஹனுமனும் எழுந்தருளியிருக்க நடுவே நிறைய இடம். அமைதியான கோவில்.

Image and video hosting by TinyPic

ஏதோ மாலை வேளையில் கோவிலுக்குப் பின்பு விழுந்து சூரியன் அஸ்தமித்ததும் நிழலுருவமாக அற்புதமாகக் காட்சியளித்த கோவிலை கேமராவில் பிடித்தேன்


இன்று மாலை கோவிலுக்குச் செல்லலாம் என்று மனைவி கூறியதும் மறுபேச்சு சொல்லாமல் அலுவலகத்திலிருந்து விரைவாக வீட்டுக்கு வந்து கோவிலுக்குப் புறப்பட்டோம். வாரயிறுதியில் பொதுவாக நிறைய கூட்டம் இருக்கும். இன்று நாங்கள் சென்றபோது மொத்தமே பதினைந்து பேர் கூட இருந்திருக்க மாட்டார்கள். உள்ளே நுழைந்து ஐயப்பனை வணங்கியதும் காதில் பளீரென்று துல்லியமாக வந்து நிறைந்தது ஒரு பெண்மணியின் பாடல். கேட்ட வினாடி நம்மை நின்ற இடத்திலேயே நிறுத்தும் அந்த அற்புதக் குரலின் பரிச்சயத்தில் மனம் திகைத்தது. எதிரே வலதோரமாக வெங்கடாஜலபதி சன்னிதானத்தின் முன்பு நான்கைந்து பேர் நின்றிருக்க ஒரு பெண்மணி குயிலினும் இனிய குரலில் பாடிக்கொண்டிருந்தார். பொதுவாக யாராவது பக்தர்கள் பாடுவது வழக்கமான விஷயம்தான். ஆனால் அந்தக் குரல் வழக்கமானதல்ல.

யோசனையுடன் நாங்கள் மெதுவாக நடந்து இடதோர விநாயகரை வணங்கிக்கொண்டே எங்களுக்கு முதுகுகாட்டி நின்றுகொண்டு பாடிக்கொண்டிருந்த அவரைப் பார்க்க பளீரென்று மனதில் மின்னல். அவர் குயிலினும் இனிய குரலாளர் வாணி ஜெயராம்! என்னால் கண்களையே நம்ப முடியவில்லை. பார்வதியை வணங்கிவிட்டு வெங்கடாஜலபதியிடம் வணங்க வாணிஜெயராமின் அருகாமையில் வந்து நின்று கொண்டோம். என் மூத்த பெண் அக்ஷரா என்னிடம் அவரைப் பற்றி விசாரிக்க நான் "SPB அங்கிள் மாதிரி இவங்களும் பெரிய பாடகி. பேரு வாணி ஜெயராம்" என்று அவளுக்குச் சொல்ல அவள் அவரது அருகில் நின்றுகொண்டு அவர் கண்மூடி மெய்மறந்து பாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். இளையவள் துர்கா வழக்கமாக நிலைகொள்ளாது அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்.
Image and video hosting by TinyPic
அவரது அந்த அற்புத குரலை நேரில் கேட்க நாங்கள் உண்மையிலேயே பாக்கியம் செய்திருக்க வேண்டும். "தெய்வீகக் குரல்" என்று குறிப்பிடுவதை நேரிடையாகக் கேட்டு உணர முடிந்தது. மனமெங்கும் பரவசம் பரவியது. உருகிப் பாடும் அவரது குரலில் மனம் நெகிழ்ந்தது. மொத்தத்தில் வார்த்தைகளில் அடக்க முடியாத உணர்வு எங்களை ஆட்கொண்டது. பின்பு முருகன் முன்பு நின்று இன்னொரு பாடலை அற்புதமாகப் பாட, அர்ச்சகர் வெளியில் வந்து நின்றுகொண்டு கன்னத்தில் போட்டுக்கொண்டே இருந்தார். அக்ஷரா வாணி ஜெயராம் அருகில் சென்று அவளாகவே அறிமுகப்படுத்திக்கொள்ள அவளை அணைத்துக் கொண்டு மென்மையான குரலில் விசாரித்தார். ஞாயிறன்று (16 ஜுலை) அக்ஷராவுக்குப் பிறந்தநாள். அதைச் சொல்லி அவரது காலில் விழுந்து நமஸ்கரித்தவளைச் சட்டென்று எழுப்பி முருகனைக் காட்டி 'இங்க எல்லாம் அவர்தான். அவரிருக்கும்போது எனக்கு நமஸ்காரம் எதுக்கு?' என்று சொல்லி மறுபடியும் அவளை அணைத்து ஆசிர்வதித்தார்.

அர்ச்சகர் அவரது பாடலுக்குப் பாராட்டுதலைத் தெரிவிக்க அந்தப் பாடலை அவரே இயற்றி இசையமைத்துப் பாடியதாகச் சொல்லி பாடல் வரிகளை அழகு தமிழில் அட்சர சுத்தமாகச் சொல்லிக்காட்ட நான் அசந்து போனேன். துர்கா சட்டென்று அவரிடம் 'ஆன்ட்டி, நீங்க நல்லாப் பாடறீங்க' என எல்லாரும் சிரிக்க அவர் 'நல்லா பாடறேனாம்மா? ரொம்ப தேங்க்ஸ்' என்று சொல்லி சிரித்தார்.

அவரிடம் இன்னும் நிறைய ஏதேதோ பேசவேண்டும் என்று மனதில் தோன்றியும் அவரைத் தொந்தரவு செய்ய மனமில்லாமல் பிரிய மனமில்லாமல் விடைபெற்றுக்கொண்டு வெளியேறினோம்.

வழக்கமாகக் கையில் தூக்கிக்கொண்டு அலையும் கேமராவை இன்று வீட்டிலேயே விட்டுவிட்டு வந்ததை நினைத்து நொந்துகொண்டேன். இருந்தாலும் அவர் உருவமும் அந்த அற்புதக் குரலும் மனதில் ஆழப் பதிந்துவிட்டன.

இது எங்களுக்கு ஒரு பொன் மாலைப் பொழுது.

***

11 comments:

இலவசக்கொத்தனார் said...

சுந்தர்,

இரு வாரங்களுக்கு முன் நான் அங்கு வந்திருந்தேன். எனது கஸின் வீடு இருப்பது கோயில் அருகில்தான். கோயிலுக்கும் சென்றிருந்தேன். அழகான கோயில்.

ஒரு விசேடத்திற்காக வந்ததால் பிளாக்கர்கள் யாரையும் சந்திக்க முடியவில்லை. கட்டாயம் அடுத்த முறை.

நல்ல அனுபவம்தான் உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

சுந்தர்,

அருமையா எழுதி இருக்கீங்க. நானும் கூடவெ வந்து நின்னு கேட்டது போல உணர்ந்தேன்.

கோயில் வர்ணனை பிரமாதம். ( இங்கே நமக்குத்தான் கொடுப்பினை இல்லைப்பா)

புகைப்படம் அருமை. இந்த மாதிரிதான் வேணுங்கற நேரத்துலே கேமெரா கொண்டுபோக
மறந்துருவோம்(-:

மனசுலே படம் புடிச்சீங்கல்லே?

குழந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

//ஆண்ட்டி, நீங்க நல்லா பாடறீங்க..// :-)))))

இதுதான் குழந்தைன்றது. கள்ளம் கபடமில்லாம 'பட்'ன்னு சொல்லுச்சு பாருங்க.

Boston Bala said...

சுந்தர், இந்த auto-play option-ஐ எடுத்து விட முடியுமா?

செல்பேசியிலேயே கேமிரா இருக்குமாறு ஒன்று வாங்கிவிடுங்கள்

G.Ragavan said...

ஆகா! ஆகா! இன்னிசைக் குயிலை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இன்றுவரை நிறைவேறவில்லை. நிறைவேறும் என்று காத்திருக்கிறேன்.

முருகன் மேல் அவரே எழுதிய பாடல் ஒன்று உண்டு என்று தொலைக்காட்சிப் பேட்டியில் கேட்டேன். அந்தப் பாடலைக் கேட்க எனக்கு ஆவல். நிறைவேறுமா?

G.Ragavan said...

வாணி ஜெயராமின் புகைப்படத்தையும் இங்கே போட்டிருக்கலாமே.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

இலவசக்கொத்தனார்

//இரு வாரங்களுக்கு முன் நான் அங்கு வந்திருந்தேன்.//

அடடா. தெரிஞ்சிருந்தா சந்திச்சிருக்கலாம். பரவாயில்லை அடுத்த தடவை தகவல் சொல்லுங்க. :)

துளசிக்கா,

//மனசுலே படம் புடிச்சீங்கல்லே?//

பின்ன?

//குழந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

நன்றி.

//இந்த auto-play option-ஐ எடுத்து விட முடியுமா?//

எடுத்தாச்சு!

//செல்பேசியிலேயே கேமிரா இருக்குமாறு ஒன்று வாங்கிவிடுங்கள்//

ஆமங்க. வாங்கணும். ஆனாலும் இந்தூர்ல ரொம்ப அநியாயத்துக்குக் காசு புடுங்கறாங்க. போனைத் தொட்டாலே பில் எகிறுது. நாம கூப்டாலும் நம்மளைக் கூப்டாலும் Voice message, SMS னு எல்லாத்துக்கும் காசு புடுங்கறாங்க. இதுக்கு நம்மூர் எவ்வளவோ தேவலை! நிறைய சம்பளம் வாங்கி நிறைய செலவு பண்ணி - என்னத்த சொல்றது. என்னமோ போங்க! :(

நோக்கியா தொள்ளாயிரத்து ஐநூறு :) எப்படி இருக்காம்? அதுல கம்பிலா இணைய இணைப்பு இருக்கறதலா செல் போன் நிறுவனங்கள் மூலமா இணைய சேவை தேவையில்லையாமே! எனி ரெகமண்டேஷன்ஸ்?

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

*கம்பிலா

கம்பியிலா!

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

ராகவன்,

//வாணி ஜெயராமின் புகைப்படத்தையும் இங்கே போட்டிருக்கலாமே.//

போட்டிருக்கணும். போட்டுட்டேன்.

நன்றி.

Boston Bala said...

----நிறைய சம்பளம் வாங்கி நிறைய செலவு பண்ணி ----

இதைக் குறித்து ஏற்கனவே எழுதி விட்டீரா? (அப்படியென்றால் சுட்டி கொடுங்களேன்; இல்லையென்றால், உங்கள் பார்வையில் அமெரிக்கா குறித்து பதிவு ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்)

செல்பேசி எல்லாம் நிறுவனங்கள் தருவதில் எது சல்லிசோ, அதுதான். எனக்குப் பிடித்தமான செல்பேசி நிறுவனம்: வெரைசான் வயர்லெஸ். கடைக்கு சென்று, இரண்டு வருட பத்திரம் கையெழுத்திட்டு, குறைந்த விலையில் எது கிடைக்கிறதோ, எடுத்துக் கொண்டு வந்து விடுவேன்.

குமரன் (Kumaran) said...

கோவிலில் குயிலைச் சந்தித்ததைப் பத்தி நல்லா எழுதியிருக்கீங்க சுந்தர்.

பாபா கேட்டுக்கிட்ட மாதிரி 'முடிஞ்சா உங்கள் பார்வையில் அமெரிக்கா'வைப் பத்தி எழுதுங்க.

தம்பி said...

சுந்தர்,

ஸ்தல புராணம் எல்லாம் அருமையா எழுதறிங்க.

படம் அருமையா வந்திருக்கு.


அன்புடன்
தம்பி