Tuesday, January 10, 2006

நியூயார்க் # 2 (இசை ரம்பமும் எட்டாம் உலகமும்)

உச்சியில் காற்று அடித்து தூள் கிளப்பியது. காதுமடல்கள் வலிக்கத் துவங்கின. நல்ல வேளையாக மேகமூட்டம் எதுவுமில்லாது சூரியன் தாராளமாய் பிரகாசித்துக்கொண்டிருக்க, நான்கு திசைகளிலும் நியூயார்க் என்ற அந்த காங்க்ரீட் காட்டை - கோடுகளாக, கட்டங்களாக, சதுரங்களாக, செவ்வகங்களாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.


நான்கு திசைகளிலும் இருக்கும் முக்கிய கட்டிடங்களைப் பற்றியும், இடங்களைப் பற்றியும் வரைபடங்களைப் பதித்திருக்கிறார்கள் என்பதால் பார்க்க வேண்டிய இடங்களைக் கண்டுபிடிப்பதில் சிரமமில்லாது இருந்தது.

தொழில்நுட்ப உதவியுடன் கம்பியில்லா கேட்கும் கருவியையும் வாடகைக்கு வாங்கி மாட்டிக்கொண்டு உலவினால், நாம் இருக்கும் திசைக்கேற்ப குரல் நம்மிடம் அத்திசையில் இருக்கும் இடங்களைப் பற்றி விவரித்துக்கொண்டே இருக்கிறது. கிழக்கிலிருந்து வடக்குக்குத் திரும்பினால் குரலும் வடக்குப் பக்கத்தைப் பற்றிச் சொல்லத் துவங்குகிறது. ஒரு Virtual Tour Guide கூடவே வரும் உணர்வைத் தந்தது.

பெப்ஸி நிறுவனத்தைப் பார்க்கும்போது மனதில் பழைய நினைவுகள் அலைமோதின! எட்டுவருடங்கள் அந்நிறுவனத்தில் - முதல் வேலை - பணிபுரிந்த காலங்களை நினைத்துப் பார்த்துக்கொண்டேன்.கட்டிடத்தின் உச்சியில் குவிந்து ஊசியாக முடியும் அமைப்பை அண்ணாந்து பார்த்தேன். மேகங்கள் வேகமாக நகர்ந்து செல்ல - பக்கத்து ரயில் நகரும்போது அது செல்கிறதா அல்லது நமது ரயில் செல்கிறதா என்று சில வினாடிகளுக்கு ஒரு குழப்பம் வருமே அது போல - நகருவது மேகங்களா அல்லது கட்டிடமா என்று பார்வைக் குழப்பம் நேரிட்டது!


நம்மூரில் இத்தொழில்நுட்பத்தைப் புகுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது - குறிப்பாக மீனாட்சியம்மன் கோயில் போன்ற பிரம்மாண்ட தலங்களில் இவ்வசதி செய்யப்பட்டால் வெளிநாட்டுப் பயணிகளுக்குப் பேருதவியாக இருக்கும். அரைகுறை கைடுகள் எதையாவது உளறிக்கொட்டி நம்நாட்டின் மீது தவறான பிம்பத்தை உருவாக்காமல் தடுக்கவும் உதவும். போன விடுமுறைக்குச் சென்றிருந்தபோது - "கைடு வேணுமா ஸார்!" என்று ஒருவர் அணுகிக் கேட்டதும் தூக்கிவாரிப் போட்டது. "அண்ணே நான் உள்ளூர்தாண்ணே!" என்று வாயைத் திறந்ததும்தான் சிரித்துவிட்டு விலகினார். "டே. மொதல்ல அந்தக் குறுந்தாடிய எடுக்கிறியா?" என்றான் கூட வந்திருந்த நண்பன். "இது என்னடா அநியாயமா இருக்கு? ஊர்ல யாரும் குறுந்தாடியே வச்சிக்கலையா?" என்று விசனப்பட்டேன். நிற்க. தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு நம்மூரில் செய்யவேண்டியது எவ்வளவோ இருக்கிறது. அறநிலையத் துறையும், சுற்றுலாத் துறையும் கைகோர்த்துக்கொண்டு முழுவீச்சில் இதைச் செய்தால் சுற்றுலா மிகவும் மேம்படும்!

கிரிக்கெட் ஸ்டம்பின் உயரத்திற்கு தூரத்தில் தீவு நடுவில் தெரிந்தது சுதந்திர தேவி சிலை என்றார்கள்.

அங்கு வைத்திருந்த டெலஸ்கோப்பின் மூலம் பார்ப்பதற்குக் குழந்தைகள் க்யூ நின்றிருந்ததால் எனது கோடக்கின் 10x ஜூமைப் பயன்படுத்தியதில் - நரம்புத் தளர்ச்சி வந்தது போல -காட்சி நடுங்கியது. கைப்பிடிச்சுவரில் கேமராவை வைத்துப் பார்த்ததில் ஓரளவு தெரிந்தது. கொஞ்சம் புகையாக இருந்தாலும் அப்படியே கிளிக்கினேன். மறுநாள் சுதந்திர தேவி சிலையைப் பார்க்கவேண்டும் என்று உத்தேசித்துக்கொண்டோம்.


நல்ல அசதியுடன் திரும்பக் கீழே மின்னல்வேகத்தில் வந்து பாதாள ரயிலைப் பிடிக்கப் போகையில் இசைச் சத்தம். ரயில் நிலையத்தில் ஒரு பெண்மணி பெரிய ரம்பம் ஒன்றைக் கால்களுக்கிடையில் இடுக்கிக்கொண்டு வயலின் வாசிக்கும் Bow வைப் பிடித்துக்கொண்டு ராவு ராவு என்று - எதையும் அறுக்கவில்லை - இசை எழுப்பிக்கொண்டிருந்தார்!! கிட்டத்தட்ட வயலின் போல - என்ன கொஞ்சம் அதிக ஒலியுடன் - இசை பிரவாகமாக வந்துகொண்டிருந்தது.

எனக்கு நம்மூர் கொட்டாங்கச்சி வயலின் நினைவுக்கு வந்தது.

அதோடு பள்ளியில் படிக்கும்போது கலந்துகொண்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் பாடிய வரிகளும் உடனடியாக நினைவுக்கு வந்தது.

"ஆரம்பம் என்று நாங்கள் சொல்லுகின்ற வேளையிலே ஆ ரம்பம் என்று சிலர் எண்ணுகிறார். இதன் அருமைதனைத் தெரியாமல் எண்ணுகிறார்" என்று "மணப்பாறை மாடு கட்டி" பாடல் மெட்டில் பாடியிருக்கிறோம். இந்த ரம்ப இசையைக் கேட்டதும் அந்த வில்லுப்பாட்டு சட்டென்று நினைவுக்கு வந்தது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தோன்றியதாம் இது. பின்பு இரண்டாம் உலகப்போர் வாக்கில் தேய்ந்து மறைந்துபோனதாம் - காரணம் - ஆயுதங்கள் செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட்ட இரும்பு, எக்கு உலோகங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டதால் ரம்பம் செய்வதையே நிறுத்தி வைத்திருந்தார்களாம். இரண்டாவது இதை வாசிக்க இடது கை பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டுமென்பதால் ஆண்கள் மட்டும் வாசித்துவந்தார்களாம். அவர்களும் உலகப்போரில் பங்குபெறுவதற்காகச் சென்றுவிட்டதால் கற்றுக்கொள்ள ஆளில்லாமல் அழியும் நிலைக்கு வந்துவிட்டதாம் இந்தக் இசை. இப்போது நடாலியா பரூஸ் (Natalia Paruz) என்ற பெண்மணி இவ்விசைக்கு உயிர்கொடுக்க முழுமுயற்சி செய்துவருகின்றாராம்.

இதுமாதிரி தெருக்களில் ஆங்காங்கே இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டும் மெலிதாகப் பாடிக்கொண்டும் நாகரீகமாக "காணிக்கை" பெற்றுக்கொள்கின்றனர். நம்மூரில் ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் இசைத்துக்கொண்டு வரும் பார்வையிழந்த பிச்சைக்காரர்களைப் பார்த்திருக்கிறோம். இங்கு இவர்களைப் பார்த்தால் - இவர்களது நடையுடை பாவனைகளைப் பார்த்தால் - பிச்சைக்காரர் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது. முதலில் இவர்களைப் பிச்சைக்காரர்கள் என்று சொல்வதே சரியா என்று தெரியவில்லை. ஆனால் பாஸ்டனின் சில சந்திப்புகளில் கறுப்பர்கள் கழுத்தில் Homeless - Please help அட்டையுடன் ஆங்காங்கே பிச்சையெடுப்பதைப் பார்த்திருக்கிறேன். பிச்சையெடுப்பதிலும் விழுந்து பிடுங்காத நாகரீகம்! ஜெயமோகன் பார்த்தால் "எட்டாம் உலகம்" என்று - சற்று மாறுதலாக ஏழாம் உலக நரக வேதனைகளின்றி - இவர்களைப் பற்றி ஒரு நாவல் எழுதக் கூடும்!

No comments: