Friday, December 16, 2005

* மெர்க்குரிப் பூக்கள்-34 : சிரியா # 1 *

சென்ற வருடம் பிப்ரவரியில் மறுபடி சிரியா போக வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்ததும், முந்தைய பயணத்தில் பார்க்காது விட்டவற்றை ('சைட்' அடித்தல் என்று நீங்களாகக் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பல்ல) இம்முறையாவது பார்க்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு கிளம்பினேன்- அதே அலுவலக நண்பர் நரேந்தருடன்!

போனமுறை பெட்டியைக் கோட்டை விட்டதை ஞாபகப்படுத்திக் கொண்டு இம்முறை லக்கேஜாக எதையும் போடாமல் ஒரு சிறு ட்ராலிப் பெட்டியில் அமுக்கி அமுக்கி அடைத்துக் கையிலேயே கொண்டுசென்று விட்டோம். 'ரொம்ப குளிர்றது. த்ரீ ட்டியர் ஆர்க்கிடெக்சர்-ல வந்துருங்கோ' என்று வாடிக்கையாளர் அலுவலகத்திலிருந்த ஒரே இந்தியர் எச்சரிக்கை செய்யவே ஆளுக்கொரு ஜெர்க்கினை வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

இம்முறையும் துபாய்க்குப் போய் அங்கிருந்து டமாஸ்கஸ் வழியாக அலெப்போ (Aleppo) செல்லவேண்டியிருந்தது. துபாயிலும், மற்ற எமிரேடுகளிலும் ஒரு வாரமாக காலை வேளைகளில் அளவுக்கதிகமான மஞ்சு படர்ந்து புகை மூட்டமாகக் கண்ணே தெரியவில்லை. இருந்தாலும் வழக்கமான வேகத்தில் பறந்து சென்று நிறைய இடங்களில் கூட்டங் கூட்டமாக வாகனங்கள் முட்டிக் கொண்டு விபத்துகளில் பலர் உயிர் துறந்து போனார்கள்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து இறங்க முடியாமலும், துபாயிலிருந்து கிளம்ப முடியாமலும் தவித்து ஆயிரக்கணக்கான பயணிகள் விமானநிலையத்தில் மாட்டிக்கொள்ள, நகரத்திலிருந்த அனைத்து விடுதிகளும் நிரம்பிவழிந்து, நிறைய அசெளகரியங்கள்.

மஸ்கட்டிலிருந்து காலையில் கிளம்பி துபாயை பதினொரு மணி போல் அடைந்தோம். இறங்குவதற்கு முன்பு, மேலிருந்து பார்க்கையில், நகரமெங்கும் புகைமூட்டமாக, மேகத்தின் மீது அமைக்கப்பட்ட நகரம் போல் காட்சியளித்தது துபாய். புகழ்பெற்ற எமிரேட்ஸ் டவர்ஸ் மேற்பாதி மட்டும் புகையிலிருந்து நீட்டிக் கொண்டு காட்சியளிக்க, அது ஒரு ரம்யமான காட்சி-ஆகாயத்திலிருந்து. எங்கள் விமானம் இறங்குவதில் சிரமமேதுமில்லை. ஆனால் நாற்பது நிமிடங்கள் கழித்து டமாஸ்கஸ்ஸிற்குக் கிளம்ப வேண்டிய விமானம், மற்ற தாமதக் குளறுபடிகளால், இரண்டு மணி நேரம் கழித்தே புறப்பட்டது. எங்களையும் இறங்க விடாததால் பங்கரைகளாகத் தலையைச் சொரிந்துகொண்டு விமானத்திலேயே அமர்ந்திருந்தோம்.

டமாஸ்கஸ்ஸிலிருந்து அலெப்போவிற்கு விமானம் கிடைக்காததால் சாலை வழிப் பயணம் செய்ய முடிவெடுத்து டமாஸ்கஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த வினாடியில் முகமும் கைவிரல்களும் கிட்டத்தட்ட உறைந்து போய்விட, அறைந்தது குளிர். பஞ்சாலை இருக்குமிடங்களில் காற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பஞ்சுத் துகள்கள் விரவியிருப்பது போல, விமான நிலையத்தின் வெளியே தூசு போல விழ ஓட்டுனர் 'பனி பெய்யுது' என்றார். இதான் பனியா என்று எனக்குச் 'சே' என்று இருந்தது. வாழ்க்கையில் இதுவரை பனிப்பொழிவைப் பார்த்ததில்லை என்று முன்பு குறிப்பிட்டதை நினைவூட்டிக் கொள்ளவும்.

நான் ஏதோ பனிப்பொழிவென்றால் ரோஜா படத்தில் வருவதைப் போல 'புது வெள்ளை மழை' என்று பாடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த மட்டில் குளிரவாவது செய்கிறதே என்று சமாதானமாகிக் கொண்டு காரில் ஏறிக் கொள்ள நகரத்தைக் கடந்து பிரதான நெடுஞ்சாலையில் பயணிக்கத் துவங்கினோம். சூரியன் பிரகாசமாக வெம்மையின்றி ஒளிர்ந்தான். கட்டிடங்கள் கரைந்து வெட்ட வெளியில் வண்டி ஓடத் துவங்கியதும் தொலைவில் மலைத் தொடர்களைப் பார்த்தேன். நரைமயிர் போன்று அவற்றின் தலையில் வெளிர் சாம்பலாகப் படிந்திருக்க, அது பனி என்று உறைக்கச் சற்று ஆர்வம் கிளம்பியது. இப்போது சூரிய ஒளி குறைந்து பஞ்சுத் துகள்களில் அடர்த்தி அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. லேசாக சன்னல் கண்ணாடியை இறக்கிப் பார்க்க காற்றின் வேகமும் அதிகரித்து வருவதை உணர்ந்தோம்.

டமாஸ்கஸ்ஸிலிருந்து அலெப்போவிற்குச் சாலைவழிப் பயணம் மூன்றரை மணி நேரம் பிடிக்கும். நாங்கள் ஒரு பதினைந்து கிலோமீட்டர்கள் கடந்திருப்போம். சாம்பல் தொப்பிகள் போட்டிருந்த மலைத் தொடர்களில் சாம்பல் மறைந்து வெண்மை கூடிக்கொண்டே வந்து, தொப்பி முழு ஆடையாக மாறி, சேலையாக எங்கும் நீண்டு திடீரென்று பார்த்தால் நாங்கள் சென்று கொண்டிருந்த சாலையைத் தவிர எங்கும் பளீர் வெண்மை! மேலிருந்து கீழாக விழுந்து கொண்டிருந்த பனி, இடமிருந்து வலமாக விழ, பார்த்தால் பனிப் புயல். நூறு கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் சென்று கொண்டிருந்த கார் சட்டென்று வேகம் குறைந்து இருபதில் தவழத் துவங்க, முன்னே வாகனங்களின் ஊர்வலம். எதிர்புறத்தில் டமாஸ்கஸ்ஸூக்குச் செல்லும் சாலையிலும் வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருக்க, காற்றின் வேகம் இன்னும் கூட, சன்னல் கண்ணாடிகளில் சொத் சொத்தென்று பனி அடர்த்தியாக அறைய, ஓட்டுனர், முன்புற கண்ணாடியைத் துடைக்கும் துடைப்பான்களை இயக்கிவிட்டார். முகப்பு விளக்குகளையும் பிரகாசமாக எரியவிட அவை சோகையாக வெளிச்சத்தை உமிழ்ந்தன.அந்த அளவு பனியை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியத்திலும் அதிசயத்தில் வாயடைத்துப் போய் அமைதியாக 'விஷ்க் விஷ்க்' என்று கண்ணாடியில் படர்ந்த வெண்பனியைத் துடைத்தெறிந்த துடைப்பான்களின் இயக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். சாலையோரத்திலிருந்த ஆலிவ் மரங்களிலும் மற்ற சில மரங்களிலும் பனி அடர்ந்து படிந்திருக்க, பாரம் தாங்காமல் அவை ஒருபுறமாகச் சாய்ந்து விழுவதுபோல் நின்று கொண்டிருக்க, தரையே தென்படவில்லை. கண்ணாடியை இறக்கிப் பனியைக் கையில் பிடிக்கும் உத்தேசத்துடன் நீட்டி உள்ளிழுத்துப் பார்ப்பதற்குள் அவை தண்ணீராகிவிட ஏமாற்றமாக இருந்தது. 'கொஞ்சம் வண்டியை நிறுத்துறீங்களா?' என்று கேட்டதற்கு 'நிறுத்தினால் இஞ்சின் அணைந்துவிடும்; பின்பு கிளப்ப முடியாது' என்று ஓட்டுனர் மறுத்துவிட்டார். மேலும் ஒற்றையடிப் பாதையைப் போல் முன்னே சென்று கொண்டிருந்த வாகனங்களில் சக்கர அடையாளத்தை வைத்துத்தான் சாலையைக் கண்டுபிடிக்க முடிந்தது. ஓரமாக நிறுத்துகிறேன் பேர்வழி என்று பள்ளம் தெரியாமல் விட்டால் பனியில் சமாதியாகி விடுவோம் என்று பயமாக இருக்க நிறுத்தாமல் ஊர்தலைத் தொடர்ந்தோம்.

அதற்குள் எதிர்புறச் சாலையில் ஆங்காங்கே சில வாகனங்கள் ஸ்தம்பித்து நின்று விட்டதையும், அதன் ஓட்டுனர்கள் வெளியிலிறங்கி கண்களை இடுக்கிக்கொண்டு, கைகளால் முகத்தைக் காக்க முயன்று கொண்டு செய்வதறியாது திகைப்பதையும் கவனித்தேன். எதிர்புறமாகச் செல்லும் வாகன ஊர்வலம் நின்றே போய்விட்டது. எங்கள் வரிசை மிகவும் மெதுவாக முன்னேறிக்கொண்டும் அவ்வப்போது நின்று நின்றும் சென்று கொண்டிருந்தது. எப்போது எங்கள் வண்டியும் நிற்கப்போகிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் பயமெதுவும் எழவில்லை.ஐஸ்க்ரீம் கண்ட குழந்தையின் மனநிலையிலேயே இருந்தேன். பெரிய சாலைபோடும் இயந்திர வாகனம் தேள்கொடுக்கு போன்ற உலோக வாயைக் கொண்டு எதிர்புறச் சாலையில் பனியைச் சுரண்டி எடுத்து எறிந்துகொண்டு மெதுவாய்ச் செல்ல, பின்னே சில பாதுகாப்புப் படைவீரர்கள் மங்கலாக நடைபயின்றனர். வலதுபுறத்தில் ஆங்காங்கே தென்பட்ட ஒரு சில கட்டிடங்களும் பனி படர்ந்து சிறு குன்றுகளைப் போன்று காட்சியளித்தன. வாகனப் பழுது பார்க்கும் நிலையங்களின் முன்பு அடுக்கி வைக்கப்பட்ட டயர்கள் வெண்பனி படர்ந்து கருப்பு வெள்ளையில் வித்தியாச அழகுடன் காட்சியளித்தன.அவ்வளவு கொடும் பனிப் பொழிவிலும் சாலையோரங்களில் நனைந்த குருவிகள் தாவித் தாவி அமர்ந்து இடம் மாறிக்கொண்டிருந்தன. எனக்கு டீ குடிக்க வேண்டுமென்று தோன்றி நேரம் ஆக ஆக, டீத் தாகம் விஸ்வரூபம் எடுத்து ஓட்டுனரைக் கெஞ்சினேன்.டமாஸ்கஸ்ஸிலிருந்து கிளம்பி ஏறத்தாழ நான்கு மணிநேரம் ஆகிவிட்டது. 'பாதி தூரந்தான் வந்துருக்கோம்' என்றார் ஓட்டுனர். சிரியா மஸ்கட் நேரத்தைவிட ஒரு மணி நேரம் பின் தங்கியுள்ள நாடு. காரில் பளிச்சிட்ட டிஜிட்டல் கடிகாரம் வேறு ஏதோ ஒரு நேரத்தைக் காட்ட அப்போது மணி என்னவென்று குழப்பமாக இருந்தது.பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. திடீரென்று பனியின் நடுவே முழுதும் கருப்பு உடையணிந்த ஒரு பெண்மணி சிறிதே தெரிந்த முகத்தைக் கைகளால் மறைத்துக்கொண்டும் கைகளில் சில பைகளை வைத்துக் கொண்டும் சாலையோரமாகத் தென்பட, அவர் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்று உணர்ந்தேன். அவருக்குப் பின் ஒரு வளைவில் அரபியில் ஏதோ எழுதியிருக்க எங்கும் வெண்பனி. அது ஒரு குறுஞ்சாலை போலும். அவரைக் கடந்துச் சில நிமிடங்கள் வரை, வண்டி கிடைத்திருக்குமா என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்.
எப்போது உறங்கினேன் என்று தெரியாமலேயே உறங்கிவிட்டேன் போலும். பயணத்தின் போது உறங்கும் பழக்கமில்லை-எந்நேரமானாலும். ஆனால் தொடர்ச்சியான நித்திரையில்லா இரவுகள்; அழுத்தும் அலுவல் பணிகளினாலும் உடல் அசந்துவிட்டது போல. சட்டென்று திடுக்கிட்டு விழித்தால் சுற்றியிருந்த வெண்ணுலகம் மறைந்து கட்டிடங்களும், வாகனங்களும், மனிதர்களும் பளிச்சென்று தென்பட, மழை அடித்துக் கொட்டிக் கொண்டிருந்தது. அது 'ஹாம்ஸ்' (Homs) என்று இன்னொரு நகரம்.

சற்று நேரத்திலேயே மழையும் குறைந்து நின்று விட ஒருவழியாக ஒரு சிற்றுண்டி விடுதியின் முன்பு ஓட்டுனர் வண்டியை நிறுத்திட, 'அப்பாடா' என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். காரிலிருந்து வெளியே இறங்கியதும் குளிரில் கைகள் விறைத்துவிட்டன. கேட்டால் பூஜ்யத்துக்குக் கீழே மூன்று டிகிரி தட்பவெப்பம் என்றார்கள்.

(தொடரும்...)

No comments: