Saturday, December 17, 2005

* மெர்க்குரிப் பூக்கள்-35 : சிரியா # 2 (Final) *


* மெர்க்குரிப் பூக்கள்-35 : சிரியா # 2 (Final) *

ஹாம்ஸ்ஸின் சிற்றுண்டி விடுதியில் உணவு எதுவும் கிடைக்காதது ஏமாற்றம். அவசரத்திற்கு தேனீர் பருகிவிட்டு மறுபடியும் வண்டியை விரட்டியதில் 'ஹமா' (Hama) என்று இன்னொரு நகரத்தையடைந்தோம். வண்டியை நிறுத்தி இறங்கியதும் லேசான கிர்ரென்ற சத்தத்தைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், பொருட்காட்சித் திடல்களில் பார்க்கும் Giant Wheel போன்ற ராட்சத மரச்சக்கரம் ஒன்று மெதுவாய்ச் சுற்றிக்கொண்டிருக்க, அது ஒரு தடாகம். எங்கிருந்தோ வந்த நீர் தடாகத்தில் கலக்க, மரச்சக்கரம் மெதுவாய் நீரை இறைத்து ஒரு சிறிய கால்வாயில் செலுத்திக்கொண்டிருந்தது. தடாகத்தின் கரையில் அமைந்திருந்த உணவகத்தில் நுழைந்து, கூட வந்தவர்கள் மாமிசத்தைப் போட்டுத் தாக்க, சைவபட்சிணியாகிய நான் இலை, தழை என்று கிடைத்த காய்கறித் துண்டுகளையும் அருமையான உப்புச் சுவை கூடிய அரபி அரிசிச் சோற்றையும் கால்சராயைத் தளர்த்திவிட்டு, நிமிர்ந்து அமர்ந்துகொண்டு கழுத்துவரைச் சாப்பிட்டேன்.


அரைமணி நேர ஓய்விற்குப் பின் மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்து மேகங்களில்லா நீல வானையும், இருபுறமும் பரந்திருந்த பச்சை வயல்வெளிகளையும் ரசித்துக்கொண்டே அலெப்போ (Aleppo) நகரை அடைந்து 'சாப்பா சாம்' (Chabba Cham) என்ற விடுதியில் அறை எடுத்துக்கொண்டு படுக்கையில் விழுந்ததும் உடனே உறங்கிப்போனேன். டமாஸ்கஸ்ஸிலிருந்து அலெப்போ நகரை சாதாரணமாக மூன்றரை மணி நேரத்தில் சாலைவழிப் பயணத்தில் அடைந்துவிடலாம். எங்களுக்குப் பனிப்பொழிவினாலும், தொடர் மழையாலும், எட்டு மணி நேரம் ஆகியிருந்தது.அலெப்போ ஒரு சுவாரஸ்யமான நகர். சிரியாவின் நில அமைப்பே மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்த ஒன்று. மலைகள் என்றால் வானுயர்ந்த மலைகள் இல்லை. மேடுகளும் பள்ளங்களுமான பிரதேசம் என்றும் சொல்லலாம். நான் பார்த்தவரை சமவெளிகளே தென்படவில்லை. பலவித முக அமைப்புகளுடன் மிகச்சிவந்த தோலுடைய மக்கள். ஃபிரெஞ்சுக்காரர்களின் தாக்கம் மிகமிக அதிகம். வயதானவர்கள் அரபியோடு ஃபிரெஞ்சும் பேசிட, இளைஞர்கள் இப்போதுள்ள நியதிப்படி ஆங்கிலம் கற்று, பேச விழைகிறார்கள். இருந்தாலும் ஆங்கிலம் பேசும் நபர்களைச் சந்திப்பது அரிது! ஐந்து வருடங்களாக மஸ்கட்டிலிருந்தும் அரபி கற்றுக்கொள்ளாத சோகத்தை அடிக்கடி உணரவேண்டியிருந்தது சிரியாவில். சாப்பா சாம்-மிலிருந்த குட்டித் திரையரங்கில் Just Married என்ற அலைபாயுதே படம். ஃப்ரெஞ்சு மொழியில் சப்-டைட்டில்களுடன், ரசிக்கமுடிகிற ஜாலியான படம் அது! (சப்-டைட்டிலுக்குத் தமிழில் என்னவென்று நண்பர் கேட்டதற்கு நான் 'கிராமத்துத் திரையரங்குகளில் படம் துவங்கும் நேரத்தில் தாமதமாக அவசர அவசரமாக வரும் நபர்கள் இருட்டில் இருக்கையைத் தேடியமர்ந்ததும் அருகிலமர்ந்திருக்கும் நபரிடம் 'படம் போட்டு ரொம்ப நேரமாயிடுச்சுங்களா?' என வினவ அவர் திரையிலிருந்து பார்வையை விலக்காது 'இல்லைங்க. இப்பத்தான் 'எழுத்து' போட்டு முடிச்சாய்ங்க' என்பார்- 'எழுத்து' என்றே வைத்துக் கொள்ளலாம்!' என்று எழுதிய ஞாபகம். தலைப்பு- டைட்டில், துணைத் தலைப்பு- சப்-டைட்டில்! இதற்கு 'எழுத்து'-ஏ தேவலாம்போல. :))இரவில் கையுறைகளையும் தடிமனான ஜெர்க்கினையும் அணிந்துகொண்டு மூக்கு நுனி வலிக்க, புகை சுவாசம் விட்டுக்கொண்டு ஒரு நடை நடந்ததில் முட்டிக்கு முட்டி குளிர் வலித்தது. கடையில் எதையாவது வாங்கலாம் என்று ஒரு பலசரக்குக் கடையில் நுழைந்து பலவித அபிநயங்கள் செய்து முயன்றதில் படுதோல்வி. கடைக்காரர் பரிதாபப் பட்டு, 'உள்ளே வந்து பார்த்து வாங்கிக்கோ' என்று அனுமதித்து அருள் பாலித்தார்.

மஸ்கட்டில் எங்குபார்த்தாலும் இந்தியர்கள். இந்தியக் கடைகள். இந்தியச் சிப்பந்திகள். இந்தியப் பொருள்கள். ஒரு வெளிநாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வே வராத அளவு இந்தியத் தாக்கம் இருக்கும் ஊர். அவ்வப்போது ஒழுங்கான சாலைகளும், சுத்தமும் மட்டுமே இது வெளிநாடு என்று நினைவுபடுத்தும். ஒரு வெளிநாட்டினன் என்ற உணர்வே இங்கு ஏற்பட்டதில்லை. அதற்கு இரண்டாவது காரணம், நம்மூரில் இப்போது ஆகிவிட்டதைப் போல, இங்கும் வருடம் முழுதும் நிலவும் வறண்ட வானிலையும் கூட என்று நினைக்கிறேன். ஆனால் அலெப்போவின் குளிர் ஊட்டி, கொடைக்கானலையெல்லாம் மிஞ்சி பூஜ்யத்திற்குக் கீழே இருந்ததால் சகலமும் விறைத்துப்போய், பற்கள் தந்தியடிக்கப் பேசி, மூக்கில் நீர் வழிந்து, மொழி புரியாது முட்டி மோதியதில், ஒவ்வொரு வினாடியும் நான் ஒரு வெளிநாட்டில் இருக்கிறேன் என்ற உணர்வைத் தந்துகொண்டே இருந்தது. போதாக்குறைக்கு ரோஜா முகங்களுடன் சிரியர்கள்! அவ்வப்போது தேவையில்லாமல் இதயத்தைத் திருடாதே படம் நினைவிலாடி ஷூக்களின் லேஸ் ஓட்டைகளின் வழியாக நீர் பீய்ச்சியடிக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன்.

நெரிசலான நகரமையத்திற்கு (City Center) ஒரு டாக்ஸியில் சென்று இறங்கிக்கொண்டு மறுபடியும் ஒரு நடை. மதுரை டவுன்ஹால் ரோட்டிற்கு ஈடாக அடைசலாகக் கடைகளும் கார்களும் பாதசாரிகளும். நடுவே சில திரையரங்குகளில் நம்மூர் ஷாருக்கான் அரபி எழுத்துகளில் போஸ்டர்களில் சிரித்துக்கொண்டிருக்க இன்னும் சில ஹிந்திப் படங்களும் ஓடிக்கொண்டிருந்தன. என் முகத்தைப் பார்த்ததும் 'ஓ...ஹிந்த்?? கம் கம்' என்று அழைத்துப் பார்த்தனர். எனக்கும் ஹிந்தியும் அரபி அளவே தெரியும் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. நான் சந்தித்த பெரும்பாலான சிரியர்கள் முதலில் கேட்ட கேள்வி 'நீங்கள் பாக்கிஸ்தானிலிருந்து வருகிறீர்களா?' என்பதுதான். நானும் சலிக்காமல் 'இல்லை. இந்தியா.. ஹிந்த்' என்று சொல்ல, அவர்களும் விடாப்பிடியாக 'எல்லாம் ஒன்றுதானே' என்றார்கள். ஆமாம் எல்லாம் ஒன்றுதானே!

அலெப்போவைப் பற்றிப் பலவிதமான கதைகளை, கூட பணிபுரியும் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். லெபனான் தேசத்துப் பெண்கள்தான் உலகிலேயே பேரழகிகள் என்று படித்திருக்கிறேன். எனக்கு என்னவோ பெய்ரூட் பெண்களைவிட அலெப்போ நகரத்துப் பெண்கள் மிகவும் அழகாகத் தெரிந்தனர். 'அலெப்போவை ஃபிரெஞ்சுக்காரர்கள் படையெடுத்துக் கைப்பற்றி, ஆண்கள் அனைவரையும் கொன்றுவிட்டு, பெண்களனைவரையும் புணர்ந்துவிட்டுச் சென்றனர். இதுவே அவர்களது அழகின் ரகசியம்' என்று ராயித் தோமா ஒரு முறை சொல்லியிருக்கிறான். ராயித் தோமா ஜோர்டான் பாஸ்போர்ட் வைத்திருக்கும் லெபனான் நாட்டவன். ஆனால் அலெப்போ நகர வரலாறைப் படித்தபோது தெரிந்துகொண்ட விஷயங்கள் மனதைக் கனக்கவே செய்தன.அக்காலங்களில் அண்டைய நாடு மீது படையெடுத்துச் செல்லும் மன்னர்கள் எத்தகைய அழிவுகளை விளைவித்தனர் என்று பொன்னியின் செல்வனில் படித்திருக்கிறேன். மண்ணாசை பிடித்தலைந்து, பேரரசுகள் உருவாக்கப் போர்களில் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட மாவீரர்கள் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் அவர்களது வெற்றிக்கு அவர்கள் எவ்வளவு அழிக்கவேண்டியிருந்தது என்று எங்காவது விவரமாகப் படித்தோமா என்று கேட்டால் என்னைப் பொறுத்தவரை.. சட்.... பொருத்தவரை, 'இல்லை' என்றுதான் சொல்வேன். கங்கை கொண்டான் என்றும் கடாரம் கொண்டான் என்றும் பெருமையுடன் படிக்கிறோமேயொழிய அப்படிக் 'கொண்டதின்' அழிவுகள் எத்தனை துயரகரமானவை என்று எந்தப் பாடப்புத்தகத்திலும் சொல்லப்படவில்லை- அல்லது படித்த நினைவில்லை. ஏனென்றால் அது 'நமது வெற்றி'யாயிற்றே. தோற்ற எதிரி பட்ட துன்பத்தைப் பற்றி வென்றவனுக்கு என்ன கவலை? இவ்வளவு ஏன்? இந்தியா பாகிஸ்தான் பிரிவினையைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் பாடப்புத்தகத்தில், அதனால் விளைந்த கலவரங்களைப் பற்றியும், எண்ணற்ற உயிர்துறப்புகள் பற்றியும் எந்த அளவிற்கு விவரமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது? 'அரசன் அந்த நாட்டின் மீது படையெடுத்து நகரைச் சூறையாடி வெற்றி கொண்டான்' என்று சாதாரணமாகத்தான் பெரும்பாலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சூறையாடலின் கொடூரம் எப்படியிருந்திருக்கும் என்று சூறையாடப்பட்ட இடத்தில் நின்று நினைத்துப் பார்க்கையில் ஓரளவு உணரமுடிகிறது.

இங்கு அனுதினமும் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் அரைப் பக்கத்திற்கு சிதைந்த உடல்களுடன் அரைக்கண்களுடன் கிடக்கும் பாலஸ்தீனியப் பச்சைக் குழந்தைகளின் படங்களைப் பார்க்கும்போதும் உணரமுடிகிறது. சிவப்புவண்ணப் படங்கள்.

இக்கரையிலிருந்து அக்கரையில் தெரியும் பசுமையைப் பற்றிச் சொன்ன பாடங்கள் அப்பசுமையின் வேர்களில் இரத்தம் தோய்ந்திருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. வேர்கள் போன்று அவ்விரத்தமும் மண்ணின் அடியில் மறைந்திருப்பதனாலோ என்னவோ?

***

1 comment:

VSK said...

இனிமையும் வறட்சியும் இளமையும் புதுமையும் அழகும் சுவையுமொருங்கே அமைந்த நல்லதொரு பயணக்கதை.

இதமான நடையும் படங்களும் மேலும் மெருகூட்டுகின்றன.

படித்து முடித்ததும் ஒரு சின்ன வலி உணர்ந்தேன்.