Monday, September 17, 2007

பாஸ்டனில் விநாயகர் சதுர்த்தி


பிளாஸ்டிக் பிள்ளையாரை பாதியாக 'வகுந்து' அச்சாக உபயோகித்து களிமண் நிரப்பிப் பிள்ளையார் சிலைகள் செய்ததுண்டு. சிலைகளின் பின்புறம் தட்டையாக இருக்கும். காய்வதற்குள் மழை வராமலிருக்க வேண்டும் என்று பிள்ளையாரை வேண்டிக்கொள்வோம்.

விநாயகர் சதுர்த்தியன்று பூஜை, புனஸ்காரம் (என்றால் என்ன?) முடிந்ததும் எப்போது கொழுக்கட்டைப் பாத்திரத்தை நகர்த்துவார்கள் என்று காத்துக்கொண்டிருப்போம். இனிப்புக் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டையோடு, அவல், பொரி, வெல்லம் என்று - இதற்காகவே முந்தைய இரவில் சாப்பிட்டிருக்க மாட்டோம் - போட்டுத் தாக்கிவிட்டு திண்ணையில் பகலில் கண்ணயர்வது சொர்க்கம்.சிலையைக் கரைப்பதற்காக ஊர்க்கோடியில் இருந்த குளத்திற்குப் போய் மெதுவாக விதவிதமாக அவரை மூழ்கடித்து விட்டுத் - களிமண் லேசில் கரையாது - திரும்பிவிடுவோம். சிலர் படித்துறையிலிருந்து நடுக்குளத்திற்குத் தூக்கி எறிவார்கள். சிலர் வீட்டுக் கொல்லைப்புறத்தில் இருக்கும் கிணறுகளில் இறக்கி விடுவார்கள். அவல் பொரி நீண்ட நாள்களுக்குத் தவணை முறையில் கிடைக்கும்!


அப்போது தெருவில் ஊர்வலம் எல்லாம் கிடையாது. பிள்ளையார் அவரவர் வீட்டில் இருந்து பின்பு கரைந்து போவார். கோவிலிலிருந்து மட்டும் பிள்ளையார் சதுர்த்தியன்று அவர் வீதியுலா வருவார். எட்டுத் திசைகளிலும் நிறுத்தி பூஜை செய்து மறுபடியும் கோவிலுக்குள் சென்று சமர்த்தாக அமர்ந்து கொள்வார். வட இந்திய ஆட்ட பாட்டமெல்லாம் சமீப வருடங்களில்தான் தமிழகத்தில் நுழைந்து பிள்ளையார் அரசியல்வாதிக்கு அடுத்தபடியாகப் பிரபலமாகி இப்போது காவல் துறை பாதுகாப்போடு செல்ல வேண்டியிருக்கிறது. இங்கு இங்கெல்லாம் செல்லலாம் - இங்கெல்லாம் செல்லக்கூடாது என்று இறைவனுக்கு மனிதன் கட்டளைகள் போடுகிறான் என்பது விநோதம்! சரி அரசியல் தெரியாத விஷயம் - ஆகையினால் நிற்க.


அப்புறம் இதிலெல்லாம் நாட்டமின்றிப் போய் நீண்ட காலமாகி விட்டது.

வழக்கம்போல பரதநாட்டிய வகுப்புக்காக மகளை அழைத்துச் சென்றிருந்தபோது இங்கு ஆஷ்லாண்ட் லக்ஷ்மி கோவிலில் விநாயகர் சதுர்த்தியன்று சாமி ஊர்வலம் போகும்போது ஒவ்வொரு திசையில் நிறுத்தும்போதும் ஆடக் குழந்தைகளை அனுப்பும்படி தொலைபேசி வர, நடன ஆசிரியை எங்களிடம் கேட்டுக்கொண்டார். சனியன்று எப்படியும் கோவிலுக்குப் போக வேண்டும் என்று ஏற்கனவே 'வீட்டில்' சொல்லியிருந்தபடியால். குழந்தையை அழைத்துக்கொண்டு பனிரெண்டு மணிக்குப் போக, ஏகக் கூட்டம். எல்லாருக்கும் இறைவன் நினைவு வந்து கோவிலில் கூட்டம் அம்மியது. பூஜை மந்திரங்களை விட மக்களின் குசலம் விசாரிப்புச் சத்தம் அதிக இரைச்சலாக இருந்தது.


பிள்ளையார் சிலைகள் $15 க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். எனக்கு 15 டாலர்களை நீரில் விட மனம் வரவில்லை. எங்கள் வீட்டில் நிறைய பிள்ளையார்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கட்டும். கீழே காண்ட்டீனிலும் ஏக இரைச்சல். முதலில் போண்டாவை $1 என்று தனியாக விலைப்பட்டியலில் போட்டு எல்லாரும் அதற்கு மட்டும் முண்டியடித்ததால் இட்லியோடு அதைச் சேர்த்து $5-க்கு விற்றார்கள். வெண் பலகையில் எழுதி அவ்வப்போது combinations-களை விற்பனைக்குத் தகுந்தாற்போல் மாற்றி எழுதிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். பசி என்றால் பத்து டாலரும் பறக்குமே!கோவிலின் பிரதான வாயில் திறக்கப்பட்டிருக்க வெளியே சப்பரம் தயாராக இருந்தது. அன்று குளிர் அதிகம். குழந்தைகளால் வெறுங்கால்களோடு நிற்க முடியாததால் உள்ளேயிருந்து பெரிய Rug ஒன்றைக் கொண்டு வந்து விரித்துப் போட்டார்கள். எட்டுத் திசைகளில் சப்பரத்தை நிறுத்தும்போதும் ஆடுவதற்காக பல குழந்தைகள் வந்திருந்தார்கள்.பிள்ளையார் பல்லக்கை வெளியே கொண்டுவந்து பிள்ளையாரை சப்பரத்திற்குள் வைத்து பூஜைகள் துவங்க, பூசாரி 'ஸ்பான்ஸர்ஸ் எலலாரும் வாங்க வாங்க' என்று அழைத்து பிரசாதம் இன்ன பிற வழங்கி விவேகமாக நடந்துகொண்டார். 'ரெடி ஸ்டார்ட்' என்று யாரோ குரல் கொடுக்க, கேஸட்டை வைத்திருந்தவர் அதை யாரிடமோ கொடுத்துவிட்டுக் கொஞ்ச நேரம் தேடினார். கடைசியில் சப்பரத்தின் ஓரத்திலேயே இருந்தது. அமுக்கி ஓடவிட குழந்தைகள் நடனமாடினார்கள் - மூன்று நிமிடங்கள் வரையிலான பிள்ளையார் பாட்டுக்கு.சப்பரம் நகர்ந்து அடுத்த திசை நிறுத்தத்திற்குச் செல்ல, Rug-ஐயும் நகர்த்தி நகர்த்திப் போட்டது பாராட்டத் தக்கது. சப்பரத்தில் பிள்ளையாரும், குழந்தைகளும், Rug-ம் முழுச்சுற்று சுற்றி முடித்தார்கள். இன்னொரு நடனப் பள்ளியிலிருந்து ஒரு அமெரிக்கப் பெண்மணியும் அவரது குழந்தையும் அட்டகாசமாக பரதநாட்டிய உடையில் வந்து அழகாக ஆடினார்கள். நம் பெண்களுக்கேயுரித்தான நளினம் அவர்களிடம் லேசாகக் குறைந்திருந்தது போலத் தோன்றினாலும் - நளினமே இல்லாத நம்மூர்ப் பெண்களையும் பார்த்திருக்கிறேன் - நன்றாகவே ஆடினார்கள். குழந்தைகள் அனைவரும் நன்றாக ஆடினார்கள்.
பாட்டு, கோவில், சாமி, மதம் எல்லாம் அந்த மூன்று நிமிடங்களுக்கு மனதிலிருந்து காணாமற்போய் சலங்கைகள் குலுங்கும் அந்தக் கால்களும், நடனமும் மட்டுமே இன்னும் மனதில் மிச்சமிருக்கிறது.காலிலே கலை வண்ணத்தை இப்படிப் பார்க்கச் சொல்லியிருப்பார்களோ?


***

31 comments:

CVR said...

that silhoutted gopuram with the clouds backdrop is awesome!!
பாஸ்டன்ல பரதநாட்டியமா??
பாக்கறதுக்கும் சுவாரஸ்யமாதான் இருக்கு!! :-)

வடுவூர் குமார் said...

அந்த வெளிநாட்டு அம்மணி பரத நாட்டியத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? எப்படி திடிரென்று அங்கு வந்தார்.
படங்கள் நன்றாக இருக்கு.

kovi said...

உன் கோத்திரம் என்ன.. அமெரிக்காவிலும் இதே கேள்விதான். நானும் குடும்பதுடன் NY city யில் உள்ள கோவிலுக்கு பிள்ளயார் பன்ண்டிகையைப் பார்க்கச் சென்ற்ருந்தேன். கூட்டம் அதிகம் இருந்தது. (எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை போய் பல பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும் என் கருத்துக்களை குடும்பத்தினர் மேல் எப்போதும் திணிப்பது இல்லை). எல்லாம் முடிந்த பிறகு இலவச சாப்பாடு கொடுத்தார்கள். சாப்பாடு கொடுத்தால் வேண்டாம் என்று சொல்லக் கூடாது. சுவை உணவை ஒரு கை பார்த்துவிட்டு இரண்டாம் முறைக்காக லைனில் என் மகனுடன் நின்றுக்கொண்டிருண்ட்தேன். அப்போழுது சேலைத்துணியை போண்ற வேட்டியை கட்டிக்கொண்டு மேலே ஆடை ஏதும் அணியாமல் வெறும் பூனூலுடன் இருந்த ஒருவர் (volunteer) ஒலிப்பெருக்கியில் சத்தமாக "அன்ன தானம் செய்ய விரும்புவர்கள் தங்கள் நட்சதிரம் மற்றும் "கோத்திரம்" த்தை கூறி பதிவு செய்துக்கொள்ளவும்" என்று அறிவித்துக்கொண்டிருந்தார். எனக்கு இதை கேட்க அருவருப்பாக இருந்தது. இதை கேட்டவுடன் என் மகனும் "கோத்திரம்" என்றால் என்ன அப்பா என்று கேட்க ஆரம்பிதுவிட்டான். என் மனசில் வடிவேலு தோரணையில் "ஆகா..NY city யிலும் இவனுக தொல்லை தாங்க முடியலையே"..னு என் மகனுக்கு நேரமகிவிட்டது என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கெளம்பிவிட்டேன். ஆனால் மன ஆருதல். வெர்ஜினியாவில் உள்ள கோவிலில் என் மகன் பெயரி அர்ச்சனை செய்ய சென்றபொது கோவில் பூசாரி ஜாதி மற்றும் கோத்திரத்தையும் கேட்டார். இவர் வெரும் ந்ட்சத்திரத்தையும் கோத்திரத்தையும் மட்டும்தான் கேட்டார். என்ன இருந்தாலும் நியூயார்க் அய்யர் அல்லவா. கொன்சம் முற்போக்குடன் இருக்கிறார்.. கோவிலில் ஏன் ஜாதி மற்றும் கோத்திரத்தைக் கேட்கிறார்கள். அறிந்தவர்கள் யாராவது விளக்குவர்களாக....

கோவி எனும் கோவிந்து.

கீதா சாம்பசிவம் said...

"பைரவ சுந்தரம்" என்ற பெயரில் ஒரு குருக்கள் பாஸ்டன் பிள்ளையார் கோயிலில் இருப்பதாய் என் பொண்ணு சொல்லுவா, இந்தக் கோவிலா தெரியலை. நல்லாவே இருக்கு, நாட்டியமும், உங்கள் விமரிசனமும். பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.

kovi said...

என் பின்னூட்டதை பொடுவதில் என்ன தயக்கம். நான் சொல்வதில் உம்களுக்கு நம்பிக்கை இல்லையெனில் ஒரு போன் போட்டு (Hindu Temple, NY. தொலை பேசி எண்ணை web ல் பெறவும்) கேட்டு அறிந்துக் கொள்ளவும்.

வற்றாயிருப்பு சுந்தர் said...

Thanks CVR.

வடுவூர் குமார்.

//அந்த வெளிநாட்டு அம்மணி பரத நாட்டியத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? எப்படி திடிரென்று அங்கு வந்தார்.
//

நான் குறிப்பிட்டபடி பல்வேறு நடன பள்ளிகளிலிருந்து மாணவிகள் வந்து ஒவ்வொரு திசையிலும் சப்பரம் நிறுத்தப்பட்டபோது நடனம் ஆடினார்கள். அந்தப் பெண்மணியும் அவரது மகளும் ஏதோவொரு பள்ளியிலிருந்து வந்திருந்தார்கள். குழந்தை சக மாணவிகளோடு ஆடினாள். அவர் தனியாக ஆடினார். ஆனால் அவரும் மாணவி என்று நினைக்கிறேன்.

நன்றாகவே ஆடினார்

வற்றாயிருப்பு சுந்தர் said...

//"பைரவ சுந்தரம்" என்ற பெயரில் ஒரு குருக்கள் பாஸ்டன் பிள்ளையார் கோயிலில் இருப்பதாய் என் பொண்ணு சொல்லுவா, இந்தக் கோவிலா தெரியலை.//

நானறிந்து ஆஷ்லாண்டில் இருக்கும் இந்தக் கோவில்தான் ஒரே கோவில் - வேறு கோவில் இருப்பதாகத் தெரியவில்லை. பாஸ்டன் பாலாவிடம் கேட்கவேண்டும். நீங்கள்
குறிப்பிட்ட குருக்கள் இந்தக் கோவிலில்தான் பணிபுரிகிறார் என்று நினைக்கிறேன். நம்மூர் குருக்கள் போலில்லாது அக்கறையுடன் பக்தர்களை கவனிக்கும் குருக்கள் இங்கிருப்பது ஒரு ஆறுதல். தட்டில் விழும் காசுகளையும் நோட்டுகளையும் திரும்பச் சென்று கர்ப்பக்கிரகத்திற்குள் நுழையும் முன்பே படியருகே இருக்கும் உண்டியலில் போட்டுவிட்டுச் செல்வார்கள்.

என் அனுபவத்தில் மனதை உறுத்தாத வெகு சில கோவில்களில் இதுவும் ஒன்று என்று சொல்வேன்.

வற்றாயிருப்பு சுந்தர் said...

கோவி அவர்களே

//என் பின்னூட்டதை பொடுவதில் என்ன தயக்கம்.//

ஒரு தயக்கமும் மயக்கமும் இல்லை ஐயா. மாலை ஆறு மணிக்குப் பிறகு இணையத்தின் அருகில் வர மாட்டேன். மறுநாள் காலை 8 மணி அளவில் அலுவலகம் துவங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வந்து தனிப்பட்ட அலுவல்களைப் பார்த்துக் கொள்வது என் வழக்கம். இப்போது வந்து பின்னூட்டங்களை ஒவ்வொன்றாக அனுமதித்தேன்.

நான் சூடான இடுகையை இடுபவனோ, மொக்கை போடுபவனோ, ஐம்பது, நூறு என்று பின்னூட்டம் வாங்கும் வலையுலக டெண்டுல்கரோ அல்ல :-).

புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களது முதற் பின்னூட்டத்திற்கான எனது பதில் அடுத்து!

வற்றாயிருப்பு சுந்தர் said...

கோவி,

//உன் கோத்திரம் என்ன.. அமெரிக்காவிலும் இதே கேள்விதான்.//

இக்கோவிலில் எனக்கு இது நேரவில்லை. அர்ச்சனை செய்யவேண்டும் என்று விரும்புகிற பக்தர்கள் பெயர், நட்சத்திரம், கோத்திரம் மூன்றையும் குறிப்பிட அவர் "ஙஞணனமந" என்று வேகமாக அர்ச்சித்துப் போவது பக்தர்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஆறுதலையும் நிம்மதியையும் ஏற்படுத்துகிறது. Your Happiness, when shared, multiplies and Your Worries and Sorrows, when shared, will diminish என்பார்களே. அது போல இம்மாதிரி மதரீதியான சடங்குகள் உளவில் ரீதியான நம்பிக்கையின்பாற்பட்டவை என்று கருதுகிறேன்.

கடற்கரைக்குப் போய் தனியாக அமர்ந்து காற்றுவாங்கி, தொடுவானத்தை வெறித்து நோக்கி ஆறுதல் தேடுவதும், இம்மாதிரி கண்மூடிக் கைகூப்பி தொழுது 'நம் கஷ்டங்களை ஆண்டவன் பார்த்துக்கொள்வான்' என்று நம்புவதும் உளவியல் ரீதியானவை.

நீங்கள் இந்தக் கோ(ஆ)த்திரக் கேள்வியைத் தவிர்ப்பது வெகு எளிது.

1. அர்ச்சனை என்று எதையும் செய்யாமல் கோவிலுக்குப் போய்விட்டு நிம்மதியாகத் திரும்பி வாருங்கள். கோவிலுக்குள் யாரிடமும் எதுவும் பேசாதீர்கள். மெளனத்தைக் கடைப்பிடித்து இறைவனை வணங்கிவிட்டு (நம்பிக்கையிருந்தால்) திரும்புவது அமைதியைத் தரும்.

2. அப்படியே அர்ச்சனை செய்ய நேரிட்டாலும் லாகவமாக (நீண்ட நாட்கள் லாவகமாக என்று தப்பாகவே எழுதி/சொல்லி வந்தேன். ஹரியண்ணா திருத்தினார்!) அர்ச்சகரிடம் 'சாமி பேருக்கு' என்று சொல்லி விடுங்கள. குலம் கோத்திரம் கேட்க மாட்டார்.

//(எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை போய் பல பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும் என் கருத்துக்களை குடும்பத்தினர் மேல் எப்போதும் திணிப்பது இல்லை). //

நன்று.

//சுவை உணவை ஒரு கை பார்த்துவிட்டு இரண்டாம் முறைக்காக லைனில் என் மகனுடன் நின்றுக்கொண்டிருண்ட்தேன். //

:-)

Bridge Water Temple, NJ கோவிலில் மேல் தளத்தில் கடவுள் முன் கூடியிருப்பவர்களை விட, கீழ்த்தளத்தில் காண்ட்டீனில் முண்டியடித்தவர்கள்தான் அதிகம். அவ்வளவு சுவையான உணவு கிடைக்கிறதாம். சாலமன் என்ற எனது சகா (பேச்சிலர்) வாரயிறுதிகளில் அங்குச் செல்லத் தவறியதேயில்லை. 'இவன் எதுக்கு அங்கிட்டுப் போறான்?' என்று விசாரித்ததில் காண்ட்டீனின் பிரபல்யம் எனக்குத் தெரியவந்தது :-) நான் சென்ற போது ரயில் பூச்சி மாதிரி நின்றிருந்த பெரிய கூட்டத்தைப் பார்த்து பயந்து வெளியில் ஓடிவந்துவிட்டேன்! :-))

//அப்போழுது சேலைத்துணியை போண்ற வேட்டியை கட்டிக்கொண்டு மேலே ஆடை ஏதும் அணியாமல் வெறும் பூனூலுடன் இருந்த ஒருவர் (volunteer) ஒலிப்பெருக்கியில் சத்தமாக "அன்ன தானம் செய்ய விரும்புவர்கள் தங்கள் நட்சதிரம் மற்றும் "கோத்திரம்" த்தை கூறி பதிவு செய்துக்கொள்ளவும்" என்று அறிவித்துக்கொண்டிருந்தார். எனக்கு இதை கேட்க அருவருப்பாக இருந்தது.//

உங்களுக்கு அருவருப்பாக இருக்கிறது. ஆனாலும் ஒரு கூட்டம் பரபரவென்று ஓடியிருப்பார்களே? பொதுவாக நம்பிக்கையற்ற விஷயங்களைத் தவிர்ப்பது மனதுக்கு நல்லது.

// இதை கேட்டவுடன் என் மகனும் "கோத்திரம்" என்றால் என்ன அப்பா என்று கேட்க ஆரம்பிதுவிட்டான்.//

என் மகளும் கேட்டாளே. 'இந்தியன்' என்று சொல்லி வைத்திருக்கிறேன்! :-)

//வெர்ஜினியாவில் உள்ள கோவிலில் என் மகன் பெயரி அர்ச்சனை செய்ய சென்றபொது கோவில் பூசாரி ஜாதி மற்றும் கோத்திரத்தையும் கேட்டார். இவர் வெரும் ந்ட்சத்திரத்தையும் கோத்திரத்தையும் மட்டும்தான் கேட்டார்.//

முன்னர் குறிப்பிட்டபடி ஒன்றா அர்ச்சனை என்ற சடங்குகளுக்குள் புகாதிருங்கள். இல்லாவிட்டால் 'சாமி பேருக்கு' என்று சொல்லி விடுங்கள். எதைச் சொன்னாலும் அவர் என்னவோ ஙஞணனமந என்றுதான் சொல்லப் போகிறார் - உங்களுக்கும் எனக்கும் புரியப் போவதில்லை!

//கோவிலில் ஏன் ஜாதி மற்றும் கோத்திரத்தைக் கேட்கிறார்கள். அறிந்தவர்கள் யாராவது விளக்குவர்களாக.... //

எனக்குச் சமய, மத அறிவும் தேர்ச்சியும் இல்லை. ஆதலால் சில சம்பிரதாயங்கள் எதற்காகச் செய்யப்படுகின்றன என்று எதிர்க்கவோ ஆதரிக்கவோ தெரியாது. பிடித்தால் பின்பற்றுக, இல்லையென்றால் ஒதுங்கிச் செல்க என்பது என் வழி.

'கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு செருப்பையும் வெறுப்பையும் கழற்றி வைத்துவிட்டுச் செல்க' என்று ஒரு முறை சுஜாதா குறிப்பிட்டார். அப்படி உணர்வற்று நிற்பதற்கு நான் துறவியல்லன். ஆதலால் கோவிலுக்குள் நடக்கும் பல விஷயங்கள் வெறுப்பையும் வேதனையும் சம்பாதிப்பதால் நான் போவதில்லை - ஆனால் வீட்டில் இருப்பவர்களின் நம்பிக்கையை எள்ளி நகையாடாமல் அவற்றை ஏற்றுக் கொள்கிறேன். Accept People as they are என்று எனது ஆசிரியர் அறிவுறுத்தியிருப்பதை இன்று வரை பின்பற்றுகிறேன்.

இம்மாதிரி சடங்குகள் எதற்கு என்று மத அறிஞர்கள் யாராவது விளக்கினால் உண்டு. எனக்கும் இதற்கும் மதுரையிலிருந்து மாஸசூசெட்ஸ் தூரம்! :-)

நன்றி கோவி அவர்களே.

வற்றாயிருப்பு சுந்தர் said...

சொல்ல மறந்தது.

//அப்போழுது சேலைத்துணியை போண்ற வேட்டியை கட்டிக்கொண்டு மேலே ஆடை ஏதும் அணியாமல் வெறும் பூனூலுடன் இருந்த ஒருவர் //

அவர் என்னத்தையும் அணிந்து கொண்டு போகிறார் - நமக்கு ஏன் உறுத்தவேண்டும்? நம் நாட்டில் நிர்வாண சாமியார்களும் உண்டு. உடல் முழுதும் போர்த்திய சாமியார்களும் உண்டு. 100 டிகிரி வெயிலில் கோட், சூட், டை அணிந்து நடமாடுபவர்களும் உண்டு. அரையாடை உடுத்துபவர்களும் உண்டு. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. இதை நையாண்டி செய்து நாம் என்ன காணப் போகிறோம்?

நாம் மட்டும் சும்மாவா, அவ்வப்போது அரை டிராயர் (பர்முடாஸ்), முண்டா பனியன் போட்டுத் திரியும் மறத் தமிழர்கள்தானே. நம்மை யாராவது 'என்னப்பா திரும்ப எலிமெண்ட்ரி ஸ்கூலுக்குப் போறியா' என்று கேட்கிறார்களா?

kovi said...

வற்றாயிருப்பு சுந்தர் அவர்களே,
என்னுடைய பின்னூட்டத்தை போட்டதற்கு மிகவும் நன்றி. உங்கள் பதிலும் நன்றாக இருந்தது.

வடுவூர் குமார் said...

நாம் மட்டும் சும்மாவா, அவ்வப்போது அரை டிராயர் (பர்முடாஸ்), முண்டா பனியன் போட்டுத் திரியும் மறத் தமிழர்கள்தானே. நம்மை யாராவது 'என்னப்பா திரும்ப எலிமெண்ட்ரி ஸ்கூலுக்குப் போறியா' என்று கேட்கிறார்களா?
உங்கள் பார்வை நேராக இருக்கிறது.

வற்றாயிருப்பு சுந்தர் said...

கோவி,

உங்கள் பின்னூட்டத்தை மறுபடி படித்துப் பார்த்ததில் கண்ணில் பட்டது இது

//கோவிலில் ஏன் ஜாதி மற்றும் கோத்திரத்தைக் கேட்கிறார்கள்.//

எனக்குத் தெரிந்து எந்தக் கோவிலிலும் ஜாதி கேட்பதில்லை. அது ஒரே வார்த்தைதான் - சந்தடி சாக்கில் - அல்லது Unintentionally நுழைத்தாலும் அதன் வீரியம் அதிகம். படிப்பவர்களிடம் தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும்.

உண்மையில் ஏதாவது கோவிலில் ஜாதி கேட்கிறார்களா? அறிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன். "கேட்டு என்ன கிழிக்கப் போகிறாய்?" என்கிறீர்களா? அக்கோவிலுக்குப் போக மாட்டேன்!

நன்றி.

kovi said...

சுந்தர் அவர்களே,

///அப்போழுது சேலைத்துணியை போண்ற வேட்டியை கட்டிக்கொண்டு மேலே ஆடை ஏதும் அணியாமல் வெறும் பூனூலுடன் இருந்த ஒருவர் //

அவர் என்னத்தையும் அணிந்து கொண்டு போகிறார் - நமக்கு ஏன் உறுத்தவேண்டும்? நம் நாட்டில் நிர்வாண சாமியார்களும் உண்டு. உடல் முழுதும் போர்த்திய சாமியார்களும் உண்டு. 100 டிகிரி வெயிலில் கோட், சூட், டை அணிந்து நடமாடுபவர்களும் உண்டு. அரையாடை உடுத்துபவர்களும் உண்டு. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. இதை நையாண்டி செய்து நாம் என்ன காணப் போகிறோம்? /

பெரியவர்கள் செய்த்தது எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என நான் அப்படியே எடுத்துக் கொள்வதில்லை. எதையும் ஏன் எதற்கு என்று ஆராய்ந்து பார்ப்பது தான் என் வழக்கம். சில சமயங்களில் இது இடிக்கிறது..

வற்றாயிருப்பு சுந்தர் said...

//பெரியவர்கள் செய்த்தது எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என நான் அப்படியே எடுத்துக் கொள்வதில்லை//

நானும்தான்! :-)

நான் அதைச் சரி என்றோ தவறு என்றோ சொல்லவில்லையே கோவி. அவரவர் விருப்பத்தைப் பொருத்து, அது யாரையும் பாதிக்காதபோது, அப்படியே விட்டுவிடுங்கள் என்றுதான் கருதுகிறேன்.

இது புகைப்படங்களுக்கான வலைப்பதிவு - இதில் என்று இல்லை - எதிலும் நான் ஜாதி, மதம், குலம், கோத்திரம் போன்றவற்றை ஆராய்ந்தோ பீராய்ந்தோ எதையும் எழுதுவதில்லை - அறியாமை, ஆர்வமின்மை ஆகிய காரணங்களால்.

உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

மற்ற புகைப்படங்களைப் பார்த்து நேரமிருந்தால் உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

நன்றி.

வற்றாயிருப்பு சுந்தர் said...

Kovi,

And my apologies if I sounded rude in any manner.

Thanks

ILA(a)இளா said...

பாஸ்டன்ல பரதநாட்டியமா??
பாக்கறதுக்கும் சுவாரஸ்யமாதான் இருக்கு!!
நமது கலாச்சாரத்தை இன்னும் விடாம இருக்கிறதே பெரிய விஷயம்தான்.

kovi said...

சுந்தர்,

/எனக்குத் தெரிந்து எந்தக் கோவிலிலும் ஜாதி கேட்பதில்லை./

சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் "Virginia beach" கோவிலுக்கு என் மகன் பெயரில் பிறந்த நாளன்று அர்ச்சனை செய்ய சென்ற போது இது நடந்தது. அர்ச்சகர் ஜாதி, கோத்திரம் பற்றி கேட்டார். எரிச்சலை அடக்கிக் கொண்டு சாமி பேரில் அர்ச்சனை செய்துவிட்டு வந்த்தோம். எல்லாம் முடிந்த பிறகு அவரிடம் பேசியபோது அவர் வட இந்தியாவில் இருந்து வந்த புதிய அர்ச்சகர் என்று தெரிந்தது. வட இந்தியர் ஒருவர் இப்படி கேட்பது எனக்கு ஆச்சிரியத்தை அளிக்கவில்லை.
இது மனதுக்கு எரிச்சலூட்டிய ஒரு நிகழ்ச்சி. கோத்திரம் என்பது ஜாதியில் உள்ள உட்பிரிவு என்பதை அரியவும். இதெல்லாம் பழைய காலத்தில் நடந்த பிரிவினைவாதம். அது தெரியாமல் இவர்கள் அப்படியே அதை இப்பொழுதும் கடைப்பிடிக்கிறார்கள்.

பின் குறிப்பு: பழைய அர்ச்சகர் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக SUBWAY-sandwitch கடை ஒன்றை திறந்து விட்டாராம். இதை இந்த புது அர்ச்சகர் தெரிவித்தார்.

இந்த பின் குறிப்பை delete சைது விட்டு போடவும். இல்லையென்றால் உங்கள் பதிவில் சிலர் வசைபாடி பின்னுட்டங்கள் போடுவார்கள்..

வற்றாயிருப்பு சுந்தர் said...

கோவி

//சில ஆண்டுகளுக்கு முன்னால் நான் "Virginia beach" கோவிலுக்கு என் மகன் பெயரில் பிறந்த நாளன்று அர்ச்சனை செய்ய சென்ற போது இது நடந்தது. அர்ச்சகர் ஜாதி, கோத்திரம் பற்றி கேட்டார்.//

//வட இந்தியர் ஒருவர் இப்படி கேட்பது எனக்கு ஆச்சிரியத்தை அளிக்கவில்லை.//

கோத்திரம் கேட்பது தெரியும். ஜாதி கேட்பதைப் பற்றி இன்றுதான் தெரிந்துகொண்டேன். வட இந்தியாவில்தான் இன்று வரை ஏகப்பட்ட ஜாதிப் பெயர்களைப் பெயருடனேயே இணைத்திருக்கிறார்களே - யாதவ், சர்மா, சாஸ்திரி, என்று எத்தனையோ. அந்த விதத்தில் தமிழகம் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் எனக்குத் தோன்றியிருக்கிறது. கடந்த பத்து இருபது வருடங்களில் நான் பார்த்தவரை என் கூட படித்த எவரும் ஜாதியைப் பெயரில் சேர்த்துக்கொண்டதில்லை. ஆனால் மற்ற தென்னிந்திய மாநிலங்களில் நிலைமை இன்னும் மாறாதிருக்கிறது. நாயர்களும், கவுடாக்களும், ரெட்டிகளும் இன்னும் இருக்கிறார்கள் - இந்தத் தலைமுறையிலும்! :-(

//கோத்திரம் என்பது ஜாதியில் உள்ள உட்பிரிவு என்பதை அரியவும். //

அறியத் தந்தமைக்கு நன்றி.

//பின் குறிப்பு: பழைய அர்ச்சகர் வேலையை விட்டுவிட்டு சொந்தமாக SUBWAY-sandwitch கடை ஒன்றை திறந்து விட்டாராம். இதை இந்த புது அர்ச்சகர் தெரிவித்தார்.//

அர்ச்சகர் வேலை ஒன்றும் சொர்க்கபுரி அல்ல - நலிந்திருக்கும் அர்ச்சகர்கள் எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். தட்டில் விழும் காசை மட்டுமே நம்பியிருப்பவர்களையும் தெரியும் - ஆனால் பணக்கார, பிரபலக் கோவில்களின் அர்ச்சகர்கள் விதிவிலக்கு. நான் அக்கோவில்களுக்குப் போவதில்லை. அப்படியே போனாலும் லாங் ஷாட்டில் தரிசித்துவிட்டு ஓடி வந்துவிடுவது வழக்கம் - கிட்டே போனால் அடிதடியில் முடியும் அபாயம் இருப்பதால். :-)

//இந்த பின் குறிப்பை delete சைது விட்டு போடவும். இல்லையென்றால் உங்கள் பதிவில் சிலர் வசைபாடி பின்னுட்டங்கள் போடுவார்கள்..
//

அட விடுங்க ஸார். நான் யாருக்கும் இலக்கல்ல. என்னை வசைபாடும்படி எதுவும் செய்துவிடவில்லை என்று நம்புகிறேன். அவர்கள் அவர்களது நேரத்தை என்னை வசைபாடுவதன் மூலம் விரயமாக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது!

நன்றி.

cheena said...

நண்பர் கோவியின் பதிவும் நண்பர் சுந்தரின் பதிலும் - அதைத் தொடர்ந்த விவாதப் பதிவுகளூம் ( அல்லது கேள்வி பதில்களும்) - படிக்க, சுவைக்க, அறிந்து கொள்ள உதவும் நல்ல பதிவுகள். புகைப்படங்களும் அதற்காக எழுதப்பட்ட பதிவும் பின்னோட்டங்களும் மிக நன்றாக இருந்தன‌

எனக்குத் தெரிந்து இந்தியக் கோவில்களிலும் பெயர் நட்சத்திரம் பொதுவாகவும், சிலரிடம் குறிப்பாக கோத்திரமும் கேட்பதுண்டு ‍ ஆனால் எங்குமே ஜாதி கேட்டதாக தெரியவில்லை. இச் செய்தி ஒரு பார்வைக்காக இங்கு பதியப் படுகிறது. விவாதப் பொருளாக அல்ல என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

நன்றி

கீதா சாம்பசிவம் said...

"சேலைத்துணி போன்ற வேட்டி?" அது ஒரு வகைப் பட்டுத்துணி, சிலருக்கு அன்பளிப்பாக வந்திருக்கும், அன்பளிப்புக் கொடுத்தவரைக் கெளரவிக்கும் வகையில் கட்டிக் கொண்டிருக்கலாம்.

பொதுவாய், இந்த யு.எஸ்.ஸில் உள்ள கோவில்களில் நான் பார்த்த கோவில்களில் எல்லாம் அர்ச்சனை மிகவும் ஆத்மார்த்தமாகவே செய்கின்றனர். அதுவும் சங்கல்பம் செய்யும் முன்னர் தனித்தனியாக எத்தனை பேர் இருந்தாலும் குறைந்த பட்சம் இரண்டு குருக்கள் வந்து அனைவரின் பெயர், நட்சத்திரம் கேட்டுக் கொள்கிறார்கள். கோத்திரமோ, ஜாதியோ கேட்பதில்லை. அவர்களாய்ச் சொன்னால் சேர்த்துக் கொள்கிறார்கள் கோத்திரத்தை. சங்கல்பம் எல்லாம் முடிந்து அர்ச்சனை பண்ணி முடிக்கவே குறைந்தது 1 மணி நேரம் ஆகிறது. நிதானமாகவே தீப ஆராதனையும் காட்டி, அனைவருக்கும் வித்தியாசம் இல்லாமலேயே பிரசாதமும் கொடுக்கப் படுகிறது. இந்தியக் கோயில்களில் அதுவும் தமிழ்நாட்டுக் கோவில்களில் காணக் கிடைக்காத ஒன்று இது. தகவலுக்காகவே எழுதியுள்ளேன். மிக்க நன்றி வாய்ப்பளித்தமைக்கு.

வற்றாயிருப்பு சுந்தர் said...

கீதா மேடம்

//"சேலைத்துணி போன்ற வேட்டி?" அது ஒரு வகைப் பட்டுத்துணி, சிலருக்கு அன்பளிப்பாக வந்திருக்கும், அன்பளிப்புக் கொடுத்தவரைக் கெளரவிக்கும் வகையில் கட்டிக் கொண்டிருக்கலாம். //

வேட்டி என்றாலே நமக்கு வெள்ளை வேட்டிதானே நினைவுக்கு வரும். ஆனாலும் நீலம், குங்குமப்பூ, கருப்பு என்று வேறு சில வண்ணங்களிலும் மேல் துண்டும் வேட்டியும் இருக்கின்றன அல்லவா? அதில் எதையாவது அவர் அணிந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

//பொதுவாய், இந்த யு.எஸ்.ஸில் உள்ள கோவில்களில் நான் பார்த்த கோவில்களில் எல்லாம் அர்ச்சனை மிகவும் ஆத்மார்த்தமாகவே செய்கின்றனர். அதுவும் சங்கல்பம் செய்யும் முன்னர் தனித்தனியாக எத்தனை பேர் இருந்தாலும் குறைந்த பட்சம் இரண்டு குருக்கள் வந்து அனைவரின் பெயர், நட்சத்திரம் கேட்டுக் கொள்கிறார்கள். கோத்திரமோ, ஜாதியோ கேட்பதில்லை. அவர்களாய்ச் சொன்னால் சேர்த்துக் கொள்கிறார்கள் கோத்திரத்தை. சங்கல்பம் எல்லாம் முடிந்து அர்ச்சனை பண்ணி முடிக்கவே குறைந்தது 1 மணி நேரம் ஆகிறது. நிதானமாகவே தீப ஆராதனையும் காட்டி, அனைவருக்கும் வித்தியாசம் இல்லாமலேயே பிரசாதமும் கொடுக்கப் படுகிறது.//

என் அனுபவத்தில் இது உண்மை.

சிலர் பிறந்த குழந்தையை எடுத்து வருவார்கள். இக்கோவிலின் அர்ச்சகர் அக்குழந்தையை எடுத்துக்கொண்டு போய் கடவுளிடம் காட்டி, காலடியில் சில விநாடிகள் வைத்துவிட்டு, பூ மாலை ஒன்றையும் அதற்கு அணிவித்துத் திரும்ப எடுத்துக்கொண்டு வந்து தாயிடம் சேர்ப்பிப்பார். அப்போது அந்தப் பெற்றோரின் முகத்தில் தென்படும் பரவசத்தை விவரிக்க முடியாது. புதிதாக ஊருக்கு வந்திருந்த ஒரு தம்பதிகள் இதை எதிர்பார்க்காது உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டார்கள். அந்த ஆனந்த அழுகையில் அவர்கள் நம்மூர்க் கோவில்களில் பட்ட வேதனைகளையும், இம்மாதிரி கடவுளை அந்நியப்படுத்தாமல் நம்மூரில் இல்லையே என்ற ஆற்றாமையையும் கலந்திருந்ததை உணர முடிந்தது.

நன்றி.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வெண்ணீல மேலாப்பு விரித்த மேகங்கள் பின்னணியில் கோவில் கோபுரங்கள் அழகோ அழகு! சுந்தர் படமெல்லாம் பிச்சி உதற்ரீங்க!

குழந்தைப் பிள்ளையாருக்கு குழந்தைகள் நாட்டியம்-னா கசக்கவா செய்யும்! பாஸ்டனில் மட்டுமல்ல, அமெரிக்காவின் பல ஊர்களில் நடனப் பள்ளிகள் இருக்கு! ஆலயங்களில் குழந்தைகள் நாட்டியமும் நடக்கின்றன. வெள்ளையர் பலரும் மற்ற மக்களும் கூட விரும்பிக் கற்கிறார்கள். மறைந்த நாட்டியப் பேரொளி பத்மினி, இது போன்று பல பள்ளிகள் உருவாக, அவரும் ஒரு காரணமாக இருந்தார்.

// பசி என்றால் பத்து டாலரும் பறக்குமே!//

பிள்ளையார் சிலை = பதினைஞ்சு டாலர்; பசி = பத்து டாலர் தானா? பரவாயில்லையே! :-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//காலடியில் சில விநாடிகள் வைத்துவிட்டு, பூ மாலை ஒன்றையும் அதற்கு அணிவித்துத் திரும்ப எடுத்துக்கொண்டு வந்து தாயிடம் சேர்ப்பிப்பார். அப்போது அந்தப் பெற்றோரின் முகத்தில் தென்படும் பரவசத்தை விவரிக்க முடியாது//

ஆமாங்க சுந்தர்.
ஆலயம் = ஆன்மா லயிக்கும் இடம், ஆலயம்.
இது போன்ற சிறுசிறு நிகழ்வுகள் தான் ஆலயங்களில் பல்முனைச் சக்திகளைச் சிதறாது, மக்களிடம் ஒருநிலைப்படுத்துகின்றன!

காலப்போக்கில் கூட்டமும், அரசியலும், படோபடமும் சேர்ந்து கொள்வதால் இது போல எல்லா ஆலயங்களாலும் இருக்க முடிவதில்லை! ஆலய மேலாண்மை, code of conduct எல்லாம் தற்போதைய காலத்தில், காலத்தின் கட்டாயம் ஆகிறது.

இன்றும் கிராமத்துக் கோவில்களுக்குச் சென்றால், அமெரிக்காவில் செய்வது போலவே குழந்தையைக் காலடியில் வைத்துத் தருவார்கள்! எந்த வித்தியாசமும் பணமும் செல்வாக்கும் தேவையில்லை.
எங்கள் கிராமத்தில் இன்னும் ஒரு படி மேலே போய், சந்தான கிருஷ்ண விக்ரகத்தை குழந்தைக்கு முதல் பொம்மையாய்த் தொட்டுத் தருவார்கள்!

ஆனால் இதை எல்லாம் நாம் திருப்பதியிலோ, பழநியிலோ எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது! :-)

வற்றாயிருப்பு சுந்தர் said...

kannabiran, RAVI SHANKAR (KRS) - (ஏன் இவ்வளவு சின்னதா பேர் வச்சிருக்கீங்க? :-))

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

//குழந்தைப் பிள்ளையாருக்கு குழந்தைகள் நாட்டியம்-னா கசக்கவா செய்யும்!//

அது சரி. அதீத Obesity-னால பிள்ளையார் குழந்தைகளையும் இங்க நிறைய பாக்கறோமே!

//வெள்ளையர் பலரும் மற்ற மக்களும் கூட விரும்பிக் கற்கிறார்கள். //

இதில் நான் குறிப்பிட விரும்பியது இரண்டு விஷயங்கள்.

1.இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு அபாரமானது. Perfection to the core - என்று சொல்வதைப் போலச் சின்னத் தவறுகளைக்கூட அசராமல் கண்டுபிடித்துத் திருத்தித் திருத்திச் சரியாய் செய்யும்வரை விடவே மாட்டார்கள். அந்த மட்டில் என் குழந்தைகளுக்கு இம்மாதிரி ஆசான்கள் கிடைத்தது எங்கள் அதிர்ஷ்டம் என்று சொல்லவேண்டும். குற்றம் சொல்லக்கூடாது - ஆனாலும் குறிப்பிட விரும்புகிறேன். நம்மூரில் கிடைத்த அனுபவம் வேறு மாதிரியானது. அவசர உலகத்தில் எல்லாமே அவசரம். இன்று சேர்ந்து நாளை அரங்கேற்றம் நடக்கவேண்டும் என்ற அவசரத்தில் பெற்றோர்கள். ஒவ்வொருவருக்கும் தனிக்கவனம் செலுத்திக் கற்பிக்க முடியுமா என்று துளியும் யோகிக்காமல் கும்பல் கும்பலாக மாணவ, மாணவிகளைச் சேர்த்து அவசர அவசரமாகச் சொல்லிக்கொடுத்து மேடையேற்றி அனுப்பி அடுத்த Batch மாணவர்களைக் கூட்டும் ஆசிரியர்கள் என்று எல்லாமே அவசரகதி. இதை ஒரு கலையாகப் பார்க்கும் கண்ணோட்டம் குறைந்து - அரங்கேற்றம் என்ற மிகப்பெரிய சாதனை செய்துவிடுவதோடு நாட்டிய வாழ்வு முடிந்துவிடுகிறது பெரும்பாலானோருக்கு என்பது சோகம். அந்த விதத்தில் இங்கு மன அழுத்தம் இல்லாது வாரம் ஒரு முறை வகுப்பில் - ஒன்றே செய்தாலும் அதை நன்றே செய்க என்பதுபோல தவறில்லாமல் கற்றுக் கொள்கின்றனர் குழந்தைகள்.

2. என்ன. சற்றே கழுத்தைப் இறுக்கிப் பிடிக்கக்கூடிய கட்டண விகிதம்தான் சமயத்தில் மூச்சு திணற வைக்கிறது :-)

//ஆனால் இதை எல்லாம் நாம் திருப்பதியிலோ, பழநியிலோ எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது! :-)//

சொல்லாதீர்கள். பற்றிக்கொண்டு வருகிறது. திருப்பதி போனதில்லை. பழனிக்கு கோவணம் கட்டிய சிறுவயதி்ல் ஒருமுறை போனது மேகமாக நினைவிருக்கிறது. மற்றபடி எல்லா பிரபலக் கோவில்களையும் நினைத்தாலே அலர்ஜியாக இருக்கும் எனக்கு. வருட விடுமுறையில் எப்போது சென்றாலும் வீட்டில் ஒரு "வேண்டுதல் லிஸ்ட்" ஒன்றை நீட்டி பாதி நாட்கள் ஓடிவிடும். அடுத்த வருடம் செல்லும்போது கூட்டமே இல்லாத கோவில்களாகப் பார்த்துப் பார்த்துப் போகவேண்டும் என்று சங்கல்பம் செய்திருக்கிறேன்! :-)

நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுந்தர்!
படங்கள் அருமை,நடனமாடும் அமெரிக்கக் குழந்தையின் முகத்தில் அதீத பூரிப்பு. பின்னூட்டச் சங்கதிகள், மனதுக்குக் வேதனை தருகிறது. நானும் உங்களைப்போல் கூட்டமெனில் கோவில் செல்வதில்லை.
ஈழத்தில் பெயர்,நட்சத்திரம் மாத்திரமே..எனக்கு
நட்சத்திரம் நினைவில் நிற்பதில்லை.அதனால் சாமி பெயரில் அர்ச்சனை வெகுகாலமாக...பெயர்,நட்சத்திரம் ..சரி ,ஒத்துக் கொள்ளலாம். ஆனால் குலம்,கோத்திரம்,சாதி,பதவி,பட்டம்,பாங் பலன்ஸ் எனத் தொடர வேண்டுமா???மனம் வைத்தால் மாறலாம்.
ஈழத்தில் இல்லை...இதேன் அமெரிக்காவுக்குத் தேவையானது...
சிந்திக்க வேண்டியவர்கள்..சிந்தித்தால் மாற்றலாம், மாறலாம்.

வற்றாயிருப்பு சுந்தர் said...

நன்றி யோகன்

//அதனால் சாமி பெயரில் அர்ச்சனை வெகுகாலமாக//

அதான் எளிது.

//இதேன் அமெரிக்காவுக்குத் தேவையானது...
சிந்திக்க வேண்டியவர்கள்..சிந்தித்தால் மாற்றலாம், மாறலாம்.//

அர்ச்சகர்கள் யாரையும் கேட்பதில்லை என்பதுதான் உண்மை. அர்ச்சனைப் பொருட்களைக் கொடுக்கும் பக்தர்களை அவர் பார்பார். சிலர் பெயர், நட்சத்திரம், கோத்திரம் சொல்கிறார்கள். சிலர் பெயர், நட்சத்திரம் சொல்கிறார்கள். சிலர் சாமி பெயருக்கு என்று சொல்கிறார்கள். அதற்கு மேல் அவர் எதுவும் வலுக்கட்டாயமாகக் கேட்பதேயில்லை. தவறான புரிதல்களைத் தவிர்க்கவே இந்த விளக்கம். மற்றபடி இது தேவையற்ற விஷயம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

நன்றி.

நளாயினி said...

நாங்கள் எங்கை போனாலும் கடவுளையும் கொண்டே போயிர்றோம். எனக்கு இதிலை எல்லாம் உடன்பாடே இல்லை.

வற்றாயிருப்பு சுந்தர் said...

நளாயினி

//நாங்கள் எங்கை போனாலும் கடவுளையும் கொண்டே போயிர்றோம்//

ஆஹா. நல்லாச் சொன்னீங்க.

அன்பே சிவம்.

Raveendran Chinnasamy said...

Thanks for wonderful photos . i have also taken some pictures of this temple but you done great.

வற்றாயிருப்பு சுந்தர் said...

raveendran chinnasamy,

thanks. எனக்கு இந்தக் கோவிலுக்கு எப்போது போனாலும் சில்-அவுட் எடுக்க கை பரபரக்கும். நல்ல சூழலில் அமைந்திருக்கும் கோவில் இது.