Tuesday, November 01, 2005

மெர்க்குரிப் பூக்கள்-14 : நக்கல் கோட்டை



மஸ்கட்டிலிருந்து துபாய்க்குச் செல்லும் பிரதான சாலையில் ஸீபை (Seeb)த் தாண்டிப் பயணித்தால் கிட்டத்தட்ட 50 கி.மீ. தொலைவில் வரும் பர்க்கா (Barkha) ரவுண்ட்-அபவுட்டில் இடதுபுறம் திரும்பி ஒரு 35 கி.மீ. சென்றால் நக்கல் (Nakhl) கிராமத்தை அடையலாம். போகும் வழியில் பிரம்மாண்ட நெருப்புக் கோழிப் பண்ணி ஒன்று இருக்கிறாது. அதைப் பற்றி அடுத்த பதிவில்.

சாலையிலிருந்து இடது புறம் திரும்பி ஒரு கி.மீ. உள்ளே சென்றால் சிறிய கடைத்தெருவுக்குப் பின்னால் கம்பீரமாக நின்று நக்கல் கோட்டை (Nakhl Fort) நம்மை வரவேற்கும்.

எதிரிகளால் எந்த விதத்திலும் புக முடியாத மிகவும் உறுதிவாய்ந்த அரணாக அக்காலத்தில் இக்கோட்டை விளங்கியிருக்கிறது. இதன் பாதுகாப்புக்கு இன்னொரு முக்கிய காரணம் உயரமான பகுதியில் கட்டப்பட்டதுதான். கோட்டையிலிருந்து பார்த்தால் சுற்று வட்டாரத்தில் நகரும் எதையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். எதிரிகள் நெருங்குவதற்குள்ளாகவே அடையாளங் காணப்பட்டுத் தாக்கப் படுவார்கள்.

எந்த காலகட்டத்தில் இக்கோட்டை எழுப்பப்பட்டது என்பதற்குச் சரியான தகவல்கள் இல்லை. ஆனால் இஸ்லாம் தோன்றியதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். கி.பி.850-இல் இக்கோட்டை புனரமைப்பு செய்யப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளனவாம்.

ஒன்பதாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் இக்கோட்டை புனர் ஜென்மம் எடுத்திருக்கிறது. இதன் 30 மீட்டர் உயரச் சுவர்கள் பாதுகாப்பை நமக்குப் புலப்படுத்துகின்றன. இப்போதைய பிரதான வாசல் 1934-இல் சுல்தான் சயீத் பின் சுல்தான் பின் இமாம் அஹ்மது அல் புஸைதி (Sultan Said bin Sultan bin Imam Ahmed al Busaidy அம்மாடி!) யின் ஆட்சியின் போது கட்டப்பட்டது.

கிட்டத்தட்ட 3400 சதுர மீட்டர்கள் விஸ்தீரணத்தில், ஆறு கோபுரங்களோடு, ஜிப்ஸம், ஜல்லி, மரம் கொண்டு கட்டப்பட்டிருக்கிறது.

முழுதாகச் சுற்றிப் பார்த்து முடிப்பதற்குள் கால்கள் வலி எடுத்துவிடும். மேலே காவல் கோபுரங்களில் அக்காலத்தில் உபயோகப்படுத்திய துப்பாக்கிகளை அலங்காரமாக மாட்டி வைத்திருக்கிறார்கள். ஆங்காங்கே பீரங்கிக் குழாய்களும் கல் குண்டுகளும்!

ஏதோ நேற்றுத்தான் கட்டப்பட்டது போல மிகவும் நல்லமுறையில் பராமரித்து வருகிறார்கள்.

நக்கல் கோட்டையிலிருந்து இன்னொரு கி.மீ. தூரம் சென்றால் மலையடிவரம் வந்துவிடும். அடிவாரத்தில் ஒரு வெந்நீர் ஊற்று இருக்கிறது. அதைப் பற்றியும் அடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.

இதோ கம்பீரமான நக்கல் கோட்டை. ஏதோ ஒரு விதத்தில் திருச்சி மலைக் கோட்டையை நினைவு படுத்தவில்லை?

No comments: