Monday, November 14, 2005

மெர்க்குரிப் பூக்கள்-25 : பேசும் சிற்பங்கள் (வசனம் தேவை!!!)

"வசனம் தேவையில்லை" கட்டுடைத்தலைவி, கட்டுடைத் தலைவன் என்று பரபரப்பாக படம் காட்டும் பதிவுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. பதிவுகள் குறித்து எனக்குக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் இப்பதிவுகளின் பின்னூட்டங்களில் சிலர் 'படம் காட்டுவது தான் இப்போது பேஷன்' என்று சொல்லி வைக்கிறார்கள்.

நான் இந்தப் பதிவையே படம்காட்டத்தான் ஆரம்பித்தேன். என் விழியில் நுழைந்து மனதில் தங்கிய காட்சிப் பதிவுகளை வலையிலும் பதித்து வைக்கும் நோக்கில். இதில் என்ன தவறு என்ன பேஷன் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. பின்னூட்டங்களைக் குறிவைத்து 'அவளோட ராவுகள்' என்பது போன்ற தலைப்புகளை நான் பதிவுகளுக்கு வைக்கவில்லை!

வலைப்பதிவுகள் என்னைப் பொருத்தவரை என் மனப் பதிவுகளாகவே பார்க்கிறேன். எழுத்தில் உச்சத்தை எட்டும் எண்ணம் எனக்கில்லை. நான் அறிந்த மொழியை வைத்து எனது சிந்தனைகளைப் பதித்து வைக்கவே - ஒரு நினைவூட்டலாகவே எனது பதிவுகளைப் பாதிக்கிறேன். என் எண்ண அலைகளின் நேர் கோட்டில் சில நண்பர்களும் இருக்கிறார்கள் என்று வந்து பார்த்த்ப் படித்துப் பின்னூட்டமிடுபவர்களிடமிருந்து அறிந்து கொள்கிறேன். இதற்கு மேல் - இலக்கிய மொழியில் சொல்வதானால் - என்னுடைய எழுத்தை 'தமிழ் இலக்கியத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் சாதனம்' என்றெல்லாம் வார்த்தை ஜாலங்கள் காட்ட எனக்குத் தெரியாது. சரியோ தவறோ உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, எனது படம் காட்டும் பதிவுகளை - குறைந்த பட்சம் எனக்காகவாவது - நான் தொடரத்தான் போகிறேன்.

சரி இப்பதிவுக்கு வருகிறேன்.

சிற்பம், சிலை என்றாலே நம்மூரில் லட்சக்கணக்கில் நிறைந்திருக்கும் கோயில் சிற்பங்களும் சிலைகளும் நினைவுக்கு வரும். மிகுந்த அழகுணர்ச்சியுடன் வடிவமைக்கப்பட்டவை அவை. ஒவ்வொரு சிற்பமும் சிலையும் நுணுக்கமாக அபார கலைத்திறனுடன் இக்கால நவீனங்களுக்குச் சவால் விடும் வகையில் செதுக்கியிருப்பார்கள். வடிவத்தில் நளினமாக அழகாக அமைக்கப்பட்ட இச்சிற்பங்களின் முகங்கள் தெய்வீகக் களையுடன் அழகாக இருக்கும். சிலைகளைப் பொருத்தவரை கற்சிலைக்ளும் உலோகச் சிலைகளும் நம்மூரில் உண்டு. வேறு பொருளை வைத்துச் சிலை செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

வட இந்திய முறைப்படி அமைக்கப்பட்ட கோயில்களின் சிற்பங்கள் பளீரென்ற வெண்மையுடன் ஓவியங்கள் போன்றே வண்ணமயமாக அழகாக இருக்கும். அங்கு கற்சிலைகள் கிடையாதோ? இல்லை. தென்னகம் போல எப்போதும் ஏதாவது திரவத்தை ஊற்றி அபிஷேக ஆராதனைகள் செய்யும் வழிபாட்டு முறைகளை வடக்கே பாவிப்பதில்லையோ?. நான் பார்த்தவரை சிறு எண்ணை தீபங்கள், மலர்கள் வைத்து வழிபடுவதோடு சரி. எண்ணை, பால், நெய், என்று விதவிதமாகக் கடவுளைக் குளிப்பாட்டுவதில்லை போல. இதற்கு ஏதாவது பின்னணி இருக்கும்.

இக்காலத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றியும், பெண் சுதந்திரம் குறித்தும் நிறைய எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். கவிஞர்கள் கவிதை இயற்றுகிறார்கள். ஊர்வலம் போகிறார்கள். கோஷம் போகிறார்கள். அக்காலத்தில் 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். ஒரு புறம் "மாதா பிதா குரு தெய்வம்" என்று தாயைக் கடவுளாகச் சித்தரித்து, பல பெண் தெய்வங்களைக் கும்பிட்டுக் கொண்டு, மறுபுறம் அடுப்படியில் அவர்களை அடைத்து, அடித்து நொறுக்கிக்கொண்டிருக்கும் குழப்ப சமூகத்தில் பெண்களுக்கு இன்னும் விடிவு கிடைக்கவில்லை.

இப்போது நவீனங்கள் பெருகி, எரிகிற கொள்ளியில் எண்ணை போல, விஞ்ஞான ரீதியாக வக்கிரங்களும் பெருகிவிட்டன. கோவணம் கட்டியவர்களிலிருந்து கோட் சூட் போடும் கோமகன்கள் வரை சந்துகளில் ஒன்றுக்கிருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். பிளாட்பார மஞ்சள் பத்திரிகைகளிலிருந்து நவீனத்தின் அடையாளமான இணையம் வரை வக்கிரங்கள் பெருத்துப் பெருகி உச்சகட்டத்தை அடைந்து விட்டன. நாகரீகம் பல மடங்கு வளர்ந்திருக்கிறது என்று நம்பும் நவீனர்களாகிய நாம் "காட்டுமிராண்டிகள்" என்பதைக் கெட்ட வார்த்தையாக்கி விட்டோம். கேவலங்களும், வக்கிரங்களும், அநியாயங்களும், பொய்மைகளும், ஏமாற்றுதல்களும், அழிவுகளும் நிறைந்த இக்காலத்தில் சிக்கி உழன்றுக்கொண்டிருப்பதை நினைக்கும் போது, 'நான் ஒரு காட்டுமிராண்டியாகப் பிறந்திருக்கக் கூடாதா?' என்று சில சமயங்களில் தோன்றுகிறது.

எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்றுவிட்டேன்.

பெண்களுக்கான கொடுமைகள் பற்றிப் பக்கம் பக்கமாக கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று படித்து ஏற்பட்ட தாக்கத்தைவிடப் பன்மடங்கு தாக்கத்தை சில விநாடிகளே எடுத்துக்கொண்ட ஒரு காட்சி ஏற்படுத்தியது. எந்த வித விளக்கமும் தேவைப்படாத முகத்திலறையும் தாக்கத்தை இச்சிற்பம் ஏற்படுத்தியது. பார்த்த கணத்தில் மனம் அதீத வேகத்தில் காலச் சுழலில் சிக்கி எங்கெங்கோ சென்றது. அப்போது நான் உணர்ந்ததை எழுத்தில் வடிக்க மொழி போதாது என்றுதான் தோன்றியது. விளக்க முனைந்து உணர்வை நீர்த்துப் போகச் செய்வதை விட, உங்கள் உணர்வுகளுக்கே விட்டுவிடலாம் என்று நினைத்து இதோடு நிறுத்திக்கொள்கிறேன். இனி உங்கள் விழிகளும் மனமும் தொடர்ந்து வாசிக்கட்டும்!

2 comments:

anand said...

continue with your picture posts.
The photos are nice

Thangamani said...

நல்ல சிற்பம். அதைப்பற்றிய விவரங்களையும் கொடுங்களேன். கையிரண்டையும் இழந்த தன் உடுக்கையை இழந்துகொண்டிருக்கும் பெண் சிற்பத்தின் நகல்களை தங்கள் கலையுணர்ச்சியின் குறியீடாக பலர் வாங்குவதை கண்டிருக்கிறேன். இது போன்ற சிற்பங்களைப் பற்றிய தகவல்களும் வரட்டும். உங்கள் பதிவும், படங்களும் அமைதியாகவும், அழகாகவும் இருக்கின்றன.