Monday, November 14, 2005

மெர்க்குரிப் பூக்கள்-26 : பேசும் சிற்பங்கள் (தொடர்ச்சி)Beirut downtown எனப்படும் நகர மையம் கடலையொட்டித் தாழ்வாக இருக்கிறது. மற்ற பகுதிகளெல்லாம் மலைகள் சூழ ஆங்காங்கே மரங்களுக்கிடையில் செருகி வைத்திருப்பதைப் போல கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள்.

கார்னிஷைப் பார்த்துவிட்டு, ராயித் தோமா அவனது வீட்டுக்கு என்னைக் கூட்டிச் சென்றான். அவனது வீடு மலைப்பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. மேடேறிச் செல்லும் சாலையில் காட்டுத்தனமான வேகம். ஒன்றா விர்ர்ர்ரென்று ஆக்ஸிலேட்டர் மிதிக்கப்பட்டு இஞ்சின் சத்தம் போடும். இல்லாவிட்டால் பிரேக் மிதிக்கப்பட்டு டயர்கள் தேயும் கீறீச்ச்ச்ச்ச்ச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அப்படியொரு வேகம்.

யாரும் போக்குவரத்து விதிகளை மதிப்பதாகத் தெரியவில்லை. சிவப்பு விளக்கு எரிவதை ராயித் கண்டுகொள்ளாமல் பல இடங்களில் வண்டியை விரட்ட நான் யாரும் குறுக்கே வந்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே இருக்கைப் பட்டியைப் போட்டுக்கொண்டு கண்களை மூடிக்கொண்டேன். "ஏன்யா இப்படி ரேஸ் மாதிரி ஓட்டறீங்க" என்று கேட்டால் "இப்பதான சிவில் வார் முடிஞ்சிருக்கு. எங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட்டு வேணும். அதுக்குள்ள சட்டம் திட்டம்னு ஆரம்பிச்சாங்கன்னா யாரு கேப்பா?" என்றாய் ராயித். எனக்கு இந்த லாஜிக் லேசாகத்தான் புரிந்தது. இது குறித்து அவன் சொன்ன ஜோக் ஒன்று கீழே.

**

இதுவே லெபனானுக்கு என் முதல் பயணம். விமான நிலையத்திலிருந்து வெளியில் வந்து நான் டாக்சியில் ஏறியதும் டாக்ஸி ட்ரைவர் படுவேகமாக ஓட்டிக்கொண்டு போனான். சிவப்பு விளக்கு விழுந்தும் மதிக்காமல் அவன் தாண்டிக்கொண்டு செல்ல நான் அலறினேன். அவனிடம் ஏன் இப்படி ஓட்டுகிறாய் என்று கேட்டதற்கு அவன்..

"ஏன்னு கேக்கறியா? ஏன்னா நான் பைத்தியம். அதான்"

அடுத்த சிக்னலிலும் சிவப்பு விளக்கு. டாக்ஸி நிற்காமல் பறக்க நான் 'அய்யோ' என்று அலறினேன். நல்ல வேளை யாரும் பச்சை விளக்கு விழுந்த சாலையிலிருந்து எங்களுக்குக் குறுக்காகக் கடந்து செல்லவில்லை. "ஏனப்பா சிவப்பு விளக்கு உனக்குத் தெரியவில்லையா? ஏன் இப்படி விதிகளை மீறுகிறாய்?" என்று கத்தினேன். அதற்கு அவன்

"ஏன்னு கேக்கறியா? ஏன்னா நான் பைத்தியம். அதான்" என்று திரும்பாமல் சொன்னான்.

மூன்றாம் சிக்னல் தூரத்தில் தெரிகிறது. நாங்கள் செல்லும் சாலையை விட அந்தச் சந்திப்பில் குறுக்கே போகும் சாலை பிரதான சாலை. நிறைய வாகனப் போக்குவரத்து இருக்கும். நான் பார்த்த போது எங்களுக்குப் பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. ஆனால் எங்கள் வண்டி நெருங்குவதற்குள் சிவப்பு விழுந்துவிட்டது. இதிலாவது டிரைவர் நிறுத்துவான் என்று பார்த்தால் இப்போதுதான் ஆக்ஸிலேட்டரை இன்னும் மிதித்து வேகமாக அந்தச் சந்திப்பைக் கடந்தான். எனக்கு அதிர்ச்சியிலும், பதற்றத்திலும் மயக்கமே வரும் போல இருந்தது.

"டேய் பாவி. நீ செத்தா செத்துக்கோ. என்னைச் சாவடிக்காதே. போலிஸ் பிடிச்சா ஒன்னோட என்னையும் சேத்து உள்ளே தள்ளுவாங்க. ஏண்டா இப்படி ரெட் சிக்னல்ல நிக்காம ஓட்டறே" என்று அவன் தலைமுடியைப் பிடித்து உலுக்க அவன் அலட்டிக் கொள்ளாமல்

"ஏன்னு கேக்கறியா? ஏன்னா நான் பைத்தியம். அதான்" என்றான்.

நான் இவன் வண்டியில் ஏறியதற்கு என்னையே சபித்துக்கொண்டு எங்காவது நடுவில் நிறுத்திக்கொண்டு இறங்கிவிடலாமா என்று யோசித்தேன். இவன் நிறுத்துவானா என்று தெரியவில்லை. அதோ நான்காவது சிக்னல் தெரிகிறது. பச்சை விளக்கு. நாங்கள் நெருங்குவதற்குள் சிவப்பு விழும் என்று எதிர்பார்த்தேன். பச்சை விளக்கு இன்னும் எரிந்துகொண்டிருக்க, எங்கள் கார் வேகம் குறைந்து சரியாக பச்சை சிக்னலில் நின்றது. ட்ரைவர் கியரை ந்யூட்ரலில் போட்டுவிட்டு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துவிட்டு பின்னால் திரும்பி என்னைப் பார்த்துப் புன்னகைக்க நான் 'அப்பனே. பச்சை விளக்குதான் எரிகிறது? ஏன் நிறுத்தினாய்? போகவேண்டியதுதானே?' என்று கேட்டேன்.

அவன் "அங்க பார். என்ன மாதிரி ஒரு பைத்தியம்" என்று கைகாட்டிய இடத்தில், குறுக்குச் சாலையில் படுவேகமாக - சிவப்புச் சிக்னலில் - ஒரு டாக்ஸி கடந்து சென்றது.

***

ராயித் வீட்டுக்குப் போகும் வழியில் ஓர் இடத்தில் நிறுத்த ஒரு சிறிய இடத்தில் இருந்தன இந்தச் சிலைகள். அரவமில்லாத இடத்தில் பேசாமல் நிற்கும் இந்தச் சிலைகளும் அந்த இடத்தின் அமைதியும், மலைக் குளிரும், தூரத்தில் கீழே தெரியும் பெய்ரூட் நகரமும் அந்திப் பொழுதும் ஒரு வித மயக்கத்தைக் கொடுத்தன என்றால் மிகையாகாது. முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இன்னும் சில சிலைகள்...

No comments: