Monday, November 07, 2005

மெர்க்குரிப் பூக்கள் - 19 : நெருப்புக் கோழி!


வான் கோழி நிறைய பார்த்தாகிவிட்டது! நெருப்புக்கோழியைப் பற்றிப் படித்ததோடு சரி. பார்த்ததில்லை! சிறுவயதில் "நெருப்புக்கோழி நெருப்பைத் தின்னும்" என்று டிராகன் ரேஞ்சுக்கு அதைப் பற்றி மூட நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டிருந்ததோடு சரி. எங்கே பார்ப்பது?

நக்கல் கோட்டையைப் பற்றி முன்பு (மெர்க்குரிப் பூக்கள்-14) குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? பர்க்கா ரவுண்ட்-அபவுட்டிலிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் நுழைந்ததும் ஒரு கி.மீ.தூரத்திலேயே சாலையின் வலதுபுறம் கம்பிவேலி துவங்கி கிட்டத்தட்ட இரண்டு கி.மீ. நீளத்திற்கு வரும். மிகப்பெரிய பண்ணை - பண்ணை முழுதும் நூற்றுக்கணக்கில் நெருப்புக் கோழிகள். வேலியோரம் நின்றுகொண்டு சாலையில் விரையும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும். பண்ணைக்குள் நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு செல்லலாம் (500 Baizas).

மண் சாலை - புழுதிபறக்கச் செல்லவேண்டும். பண்ணைக்குள் நுழைந்து ஒரு கி.மீ. பயணித்தால் - இருபுறமும் விவசாயம் செய்கிறார்கள் - பெரிய கம்பிக் கதவுகளைத் திறந்துவிடுகிறார்கள். நெருப்புக் கோழிகள் நம்மை வரவேற்கின்றன. என்ன உயரம்! காரின் அருகே வந்து ஜன்னல் வழியாக நம்மைப் பார்க்கின்றன. லேசாக ஜன்னலை இறக்கி உருளைக் கிழங்கு சிப்ஸ்ஸை நீட்ட லபக்கென்று எடுத்துக்கொள்கின்றன. மொத்தையான அலகுகள்.

குழந்தைகள் பிரமித்துப் போய் கிறீச்சிடுகிறார்கள். மெதுவாக ஊர்ந்து சென்று வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினால் நம்மைச் சுற்றி சூழ்ந்து கொள்கின்றன. பெண்கள் சிரித்துக்கொண்டே பயத்தில் அலறுகிறார்கள். ஒரு ஓமானி அவற்றைக் குச்சியால் விரட்டிவிட குதித்து ஓடுகின்றன. தூரத்தில் ஒன்றையொன்று துரத்திக்கொண்டு ஓடும் நெருப்புக் கோழிகள். சில தட்டாமாலை சுற்றுகின்றன. வினோதமான ஒலியெழுப்பியபடி சில. சூடான காற்று நிரந்தரமாக வீசிக்கொண்டே இருக்கிறது.உள்ளே சுற்றி அடர்த்தியான கம்பிவலை அமைக்கப்பட்ட சிறிய தெப்பத்தில் ஏழெட்டு முதலைகள் இருக்கின்றன. அசையாது சிலைபோல் மணிக்கணக்காக அப்படியே இருக்கின்றன. நிறைய வாத்துகள். ஒரு சிறிய ஷெட்டுக்குள் பகுதி பகுதியாகப் பிரித்திருக்க, ஒன்றில் கால்பந்து அளவிலான நெருப்புக்கோழி முட்டைகள் - இன்குபேட்டரில். குஞ்சுகள் இன்னொரு பகுதியில். சற்றே வளர்ந்த குஞ்சுகள் இன்னொரு பகுதியில். சற்றே பெரியதாகும் வரை அங்கு பாதுகாப்பாக வளர்க்கிறார்கள். பின்பு வெட்ட வெளியில் விட்டுவிட பெரிய நெருப்புக்கோழிகளுடன் அவை கலந்து பழகத் தொடங்கி விடுகின்றன. பயங்கர நாற்றம் அடிக்கிறது. நெருப்புக்கோழி முட்டையோடு, இறகுகள் என்று விற்கிறார்கள். அவற்றை அம்மணிகள் வாங்கி அலங்கார வேலைப்பாடு செய்து கொள்ளலாம். முட்டை மீது வர்ணமடித்து ஓவியங்கள் வரையலாம். நெருப்புக்கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்கிறார்கள் போல - அங்கே கசாப்புக் கடை எதையும் பார்க்க முடியவில்லை. அதன் இறைச்சி எத்தனை நல்லது என்று புள்ளிவிவரங்களுடன் எழுதி வைத்திருக்கிறார்கள். நெருப்புக்கோழிகளுக்கு இந்தப் புள்ளிவிவரங்களெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை.

  • பூமியில் வாழும் பறவையினங்களில் அளவில் பெரியவை இவை
  • இவற்றால் பறக்க முடியாது. அதற்காக இதன் சிறகுகளைச் சாதாரணமாக எடை போட்டுவிடக்கூடாது. கோபம் வந்தால் இறக்கைகளை விரித்து அடித்துக் காட்டும். மிக வலுவான இறக்கைகள். வெப்பம் அதிகமாக இருக்கும் காலங்களில் சிறகுகளையே விசிறிகளாக பாவித்து விசிறிக்கொள்ளுமாம். குளிர்காலங்களில் இறக்கைகளே போர்வைகள்.
  • ஆண் கோழிகள் 6-லிருந்து 9-அடி உயரம் வளர்கின்றன. பெண் கோழிகள் 5.5லிருந்து 6.5 அடி வரை.
  • குஞ்சுகள் மாதத்திற்கு பத்து இன்ச் என்ற அளவில் வளருமாம். நாம் இந்த வேகத்தில் வளர்ந்தால் எப்படி இருக்கும்?
  • ஒரு வயதான குஞ்சுகளின் எடை நூறு பவுண்டுகள் இருக்கும்
  • இரண்டிலிருந்து மூன்று வயதுக்குள் பருவமடைந்துவிடுகின்றன.
  • 30 லிருந்து 70 வருடங்கள் ஆயுசு!
  • ஆபத்து காலங்களில் படுவேகமாகத் தன்னைத் தற்காத்துக்கொள்ள ஓடும் - ஓரடியில் 23 அடிகள் தாண்டுமளவிற்கு! வேகம்? மணிக்கு 50 மைல்கள் வரை!
  • சூலுற்ற கோழி இரண்டு நாளைக்கு ஒன்று வீதம் கிட்டத்தட்ட 50 முட்டைகள் இடும். ஒவ்வொரு முட்டையும் 12 கோழி முட்டைகளுக்குச் சமானம்.

நம்மூரில் கழுதையின் காதில் ஓட்டை போட்டு அடையாளம் செய்திருப்பார்கள். மாட்டின் முதுகில் சூடு போட்டும் வைத்திருப்பார்கள். நெருப்புக்கோழிகளின் கழுத்தில் சின்னப் பட்டி ஒன்றை மாட்டி வைத்திருக்கிறார்கள். கீழே இரண்டாவது படத்தில் நடுவிலிருக்கும் கோழியின் கழுத்தில் நீட்டிக்கொண்டிருக்கிறது பாருங்கள்!

காரின் ஜன்னலை இறக்கிவிட்டு எடுத்த படங்கள்!

***

2 comments:

கொடைக்கானல் said...

Excellent and Amazing your Efforts are. காற்றில் - நெட்டோடு கலந்து வருவது தங்களின் கவிதை மட்டுமல்ல, கண்ணிலே தென்படமுடியாத எட்டாத எதார்த்தமும்தான்.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

நன்றி கொடைக்கானல் (நல்ல பெயர்!). உங்களுக்குப் பதிவுக்ள் பிடித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

மீண்டும் வாருங்கள்.

அன்புடன்
சுந்தர்