Thursday, November 03, 2005

மெர்க்குரிப் பூக்கள்-17 : மேகங்களில் நீந்தும் மீன்கள்!

மேகங்கள் உங்களுக்குப் பிடிக்குமா? ஆகாயத்தில் கவிந்து வரும் மழை மேகங்களை கவனித்திருக்கிறீர்களா? எங்கோ அவசரமாக நம்மூர் வழியாக விரையும் மேகங்களைப் பார்த்திருக்கிறீர்களா? ஏதோ ஊடல் போலச் சட்டென்று பிரிந்து விலகிச் செல்லும் மேகத்தைப் பார்த்திருக்கிறீர்களா? கருமேகங்களின் ஆவேசத்தைத் தணிக்க முற்பட்டு அணைக்க வரும் வெண்மேகங்களைக் கண்டிருக்கிறீர்களா?

மேகப் போர்வைக்கு மேலே பெரும்பாறைகள் உருண்டு செல்வதைப் போல தொடர்ச்சியான இடி முழக்கங்களைக் கேட்டிருப்பீர்கள். சில சமயம் ஒரே ஒரு மேகத் திரள் மட்டும் சூரியனுடன் மல்லுக் கட்டும். வானத்தின் நிறம் வெண்மையோ என்று நினைக்க வைக்கும் வண்ணம் பார்வைக்கெட்டிய தூரம் வரை வானத்தை மறைத்த போர்வை போல பரவியிருக்கும் மேகக்கூட்டங்கள்.

வெயிற்பொழுதில் சாலையில் உச்சி சுடப் பயணிக்கையில் சட்டென்று குடை கவிழ்த்தாற்போல் நிழலை நம்மைச் சுற்றிப் பரப்பும் மேகமொன்று. இல்லையெனில் நம்மை முந்திக்கொண்டு விரையும் மேகத்தின் நிழல். போர்க்களத்தில் எதிரும் புதிருமாக நிற்கும் எதிரிகள் போல நாம் இங்கு வெயிலில் நிற்க நூறடி தூரத்தில் அசையாது நிற்கும் மேகத்தின் நிழல். வயல்வெளிகளில் காற்று புற்களின் நுனிகளை வருடி அலையலையாய்ச் செல்லும் போது, அதைத் தொடர்ந்து விரட்டிச் செல்லும் மேகத்தின் நிழல்.

சிறுவயதில் மேகங்களில் பிம்பங்களை உருவகித்துக்கொண்டு பார்ப்பது பழக்கம். சட்டென் மூக்கு, உதடுகள், தாடையோடு முகமொன்றைக் காட்டும். இல்லாவிட்டால் யானை, ஆமை என்று அவதாரம் எடுக்கும். இல்லாவிட்டால் ஒரு புளியமரம் கிளைகளைப் பரப்பிக் கொண்டு போகும்.

மேலே சொன்ன விவரிப்புகளெல்லாம் பூமியிலிருந்து அண்ணாந்து நோக்குகையில் கிடைக்கும் காட்சிகள். வானத்திலிருந்து பார்க்கையில் மேகங்கள் எப்படி இருக்கும் என்று யோசித்ததுண்டு. புராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் தேவர்கள் மேலே நின்றுகொண்டிருக்கிறார்களோ என்று தோன்றியதுண்டு. மின்னல்கள் வெடித்து வெளிக்கிளம்பும் போது அருகிலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைத்ததுண்டு.

முதல் விமானப் பயணத்தின்போது ஜன்னலோர இருக்கை வேண்டும் என்று கேட்டுக்கொண்டது - சக்கரங்கள் ஓடுதளத்திலிருந்து மேலேறி விமானம் எழும்பும்போது கீழே நழுவிப் போகும் பூமியைப் பார்ப்பதற்காக. மறுபடியும் இறங்கித் தரையைத் தொடும் வினாடியில் எழும் அதிர்வை உணர்வதற்காக. பிற்பாடு மேகங்களை கவனிப்பதற்காகவே விமானப் பயணத்தின்போது ஜன்னலோரத்தில் அமர்ந்துகொள்வேன்.

தூறலுடன் மப்பும் மந்தாரமுமாக சூழ்நிலையே சற்று இருண்டிருந்த பகற்பொழுதில் மேலே எழும்பிப் பறக்கும் விமானம் மேகப்பரப்பைத் தாண்டி உயர்ந்து சென்றதும் ஆச்சரியம். சுள்ளென்று வெயிலடிக்கிறது. மேகத்தின் அதீத வெண்மை கண்களைக் கூசச் செய்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண்பஞ்சு பரப்பி வைத்தாற்போல் மேகக்கூட்டங்கள். அதுவே ஒரு தனி உலகமாகத் தோற்றமளிக்கிறது. சமச்சீரான வெளிகள்; மேடு பள்ளங்கள்; மலைகள் - ஆம். மலைகள்தான்.

சட்டென ஒரு மேக மலைக்குள் விமானம் புகும்போது ஆடுகிறது. இருக்கைப் பட்டிகளைப் போட்டுக்கொள்ளச் சொல்லி விமானி அறிவுறுத்துகிறார். உராய்வில்லா மேகப் பயணம் ஏதோ வெற்றிடத்தில் மிதப்பது போல பிரமையை ஏற்படுத்தினாலும், மேகத்துக்குள் புகுந்து செல்லும்போதுதான் இறக்கைகள் மேகத்தைக் கிழித்துச் செல்வதிலிருந்து விமானத்தின் வேகத்தை உணரமுடிகிறது. படுவேகம்! சுற்றி மேகங்கள் -கீழ், மேல், முன், பின் எல்லா திசைகளிலும் வெறும் வெண்மை. எங்கே விமானம் தரையிலோ அல்லது எதிரே ஏதாவது மலையிலோ முட்டிவிடுமோ என்று அனாவசிய பயம் ஏற்படுகிறது. வலது கோடியில் மேகத்தில் குறுக்காக ஒளிக்கோடு வினாடி நேரத்திற்கு தோன்றி மறைகிறது - மின்னல். அடர்த்தியான மேகங்களிடையே தோன்றியதால் அதன் வெளிச்சத்தின் வீர்யம் புலப்படவில்லை. மேக மலையை ஊடுருவி முடித்த விமானம் விடுபட்டு மறுபடி வெற்றிடத்தில் பறக்க கீழே எங்கெங்கும் விரவியிருக்கும் மேகத்தைப் பார்க்கையில், பாற்கடல் போலத் தோன்றுகிறது.

கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் மேக மலைக்குள் பிரயாணம். 700 கி.மீ. வேகம் என்று வைத்துக் கொண்டாலும் கிட்டத்தட்ட 35 கி.மீ. பரப்புள்ள மலை - அம்மாடியோவ்! கை கேமராவைத் தேடியெடுக்க கிளிக்கிய சில படங்கள் உங்கள் பார்வைக்கு இங்கே. இதைப் பார்த்தால் ஒரு ராட்சத ஆமை போலத் தோன்றவில்லை?


பாற்கடல் போல வெண்பரப்பு!


மேலே வெயில்! கீழே மழை!


"மேலிருந்து பார்க்கையில் கீழே கட்டிடங்கள் தீப்பெட்டிகள் போன்று தெரிந்தன" என்ற வர்ணனைகளை எத்தனை கதைகளில் படித்திருப்போம். இதில் நேராகவே தெரிகிறது.


GIS எனப்படும் Geographical Information System-ஐ நினைவு படுத்தும் காட்சி இது.


மேலே இருக்கும் இரு படங்களும் இறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு எடுத்த படங்கள். வெயில் காணாமல் போய் மப்பும் மந்தாரமுமாக இருந்த மதியப் பொழுதில்!

நிலாவை மட்டுமல்ல; மேகங்களையும் ரசிக்கலாம் - நிலாவை இரவிலும் மேகங்களைப் பகலிலும். பகல் நிலவும், இரவு மேகங்களும் கவனிப்பாரற்ற மூலையைப் போல!

2 comments:

அ. பசுபதி said...

நண்பரே!
'மரத்தடி'யில் இதற்கான பாராட்டு இடுகையுடன் சந்தேகம் ஒன்றையும் கேட்டிருக்கிறேன்!
- தேவமைந்தன்

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

இந்தச் சுட்டியில் தங்கள் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கலாம்.

http://www.enchantedlearning.com/subjects/astronomy/planets/earth/clouds/

அன்புடன்
சுந்தர்.