Wednesday, November 02, 2005

மெர்க்குரிப் பூக்கள்-15 : மஸ்கட் திருவிழா


எனக்கு நிர்மலமான நீலவானம் மிகவும் பிடிக்கும். பிடித்த நிறம் நீலம். அதனால்தானோ என்னவோ இதுவரை மெர்க்குரியைக் கொண்டு நிறைய படங்களைச் சுட்டுத் தள்ளியிருந்தாலும் எனக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும். நல்ல வேகத்தில் தலைக்கு மேல் பறந்து போன இந்த நபரை நொடிக்கும் குறைவன நேரத்தில் காமிராவில் பிடிக்க வேண்டியிருந்தது. அந்த விதத்தில் எந்த வசதியுமில்லாத ஒரு அடிப்படைக் கருவியில் இப்படத்தை எடுப்பது நல்ல சவாலாக இருந்தது.


நம்மூர் சித்திரைப் பொருட்காட்சி போன்று ஒவ்வொரு வருடமும் மஸ்கட்டில் மஸ்கட் திருவிழா (Muscat Festival) நடத்துவார்கள். ஓமான் கிட்டத்தட்ட எல்லா விதங்களிலும் துபாயைப் பார்த்துக் காப்பியடிக்கும் ஊர். வருடாவருடம் நடக்கும் துபாய் திருவிழா (Dubai Festival)விற்கு உலகெங்கிலும் இருந்து சுற்றுலா பயணிகல் இலட்சக்கணக்கில் குவிவார்கள். துபாய் பிதுங்கித் தெறித்துவிடும் அளவிற்குக் கூட்டம்.
எல்லா வியாபார நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு விலையைக் குறைத்து விற்க, ஆங்காங்கே பிரம்மாண்ட குலுக்கல் போட்டிகளும் நடத்தப்படும்!
தங்கம் அதீதமாகப் புரளும். வருட வியாபாரத்தில் பாதியை இந்த ஒரு மாதத்தில் பார்த்து விடுவார்கள். சும்மாவே துபாயில் ஒரு நாளில் ஐந்து மணி நேரமாவது போக்குவரத்து நெரிசலில் அவதிப்படுகிறார்கள். இந்த மாதிரி திருவிழா சமயங்களில் வாடகை ஊர்தி எடுத்துக்கொண்டு சுற்றுவது உத்தமம். நிற்க.

துபாய் அளவு பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் மஸ்கட்டிலும் வருடாவருடம் திருவிழா கொண்டாடுகிறார்கள். விசா கெடுபிடிகளும் தளர்த்தப்படும். பல நாடுகளிலிருந்து (குறிப்பாக வட இந்தியாவிலிருந்து) வந்து துபாய்க்குக் குவியும் சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து ஐம்பது நிமிட விமானப் பயணத்தில் மஸ்கட்டுக்கும் வந்துவிட்டுச் செல்லவே விரும்புவர். விமான நிறுவனங்களும் துபாய்-மஸ்கட் பயணத்தைக் கிட்டத்தட்ட இலவசமாகவே வெளிநாட்டுப் பயணிகளுக்கு வழங்குகின்றன. சென்னையிலிருந்து துபாய்க்குப் பயணச்சீட்டு வாங்கும்போது இடையில் மஸ்கட் பயணத்தைச் சேர்த்துக்கொள்ளலாம் - கூடுதல் கட்டணமின்றி!!! இதற்காகவே துபாயில் திருவிழா முடியும் தருணத்தில் மஸ்கட்டில் தொடங்கும். பெரும்பாலும் ஜனவரி-பிப்ரவரி மாதங்களில்தான் நடத்துவார்கள். பொதுவாகவே வளைகுடா நாடுகளில் நவம்பரிலிருந்து மார்ச் வரை வெப்பம் குறைந்து தட்பவெப்ப நிலை இனிதாக இருக்கும் - ஆகையால். மஸ்கட் திருவிழாவின் சின்னம் இந்த ஓமானிப் பெண் பாஹ்ஜா! (Bahja). வெறும் ஒவியமல்ல. நிறைய ஓமானிப் பழங்குடிப் பெண்கள் இதே மாதிரி உடையணிந்து நடமாடுகிறார்கள்.குறிப்பு: பாஹ்ஜா - இது நான் எடுத்த /வரைந்த படம் அல்ல!
திருவிழாவின் போது பல்வேறு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் ஒரே சமயத்தில் நடக்கும். கடற்கரைகளில் க்ளைடரில் பறப்பது, ராட்சத பலூன்களில் பறப்பது, போர்விமானங்களைக் கொண்டு ஆகாயத்தில் சாகசங்கள் செய்வது, நீர்ச்சறுக்கு, விளையாட்டுப் போட்டிகள் என்று தூள் பறக்கும். பூங்காக்களில் இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என்று சிறப்பாக நடைபெறும். மொத்த மக்களும் மாலைவேளைகளிலும், வாரயிறுதிகளிலும் குவிந்துவிடுவார்கள். இந்தியர்களின் எணணிக்கை வழக்கம்போலவே அதிகம். கிட்டத்தட்ட இது தீபாவளிப் பண்டிகை மாதிரி. இரவு ஒன்பது மணியளவில் வாணவேடிக்கை நிகழ்த்துவார்கள். துபாய் க்ரீக் (Dubai creek) பகுதியில் வாணவேடிக்கைகள் ஜாலங்கள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.

நிறைய நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும், விழா நிர்வாகிகளும் அரசும் பிரதானப் படுத்துவது - நாட்டின் பழங்கலைகளையும், கலாசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளையுமே. ஓமானின் 'எண்ணை வளத்திற்கு' முந்தைய வாழ்க்கைமுறைகளை திருவிழா சமயத்தில் நிகழ்த்திக் காட்டுவார்கள். ஒட்டகம், குதிரை, கழுதை சவாரியும் செய்யலாம்!!

***

3 comments:

துளசி கோபால் said...

சுந்தர்,

உங்க 'மெர்க்குரிப் பூக்கள்' மொத்தத்தையும் இப்பத்தான்
ஒட்டுமொத்த்மாப் படிச்சேன்.
இவ்வளவு அழகான ஊரா மஸ்கட்? தெரியாமப் போச்சே? அண்ணன் அங்கே எட்டு வருஷம் இருந்தார். போகலாம்னு நினைச்சுக்கிட்டே இருந்துட்டோம். அடடா, கோட்டை விட்டுட்டேனே(-:

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//அண்ணன் அங்கே எட்டு வருஷம் இருந்தார்//

அப்படியா? இப்ப எங்கே இருக்கார்?

மஸ்கட் உண்மையிலேயே அழகான ஊர். அன்பான நட்பான மக்கள். ஓமான் சுல்தான் நம்ம நாட்டுல படிச்சிருக்கார். நம்ம ஜனாதிபதி ஓமான் வந்தப்போ சுல்தானே அவரை கார்ல அழைச்சுக்கிட்டு அவரே ஓட்டிக்கிட்டு போயிருக்கார்!! இந்தியர்களுக்கு நல்ல மரியாதை பொதுவாகவே இங்கு அதிகம். அழகான சாலைகள். நல்ல உள்கட்டுமானம்.

I am missing Muscat very much after coming to USA!!

பின்னூட்டத்திற்கு நன்றி துளசிக்கா! அடிக்கடி வாங்க!

துளசி கோபால் said...

அங்கே ஓமான் கேபிள்ஸ்லே ஜி.எம் ஆ இருந்தார். இப்ப ரிட்டயர்ட் ஆகிட்டார்.
இன்னைக்கு அமெரிக்காவுலே மகள்கள் வீட்டுலே.
அடுத்தமாசம் முதல் சிங்காரச் சென்னை.