Wednesday, November 09, 2005

மெர்க்குரிப் பூக்கள் - 22: வெள்ளிப்பனி மலையின் மீதுலவுவோம்!


மேகங்களை அருகில் தரிசித்தாகிவிட்டது. மலைகளை விமானத்திலிருந்து பார்ப்பதும் புதிதில்லைதான். இந்த இடத்தில் ஒன்று குறிப்பிட வேண்டும்.

வளைகுடா நாடுகளுக்கு முதன்முதலில் சென்று இறங்கிய அனுபவம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அனைத்திலும் பொதுப்படையான அம்சம் ஒன்று இருக்கிறது. துபாயோ, அபுதாபியோ, பஹ்ரைனோ, கத்தாரோ எதுவாக இருந்தாலும் விமானம் இறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அந்த நகரங்களின் பளபளப்பு உயர்ந்த கட்டிடங்களிலும் சீரான சாலைகளிலும் தெரிய வந்துவிடும். இதில் மஸ்கட் சற்று வித்தியாசமானது.

சுற்றிலும் மரம் செடிகொடிகள் எதுவும் முளைக்காத மலைத்தொடர்கள் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? கடற்கரையை ஒட்டி இருந்தாலும் கரையைக் கடந்ததும் உடனடியாக மலைத்தொடர்கள் பெரும்பாலான இடங்களில் ஆரம்பித்துவிடும். விமானத்திலிருந்து பார்க்கும்போது வலது பக்கம் எல்லையில்லாதது போலத் தோன்றும் அரபிக்கடல். இடதுபக்கம் பார்த்தால் கொசகொசவென்று பழுப்பு நிறத்தில் மேடும் பள்ளமுமாய்க் காட்சியளிக்கும் மலைகள். அம்மலைகளைப் பார்க்கையில் ஏதோ செவ்வாய் கிரகத்தில் இறங்கப் போகிறோம் என்று தோன்றும். விமானத்தை நிறுத்தியதும் வாசலுக்கு அருகில் ஒட்டகத்தை நிறுத்தி முதுகில் இறங்கச் சொல்வார்கள் என்று எனக்குக் கற்பனை ஓடியது!

நிற்க.

லெபனானின் பெய்ரூட்டிற்குச் சென்றபோது - காணும் திசையெங்கிலும் மலைத் தொடர்கள். ஓமான் போன்றில்லாது இங்கு மரங்களையும் காண முடிந்தது. த்ரிபோலி (Tripoli) யைத் தாண்டும்போது பார்த்தால் அதுவரை பசுமையாக இருந்த மலை



இப்படி லேசாக நரைக்கத் துவங்கி ,

இன்னும் நரைத்து,

கடைசியில் முழு நரையாகிவிட்டது.

ஆமாம் பனி பொழிந்திருக்கும் மலைத்தொடர்கள்.

பெய்ரூட்டிலும் கடற்கரையை ஒட்டிய விமான நிலையம். மஸ்கட்டிலாவது விமான நிலையத்திற்கும் கடலுக்கும் இடையே தாராளமான இடைவெளி உண்டு. பெய்ரூட்டில் சக்கரங்களை விரித்துத் தாழ்வாகப் பறக்கும்போதே கடலில் இறக்கப் போகிறார்கள் என்று கிலியைக் கொடுக்குமளவிற்கு ஓடுதளம் கடலைக் கிட்டத்தட்டத் தொடுமளவிற்கு இருக்கிறது. இப்போது வெள்ளிப் பனி மலைகள்! மற்றவை அடுத்த பதிவில்!

4 comments:

சிவா said...

சுந்தர்! படங்கள் விமானத்தில் இருந்து ஜன்னல் வழியாக எடுத்தாலும், தெளிவாக இருக்கிறது. என் அண்ணன் மஸ்கட் என்று சொன்னான். அதற்கு மேல் சரியான இடம் பேர் தெரியவில்லை. கேட்டு சொல்கிறேன்.

அப்டிப்போடு... said...

மஸ்கட் மீது பறந்தது போன்ற உணர்வைத் தந்தன படங்கள். படங்களை பெரிதாகக் காட்டும் வசதி இருந்தால் மேலும் நன்றாக இருக்கும்

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//மஸ்கட் மீது பறந்தது போன்ற உணர்வைத் தந்தன படங்கள். //

மரம். இது லெபனான் மீது பறக்கும்போது எடுத்தது. மஸ்கட்ல பனியெல்லாம் கனவுலதான் பாக்க முடியும்.

படங்களை எப்படிப் பெரிதாகக் காட்டுவது என்று தெரியவில்லை. இப்போது பதிவின் அகலத்தை அதிகப்படுத்தியிருக்கிறேன். பார்க்கலாம்.

நன்றி.

அப்டிப்போடு... said...

//லெபனானின் பெய்ரூட்டிற்கு//

ஓ!. நான் அரபு நாடுகளுக்கு வந்ததில்லை. ஆனால் வரவேண்டும் என்ற ஆசை உள்ளது.