Tuesday, November 15, 2005

அடேங்கப்பா எவ்ளோ ஒசரம்!

கொடைக்கானல் சென்றால் பேரிஜாம் ஏரிக்குச் செல்லாமல் வருவதில்லை. கொடை ஏரியிலிருந்து 20 கி.மீ. இன்னும் மேலேறிச் செல்லவேண்டும். வனத்துறை அனுமதி தேவை. காலையிலேயே மூஞ்சிக்கல்லில் இருக்கும் அவர்களது அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பம் எழுதிக்கொடுத்தால், அனுமதி கிடைக்கும்.

சற்றே கரடுமுரடான சாலை; அசந்தால் கபால மோட்சம்! இடதுபக்கம் படுபாதாளம். எதிரே வண்டி வந்தால், மிக மிக மெதுவாக மிகுந்த எச்சரிக்கையுடன் ஒதுங்கி வழிவிட வேண்டும்.

முதல் கொண்டையூசி வளைவு திரும்பியதும் ஒரு சவுக்குமரத் தோப்பு இருக்கிறது. பைசா கோபுரம் போன்று சாய்ந்த அடர்த்தியாக வளர்ந்த மரங்கள். வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே புகுந்து ஒரு நடை நடந்துவிட்டுப் பயணத்தைத் தொடர்வது வழக்கம். சில்வண்டுகளின் ரீங்காரமும், பறவைகளின் சத்தத்தையும் தவிர வேறு சத்தமெதுவுமின்றி அமைதியாக இருக்கும் பிரதேசம். போன நவம்பரில் சென்றிருந்தபோது இரண்டு குதிரைகளை வைத்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக ஆள்களை அமர்த்தி நடத்திச் சென்று காசு வாங்கிக்கொண்டிருந்தார்கள். கீழே ஏரியைச் சுற்றி குதிரைகள் அதிகமாகி போட்டியும் அதிகமாகிவிட்டது போல!


அதற்கு முந்தைய பயணத்தில் நண்பர்களாகச் சேர்ந்து ஐந்து பைக்குகளில் சென்றிருந்தோம். திரும்ப வருகையில் கடுமையான மழை. ஐந்தில் ஒன்று மட்டும் டிவிஎஸ் சாம்ப் மொப்பெட். முக்கி முனகி நண்பன் அதில் எங்களுடன் சேர்ந்து வந்துகொண்டிருந்தான். அதிக ஈரத்தில் சாம்ப்பின் கேபிள் பிரேக் உராய்வை இழந்து, வண்டி நிற்காமல் படுவேகமாக இறக்கத்தில் செல்ல, முதலில் அவன் ஜாலியாகத்தான் இருந்தான். சவுக்குத் தோப்பை அடைந்ததும் கொண்டையூசி வளைவில் நின்றிருந்த காட்டெருமையைப் பார்த்து நாங்களெல்லாம் வண்டிகளை நிறுத்திவிட்டு மழையில் காத்திருக்க, அவனால் வண்டியை நிறுத்தமுடியாமல் அலறிக்கொண்டே சென்றான். சட்டென்று கைகளையும் கால்களையும் விரித்துக் குதித்து வண்டியை விடுவித்துவிட்டுக் கீழே விழ, வண்டி மட்டும் நேராகச் சென்று வளைவில் சரிந்து விழ காட்டெருமை எங்களை முறைத்தது. அவன் எழுந்து அடித்த்ப் பதறி திரும்ப எங்களிடம் ஓடி வந்து சேர்ந்துகொள்ள கிட்டத்தட்ட ஒருமணி நேரம் எங்களைக் காக்கவைத்துவிட்டுக் காட்டெருமை சாலையைக் கடந்து சென்று மறைந்தது. சரியான திகில் பயணம் அது.

பேரிஜாம் அமைதியான ஏரி. காட்டுத் தீ பற்றிக்கொள்ளும் அபாயம் அதிகம் என்பதால் அங்கு தீப்பெட்டி போன்ற பொருள்கள் தடைசெய்யப் பட்டுள்ளன. இன்னும் ஏறி மலைத்தொடர்களூடே பயணித்தால் 75 கி.மீ. தூரத்தில் மூணாறு வந்துவிடும்.

சவுக்குத் தோப்பில் காலாற நடந்து செல்வது இனிய அனுபவம். காற்றில் கலந்திருக்கும் குளிரும், பல்வேறு செடிகளின் மணமும் மனதை லேசாக்கிவிடும். மஸ்கட்டில் எங்கு உயர்ந்த மரங்களெல்லாம்? இளைய மகள் துர்காவுக்கு இம்மரங்களின் உயரம் பிரமிப்பைத் தர, அண்ணாந்து திகைப்புடன் பார்த்துக்கொண்டே இருந்தாள். அப்போது ஹேண்டிகாமிலேயே எடுத்த படம் இது.


ஒரு வேளை ஆகாயத்திலிருந்து உம்மாச்சி வருகிறாரா என்று பார்த்தாளோ என்னவோ?

***

8 comments:

இராமநாதன் said...

சுந்தர்,
ஆஹா.. கொடைக்கானல் இத்தன தடவ போயிருக்கேன். பேரிஜாமிற்கு போனதில்ல. ஒரு தடவ போலாம்னு அனுமதி கேட்டப்போ கே.ஆர். நாராயணன் வந்திருக்கிறதுனால அனுமதி கிடையாதுன்னு சொல்லிட்டாங்க. :(

குணா கேவ்ஸ் இந்த தடவை போனப்போ மூடிட்டாங்க. pine forest ல படம் எடுத்திருக்கீங்க. பக்கத்தில இருக்கிற Moier's Pt (பில்லர் ராக்ஸின் பின்பக்கம் தெரியும்) பாத்தீங்களா? அட்டகாசமான இடம்.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//குணா கேவ்ஸ் இந்த தடவை போனப்போ மூடிட்டாங்க. pine forest ல படம் எடுத்திருக்கீங்க. பக்கத்தில இருக்கிற Moier's Pt (பில்லர் ராக்ஸின் பின்பக்கம் தெரியும்) பாத்தீங்களா? அட்டகாசமான இடம்.
//

இராம்ஸ்,

குணா படம் வெளியாறதுக்கு முன்னாலயே அந்தக் குகைகளுக்கெல்லாம் போய் நல்லா லூட்டியடிச்சோம். இப்போ வேலி போட்ருந்தாலும், இன்னும் மக்கள்ஸ் தாண்டி குதிச்சி போயிக்கிட்டுதான் இருக்காங்க. வலதுபக்கம் மேல ஏறிப்போனா அதல பாதாளம் - அப்படியே சரிவுல இன்னொரு குகையும் இருக்கு (சமாதிக்குப் பின்னாடி தெரியற பெரிய பாறைக்குப் பின்னாடி). ஆனா கயிறு கட்டிக்கிட்டுத்தான் போகணும். போனோம்! :)

Moier's Pt உள்பட அங்க போகாத இடமே இல்லை. பில்லர் ராக்ஸ் உச்சில இருக்கற சிலுவை சாஞ்சு விழுந்து கிடக்கறது தெரியுமோ? போன வருஷம் போனப்போ பாத்தேன். மனசுக்கு என்னவோ கஷ்டமா இருந்துச்சு. இப்ப நிமித்தி வச்சுட்டாங்களான்னு தெரியலை.

போன தடவை போனது தவிர, மத்த ஏழு தடவைகளும் பைக்லதான் கொடைக்கானலுக்குப் போயிருக்கேன். Yezdi Roadking-ல. :) வண்டி ஸ்ரீரங்கத்துல நிக்குது! I miss its beats!

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

இன்னொரு விஷயம். குணா குகைகளோட நிஜப் பேரு Devil's Kitchen!!!

கொடைக்கானல் said...

அப்பாடா, ஒருவித 'nativity feeling' மனதுள். எவ்வளவு முறை சென்றுவந்த இடம். உங்களது மெர்க்குரிப் பூக்களில் 'கொடைக்கான'லை விட்டுவிடுவீர்களோ என்று நினைத்திருந்தேன். நல்ல வேளை, பிழைத்துக் கொண்டீர்கள். இருந்தாலும், மெர்க்குரிப் பூக்களில், குறிஞ்சி மலர் பற்றியும் குறிஞ்சி நாதர் கோயில் பற்றியும் ஒரு குறிப்பும் இல்லையே?

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//குறிஞ்சி மலர் பற்றியும் குறிஞ்சி நாதர் கோயில் பற்றியும் ஒரு குறிப்பும் இல்லையே? //

மதுரைல இருந்துக்கிட்டு கோயிலுக்காக யாராச்சும் கொடைக்கானல் போவாங்களா? :) Just kidding!

போயிருக்கேன். மலர்களையும் பார்த்திருக்கேன். சில புகைப்படங்கள் மஸ்கட்லயே மாட்டிக்கிட்டு இருக்கு. என் நண்பன்கிட்ட சொல்லி வலையேத்த கேட்ருக்கேன். வந்ததும் மெர்க்குரிப் பூக்கள் இன்னும் மலரும்!

நன்றி.

கொடைக்கானல் said...

மலையில் மலரும் குறிஞ்சி, உங்கள் மெர்க்குரிப் பூக்களில் மலர இருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி.
அது சரி,கோயிலுக்கு என்றால், மதுரைக்குத்தான் போகனுமா என்ன?

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//கோயிலுக்கு என்றால், மதுரைக்குத்தான் போகனுமா //

அப்படி இல்லை. மதுரைக்கு இன்னொரு பெயர் 'கோயில் நகரம்'. அப்படி இருக்கும்போது, மதுரைல இருக்கறவங்க, கோயில் பாக்கறதுக்காக கோடைக்கானலுக்குப் போகவேண்டியதில்லைன்னு சொல்ல வந்தேன். :)

கொடைக்கானல் said...

நானும் கொடைக்கானலின் குறிஞ்சி(மலரை)யைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன். தமிழ் இலக்கியப்படி, குறிஞ்சியின்(மலையும் மலை சார்ந்த இடமும்) மறுபெயர் 'முருகரல்லவா'?அதனால்தான், குறிஞ்சிநாதரைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன்.