Wednesday, November 02, 2005

மெர்க்குரிப் பூக்கள்-16 - ஜவாவி மசூதி

'வீட்டில் எலி; வெளியே புலி' என்ற வழக்கு எல்லாருக்கும் தெரியும். எனது மெர்க்குரியைப் பொருத்தவரை அது 'இருட்டில் எலி; வெயிலில் புலி'. ஆமாம். பகல் வெளிச்சத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் பார்க்கும்படியாக விழும். ஆனால் இரவில் எடுத்தால் அவ்வளவுதான். ஏதோ பெயருக்கு ப்ளாஷ் ஒன்று இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு இரவில் எந்தப் படத்தை எடுத்தாலும் பேய் போல புகையாக என்னவோ தெரியும். படம் எடுப்பதை விடுங்கள். சும்மா View Finder / LCD வழியாகப் பார்த்தாலும் பூச்சி பூச்சியாகத்தான் தெரியும். ஆதலால் இரவு நேரத்தில் நான் புகைப்படம் எடுக்கவே மாட்டேன்.

அல் க்வைர்-ரில் (Al Khuwair) இருக்கும் பனிச்சறுக்கு உள்ளரங்கத்திற்கு (Ice Skating Ring) வாரயிறுதியில் குழந்தைகளை வேடிக்கை காட்ட அழைத்துச் செல்வதுண்டு. பனி உறைந்த தளத்தில் பயிற்சி பெற்றவர்கள் சறுக்குக் காலணியை அணிந்து கொண்டு அழகாகச் சறுக்கிவிளையாடுவதை வேடிக்கை பார்க்கவும் நல்ல கூட்டம் கூடும். அவ்வரங்கத்திற்கு அடுத்ததாக இருப்பது ஜவாவி மசூதி (Zawawi Mosque). மிக அழகாகக் கட்டப்பட்ட மசூதி இது. ஒரு மாலை வேளையில் பனிச்சறுக்கை வேடிக்கை பார்த்துவிட்டு வெளியில் வரும்போது நன்றாக இருட்டியிருந்தது. மசூதி விளக்கு வெளிச்சத்தில் அவ்வளவு அழகாக இருக்க, வருவது வரட்டும் என்று ப்ளாஷை உபயோகிக்காமல் ஆடாது அசையாது நின்று படம் எடுத்தேன். வீட்டுக்கு வந்து கணிணியில் இறக்கிப் பார்த்தால் ஆச்சரியம். மோசமாக இல்லாமல் நன்றாகவே இருந்தது. இது எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று.
பகல் நேரத்தில் இது எப்படிக் காட்சியளிக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம் (நான் எடுத்த படம் அல்ல!)

இன்னொரு விஷயம். மேலே இருக்கும் படத்தில் மசூதிக்கும் அடுத்ததாக இடது புறம் தெரியும் அடுக்குமாடிக் குடியிருப்புக்கும் இடையே சற்று சிறியதாகத் தெரியும் பழுப்புநிறக் கட்டிடமே பனிச்சறுக்கு உள்ளரங்கம் இருக்கும் இடம்.

இரண்டு படங்களும் ஒரே கோணத்தில் எடுக்கப்பட்டதாகத் தோன்றினாலும், நான் இரவில் எடுத்த படம் உள்ளரங்கத்தின் வாசலிலிருந்து எடுத்தது. பகல் நேரப் படம் வலது பக்கத்தில் இருந்த எடுக்கப் பட்டிருக்கிறது.!!! மசூதிக்கு அப்பால் சற்று வெற்றிடமாக இருப்பதால் எந்தக் கட்டிடத்தின் விளக்குகளும் இரவுப் படத்தில் இல்லை. அவ்வெற்றிடத்திலிருந்து பகல் நேரப் படம் எடுக்கப் பட்டிருப்பதால் இடது புறம் வரிசையாகக் கட்டிடங்கள் தெரிகின்றன!

No comments: