Thursday, November 17, 2005

மெர்க்குரிப் பூக்கள்-31 : ஏழு நட்சத்திர ஹோட்டல்!
பின்னணியில் நிர்மலமான நீலவானத்துடன் கம்பீரமாக நிமிர்ந்து காற்றில் படபடக்கும் ராட்சத பாய்மரத்தைப் போல கடலுக்குள் நிற்கிறது புர்ஜ்-அல்-அராப் (Burj Al Arab) எனப்படும் ஏழு நட்சத்திர ஹோட்டல். 321 மீட்டர் உயரம்! கரையிலிருந்து 280 மீட்டர் கடலுக்குள் தீவு ஒன்றை அமைத்து அதன் மீது எழுப்பியிருக்கிறார்கள். கரையையும் தீவையும் இணைத்து பாலமொன்றும் அமைத்திருக்கிறார்கள். உயரத்தைப் போலவே ஆடம்பரத்தின் உச்சமாகவும் துபாயின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.

மேலே அர்ச்சனைத்தட்டு வடிவில் இருப்பது ஹெலிகாப்டருக்கான இறங்குதளம் (Helipad). மாலை மயங்கியதும் வண்ண ஒளி விளக்குகள் இதன் மீது பிரதிபலிப்பதும் உச்சியில் இடிதாங்கியின் சிவப்புக் கண்சிமிட்டலும் அற்புதமான காட்சி. நகர மையத்தில் அமைதிருந்தால் கூட இந்த அளவு ஈர்க்குமா என்று தெரியவில்லை. கடலுக்குள் அசையாது நிற்கும் பிரும்மாண்ட பாய்மரப் படகைப் போல இது நிற்பது பார்ப்பவர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்துகிறது.

மிகவும் சல்லிசாக ஒரு நாளைக்கு ரூ. 1,75,000 மட்டுமே வாங்குகிறார்கள்! நமக்கெல்லாம் ரெண்டு சாய்ஸ்! கோயிலில் இலவச தரிசனக் க்யூவைப் போன்று தூரத்தில் நின்று தரிசித்துவிட்டு கன்னத்தில் போட்டுக்கொள்ளலாம். இல்லாவிட்டால் கொஞ்சம் கெத்தாக 100 திர்ஹாம் (ரூ.1250) கொடுத்துவிட்டு பாலத்தின் வழியாக ஹோட்டலின் பிரம்மாண்ட வரவேற்பறைக்குச் சென்று சுற்றிப் பார்த்துவிட்டு, நான்கைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு திரும்பலாம். ஒரு நாளாவது தங்குவதென்றால் நம்மூர் அரசியல்வாதிகளாக இருக்கவேண்டும். அதற்கு அடுத்த ஜென்மத்திலாவது கொடுப்பினை இருக்கிறதா என்று பார்க்கலாம்!

Disclaimer:

தருமியாகிய எனக்கு கூகுள் மண்டபத்தில் சிவபெருமான் பணக்காரப் புலவராக மாறுவேடத்தில் வந்து கொடுத்ததில் இரண்டு படங்களை ஒரு 'இது'க்காக அப்படியே கீழே கொடுத்திருக்கிறேன்.

பெரிசாப் பாக்க..

பெரிசாப் பாக்க..

இதற்கும் எனது அப்பாவி மெர்க்குரி கேமராவுக்கும் யாதொரு சம்பந்தமுமில்லையென்பதை இச்சபைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2 comments:

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

சுந்தர் படங்கள் அருமை. இந்த மாதிரி ஹோட்டல் எல்லாம் நமக்கு பார்த்தாலே போதும். தங்குறதப் பத்தி எல்லாம் சிந்திக்கிறதே இல்லை :-)))

அப்டிப்போடு... said...

கல்வெட்டு சொல்றதுதான்., அவர் சொலறது எல்லாமே கல்வெட்டு மாதிரிதான் உறுதியா இருக்கு. வழக்கம் போல படங்கள் அருமை சுந்தர்.