Monday, November 21, 2005

மெர்க்குரிப் பூக்கள்-32 : அமீரகம் - துபாய்

கடும் சட்டதிட்டங்களுக்குட்பட்ட வளைகுடா நாடுகளின் பாலைவனச் சோலையாய் இருப்பது துபாய். எந்தவொரு வளர்ச்சியடைந்த நாட்டிற்கும் சவால் விடும் வகையில் உள்கட்டுமானம், தொழில்துறை வளர்ச்சி என்று அனைத்துத் துறைகளிலும் பிரம்மாண்டமாக வளர்ந்து சிங்கப்பூருக்கும் பலவகைகளில் கடும் சவாலைக் கொடுத்துவரும் துபாய் ஓர் ஆச்சரியமான நாடு.

பெரிதாக்கிப் பார்க்க

துபாய் போயிருக்கிறேன் என்று சொல்லிவிட்டு மக்தூம் பாலத்தையும் ஷேக் சயீத் சாலையையும் தெரியாது என்று யாராவது சொன்னால் அவர்கள் 'மகாத்மா காந்தி தெரு, துபாய் பஸ் ஸ்டாண்டு, துபாய் குறுக்குச் சந்து, துபாய்' முகவரிப் பார்ட்டிகள் என்று உறுதி செய்து கொள்ளலாம்.

பெரிதாக்கிப் பார்க்க

ஆயிரக்கணக்கான வாகனங்கள் மக்தூம் பாலத்தை தினமும் கடந்து செல்கின்றன. ஷேக் சயீத் சாலை எனப்படும் நெடுஞ்சாலையில் லட்சக் கணக்கில் பயணிக்கிறார்கள். ஒர்ர்ர்ரே ரோடில் போய்க் கொண்டேயிருந்தால் அபுதாபிக்குப் போய் விடலாம்.


பெரிதாக்கிப் பார்க்க

இருபுறமும் வானுயரக் கட்டிடங்கள். இங்கேதான் உலகிலேயே உயரமான கட்டிடத்தை நிர்மாணிக்கப் போகிறார்கள். துபாயில் அடைசல் தாங்க முடியவில்லை என்று துபாய் மரீனாவை நிர்மாணித்து கூட்டத்தைப் பிரித்திருக்கிறார்கள்.

பெரிதாக்கிப் பார்க்க

தகவல்தொழில்நுட்பத் துறையின் மையமாக துபாய் இணைய நகரம் (Dubai Internet City), பக்கத்திலேயே சாத்தான்குளம்.. ஸாரி.. துபாய் ஊடக நகரம் (Dubai Media City) (ஆசிப் அண்ணாச்சி இங்கனதான் வேல பாக்குறாரு) என்று பளிங்காக அமைத்திருக்கிறார்கள்.

சாலைகளில் வாகனங்கள் பூப்போல ரொங்கிக்கொண்டே செல்ல முடிகிறது. எல்லையில்லா விரிவாக்கம் போல நகரை விரித்துப் பரத்திக்கொண்டே போகிறார்கள். எண்ணையை மட்டுமே நம்பியிருந்த பொருளாதாரத்தை மற்ற துறைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தியதன் மூலம் வெற்றிகரமாக பரவலாக்கியிருக்கிறார்கள். வேண்டுமெனில் அபுதாபியிலிருந்து குழாய் மூலம் எடுத்துக்கொள்வார்கள். எண்ணையை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது என்று மற்ற வளைகுடா நாடுகள் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகின்றன. துபாய் அவற்றிற்கு முன்மாதிரி!

பெரிதாக்கிப் பார்க்க

துபாய்க்கு அடுத்தபடியாக சுதந்திரமான வாழ்க்கைக்கு பஹ்ரைனைச் சொல்கிறார்கள். பக்கத்திலிருக்கும் செளதியிலிருந்து வாரயிறுதியில் ஆயிரக்கணக்கான செளதிகள் பஹ்ரைனுக்கு வந்துவிட்டுச் செல்வார்கள் என்று கேள்விப் பட்டேன்.

ஆயிரம் பொற்காசுகளோடு சென்றாலும் ஐந்து நிமிடத்தில் துபாயில் கரைந்துவிடும். ஏராளமான பிரம்மாண்டமான ஷாப்பிங் மால்-கள். ஷாப்பிங் செய்துகொண்டே இருக்கும் அழகான மாதுகள்.

துபாய் பன்னாட்டு விமான நிலையத்தை விரிவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் தொகையைவிட பத்து மடங்கு அளவிற்கு பிரயாணிகள் வந்து போகிறார்கள் ஆண்டுதோறும். பிரம்மாண்டமான வணிக வளாகத்தில் பளபள கடைகள் - வரியில்லாத விற்பனை என்பதால் மக்கள் நிறைய பொருள்கள் வாங்கிச் செல்கிறார்கள். மின்னணு சாதனங்களுக்கு துபாய் பிரசித்தம். சந்தைக்கு வரும் நவீனங்கள் எல்லாம் நல்ல விலையில் கிடைக்கும். ஐந்து வருடங்களில் துபாய் விமான நிலையத்தின் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்கூடாகக் கண்டு வியந்திருக்கிறேன்.

சாலைகளில் இடையறாது ஓடும் வாகனங்கள். இரவு பதினொரு மணிக்குக் கூட போக்குவரத்து ஜாம் ஜாம் என்று ஆங்காங்கே ஜாமாகிக் கிடக்கும். சும்மாவே வண்டியை ஓட்டிக்கொண்டே இருப்பார்கள் போல. வீட்டு வாடகையும் உச்சத்திற்குப் பறக்க அதற்கு ஈடுகொடுக்கமுடியாமல் ஷார்ஜாவுக்குத் தொடர்ந்து இடப்பெயர்ச்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். இப்போது ஷார்ஜாவிலும் வாடகை உயர்ந்துவிட்டது. துபாய்-ஷார்ஜா சாலையில் போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் பெற்றது. ஷார்ஜாவில் வசித்துக்கொண்டு துபாய்க்கு வந்துபோய் வேலை செய்பவர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்.

ஷார்ஜாவில் வசித்தால் விட்டுவிடுவோமா என்று துபாய் ஷார்ஜா சாலைகளில் சுங்க வாசல்களை அமைத்து போகும் வரும் வாகனங்களுக்கு நுழைவுத்தீர்வை வசூலிக்கத் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் துபாய்-ஷார்ஜா சாலையில் பறக்கின்றன. இன்னும் இரண்டு மூன்று வழித்தடங்களிலிருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக அவற்றை மூடி வைத்திருக்கிறார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள். ஆக பிரதான சாலை ஒன்றேதான். மக்கள் ஆறுமணிக்கெல்லாம் சோற்று மூட்டையைக் கட்டிக்கொண்டு ஷார்ஜாவிலிருந்து கிளம்பிவிடுகிறார்கள். மற்ற எல்லா இடங்களிலும் மணிக்கு 100 அல்லது 120 கி.மீ. வேகத்தில் பறக்கமுடிகிறபோது வெறும் 27 கி.மீ. தூரத்தைக் கடக்க இங்கே 1-2 மணி நேரமாகிவிடுகிறது.

முன்பு சாலை வழியாக மஸ்கட்டிலிருந்து துபாய் செல்வதற்கு மஸ்கட்டில் ஒரு சாலைப் பயண அனுமதிச் சீட்டு (Road Permit) வாங்கிக்கொண்டால் போதுமானது - $13 செலவில். ஓமானையும் ஐக்கிய அரபு நாடுகளையும் பிரிக்கும் ஹத்தா எல்லையில் (Hattah Border) அனுமதிச்சீட்டையும் கடவுச் சீட்டையும் காண்பித்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கலாம். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹத்தாவைத்தாண்டியதும் இன்னொரு சோதனைச் சாவடியை ஐக்கிய அரபு நாடுகள் சார்பாகத் திறந்து ஓமானிலிருந்து வரும் ஒவ்வொரு பயணிக்கும் நுழைவுச்சீட்டு (Visa) வாங்குவதைக் கட்டாயமாக்கியிருக்கிறார்கள் - $26 செலவில்! இதுதான் சாக்கு என்று ஓமான் அரசு எல்லையைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வாகனத்திற்கும் வரியாக $6 வசூலிக்கத் தொடங்கினார்கள். ஆக, வருமானம் வர வாய்ப்பிருக்கும் எதையும் விட்டு வைக்காமலிருக்கிறார்கள்.

அவர்களுக்கும் வேறு வழியில்லையே.

No comments: