Friday, November 11, 2005

மெர்க்குரிப் பூக்கள்-24 : இதுவும் Breath-taking காட்சிகள்.. ஆனால்..

பெய்ரூட் கார்னிஷ்ஷின் மெய்மறக்கச் செய்யும் காட்சிகளைச் சென்ற பதிவில் பார்த்தோம். இந்தப் பதிவு எதிர்மறையானது.

வன்முறை, கொலை, கொள்ளை, துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு என்று அனுதினமும் செய்திகளை ஊடகங்களின் வாயிலாகக் கேட்டும், பார்த்தும், படித்தும் வருகிறோம். நம்மில் எத்தனை பேர் ஒரு நிஜத் துப்பாக்கியைக் கையில் எடுத்துப் பார்த்திருப்போம்? (என்சிசி பயிற்சியின் ரைபிள்களெல்லாம் இதில் சேர்த்தியில்லை). எத்தனை பேர் துப்பாக்கிச் சூட்டைப் பார்த்திருப்போம்?

லெபனானின் நடந்த நீண்ட கால உள்நாட்டுப்போர் பற்றி நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்கக் கூடும். 1975-இல் தொடங்கித் தீவிரமாக நடந்த உள்நாட்டுப் போரை கட்டுப்படுத்தி நிறுத்துவதற்காக சிரியா தனது ராணுவத்தை 1976-இல் அனுப்பியது. போர் முற்றிலுமாக நின்றது எப்போது தெரியுமா? 1990-இல். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்ததும் சிரிய ராணுவத்தினர் திரும்பிவிடவில்லை. அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் சிரியா லெபனானை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சிரியா கிட்டத்தட்ட 40,000 வீரர்களை அங்கேயே நிலைநிறுத்தியிருந்தது.

ஈராக் ஆக்கிரமிப்புப் போரில் பெரியண்ணனுக்குப் பெருந்தலைவலியாக இருப்பது சிரியா, லெபனான் மூலமாக ஈராக்கில் ஊடுருவும் போராளிகள்தான். பாலஸ்தீனத்திற்கும் தொடர்ச்சியாகக் கொடுத்துவரும் ஆதரவினால் சிரியா மீது பெரியண்ணனுக்கு ஒரு கண் இருந்துகொண்டே இருப்பது எல்லாருக்கும் தெரியும். ஐ.நா. மூலமாகத் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்தும், சிரியாவுக்கு எதிர்ப்பு நிலை எடுத்திருக்கும் லெபனானிகளை வேண்டப்பட்டத் தலைவர்களைக் கொண்டு தூண்டிவிட்டு எதிர்ப்புப் பேரணிகள் நடத்தியும் வந்த பெரியண்ணனுக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் லெபனானின் முன்னாள் பிரதமர் ரபீக் ஹரிரி (Rafik Hariri) பெய்ரூட்டில் படுகொலை செய்யப்பட்டது சரியான வாய்ப்பாக அமைந்துவிட்டது. சிரிய எதிர்ப்பு அணியினர் போராட்டங்களைத் தீவிரப் படுத்த, ஐ.நா. நெருக்கடியை மேலும் அதிகரிக்க வேறு வழியில்லாமல் தனது படையினர் முழுவதையும் சிரியா இந்த ஆண்டு மத்தியில் திரும்பப் பெற்றுக்கொண்டு விட்டது. அவர்கள் லெபனானில் இருந்தது 29 வருடங்கள்!

லெபனான் 1926 வரை சிரியாவின் அங்கமாக இருந்தது தெரியுமோ?

கிட்டத்தட்ட 60% முஸ்லீம்களும் 40% கிறிஸ்துவர்களும் வாழும் நாடு லெபனான். உள்நாட்டுப்போரில் இரண்டு மதத்தவர்களுக்கும் கடுமையான மோதல்கள் ஆங்காங்கே. முந்தைய பதிவில் குறிப்பிட்ட நண்பன் ராயித் தோமா அப்போது 12 வயதுச் சிறுவன். அவன் கிறிஸ்துவ மதம். "இயந்திரத் துப்பாக்கிகளின் குண்டு மழையில் வளர்ந்தேன்" என்றான்.

"எதிர் குடியிருப்பிலிருந்து அவர்கள் சுட, நான் என் தந்தையின் பின்னே ஒளிந்திருப்பேன். எங்களவர்கள் இங்கிருந்து தொடர்ந்து சுடுவார்கள். யார் கை ஓங்கும் என்று கணிக்கவே முடியாது. அவ்வப்போது 'ஏசுவே' என்றும் 'அல்லா' என்றும் அலறல்களைத் தொடர்ந்து தொப் தொப்பென்று மனிதர்கள் கீழே விழும் சத்தம் கேட்கும். சடசடவென்று துப்பாக்கிகள் குண்டு மழை பொழியும். முதலில் பயமாக இருந்தாலும் சில நாள்களில் பழகிவிட்டது. ஆனாலும் அந்தச் சடசட சத்தம் கேட்கும்போதும், வெகு அருகில் சுவர்கள் துளைக்கப்பட்டுச் சிதறும்போதும், கொட்டும் ரத்தத்தையும் சடலங்களையும் பார்க்கும்போதும் இதயத்தை யாரோ பிடுங்குவது போலிருக்கும்" என்று நிலைகுத்திய கண்களோடு அவன் சொன்ன போது - அவனைப் போல ஆயிரக்கணக்கான குழந்தைகளும் சிறுவர்களும் மனரீதியாக அடைந்திருக்கும் பாதிப்பை ஓரளவு உணரமுடிந்தது.


மசூதிகள் நிறைந்த முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியும், தேவாலயங்கள் நிறைந்த கிறிஸ்துவ பகுதியும் பெய்ரூட்டில் பயணிக்கையில் மாறி மாறி வருகின்றன. காற்றிலேயே ஒருவித இறுக்கம் கலந்திருப்பது போன்ற பிரமை.

"போர் முடிந்துவிட்டாலும் பகை நீறு பூத்த நெருப்புதான்" என்றான் ராயித்.

உள்நாட்டுப் போரின் மிச்சங்களைப் பார்த்த போது திகிலாக இருந்தது.

கோலம்போட வைத்த புள்ளிகள் வைத்தாற்போல, சுவர்களில் இயந்திரத் துப்பாக்கிகள் சல்லடையாகத் துளைத்துப் போட்ட குண்டுத் துளைகளை வருடியபோது என் கைகள் நடுங்கின. இதயம் கனத்தது.
இன்னும் வரும்...

10 comments:

Thangamani said...

பெய்ரூத் என்றால் எனக்கு நினைவுக்கு வருசது கலில்ஜிப்ரன் தான். உங்கள் பதிவும் படங்களும் அருமை.

அப்டிப்போடு... said...

//நம்மில் எத்தனை பேர் ஒரு நிஜத் துப்பாக்கியைக் கையில் எடுத்துப் பார்த்திருப்போம்? (என்சிசி பயிற்சியின் ரைபிள்களெல்லாம் இதில் சேர்த்தியில்லை). எத்தனை பேர் துப்பாக்கிச் சூட்டைப் பார்த்திருப்போம்?//

நான் கையில் எடுத்துப் பார்த்திருக்கிறேன்., துடைத்திருக்கிறேன். துப்பாக்கி சுடும் போது பல முறை பார்த்திருக்கிறேன். கொக்கு, புறாக்கள் சுடும் போது சாமி. சிறிய வயதில் பழக (சுடத்தான்) ஆரம்பித்து அதன் பின்புற இழுவிசையால் ஏற்பட்ட காயத்தால் இதைப் பழகவே வேண்டாம் என விட்டுவிட்டேன். படங்கள் அருமை. நன்றி.

அப்டிப்போடு... said...

சுந்தர், நட்சத்திரங்களை இணையுங்கள். மேலும் பல பேர் இத் தளத்தைப் பற்றி அறிய அது உதவும்.

கொடைக்கானல் said...

உண்மையில் கனத்தது இதயம். உரிய தங்களது உழைப்பின் மெர்க்குரிப் பூக்கள் நிதமும் அதிக பொலிவடைந்து செல்வது மிகவும் வரவேற்கத் தக்கது. பாரட்டுக்கள் மிக.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//நட்சத்திரங்களை இணையுங்கள். மேலும் பல பேர் இத் தளத்தைப் பற்றி அறிய அது உதவும். //

பின்னூட்டங்களுக்கு நன்றிகள்.

அப்டிப்போடு ஸார். நட்சத்திரங்களை இணைத்துவிட்டேன். ஆலோசனைக்கு நன்றிகள்.

அன்புடன்
சுந்தர்.

அப்டிப்போடு... said...

சுந்தர் ஸார், நான் ஸார் இல்ல ஸார்., மோடம்...ச்... மேடம்.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//நான் ஸார் இல்ல ஸார்., மோடம்...ச்... மேடம்//

அய்யோ. ஸாரி மேடம். துப்பாக்கில்லாம் எடுத்துச் சுட்டிருக்கீங்கன்னதும் ஆண்னு நெனச்சுட்டேன். :((

நன்றி.

அப்டிப்போடு... said...

பெண் என்பதை சுட்டவே மேடம் என்று சொன்னேன்., நீங்க ஸார்னு சொல்லிருந்திங்களா.... அதற்கு எதிர்பதம். அதுசரி.!, பெண்கள் துப்பாக்கி தொடக் கூடாதா?

அப்டிப்போடு... said...

அப்புறம் இன்னொன்னுங்க... பெரியண்ணன் கால் வைத்த இடமெல்லாம்(நாடெல்லாம்) வாழ்ந்து கெட்ட வீடு மாதிரித்தான் தெரியும். காடைசிப் படம் ஏகப் பட்ட கதை சொல்கிறது.

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

//அதுசரி.!, பெண்கள் துப்பாக்கி தொடக் கூடாதா?//

சே. அப்படி நான் சொல்வேனா? வன்முறைக் களங்களான பல நாடுகளில் வாழும் மக்கள் நாளும் பொழுதும் வெடிகுண்டு துப்பாக்கிச் சத்தம் போன்ற வன்முறைச் சூழலில் வளர்ந்து எல்லாம் பழகிப் போயிருக்கும். துப்பாக்கிக் கலாசாரம் பரவாத தமிழக சூழ்நிலையில் இருக்கும் என் போன்றவர்களுக்கு துப்பாக்கி என்பதே ஒரு அந்நியப் பொருள். ஆதலால் பெரும்பாலானோருக்கு அதில் பரிச்சயம் இல்லை என்பதே நான் சொல்ல வந்தது. துப்பாக்கித் தூக்கிய, தூக்கும் எத்தனையோ பெண்களைப் பற்றி அறிந்துள்ளேன். கிரண்பேடியிலிருந்து தெருவோரத்தில் ஊர்வலத்திற்குப் பாதுகாப்பு கொடுக்கும் தமிழக பெண்காவலர்கள் வரை.

//வாழ்ந்து கெட்ட வீடு மாதிரித்தான் தெரியும். //

ஆமாம் மரம் (உங்கள் வலைப்பதிவுப் பின்னூட்டங்களில் எல்லாரும் உங்களை மரம் என்று குறிப்பிடுகிறார்கள். ஏனென்று என் மரமண்டைக்குப் புரியவில்லை. நானும் மரம் என்றே உங்களைக் குறிப்பிடுவதில் தவறில்லையே?)

//காடைசிப் படம் ஏகப் பட்ட கதை சொல்கிறது. //

வீட்டைத் தாங்கும் தூண்களான ஆண்களையும் பெண்களையும் போரில் இழந்து தவிக்கும் குடும்பங்களைப் பற்றிக் குறிப்புணர்த்துவதாக, அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் தூணுடனான படங்கள் (கடைசிக்கு முந்தைய படங்கள்) எனக்குத் தோன்றுகின்றன.

நன்றிகள்.